
மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சட்டப் பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த வைத்திலிங்கம், தமாகாவில் இருந்து அதிமுகவில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்க வேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ்பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேர் உட்பட நாடு முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 24ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாகடி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தில் வெற்ற பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது திமுக கூட்டணிக்கு 98 எம்எல்ஏக்கள் இருப்பதால் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையில் திமுகவின் பலம் குறையாமல் 4 ஆகவே இருக்கும்.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் த.மா.கா.வில் இருந்து தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் இவர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.

No comments:
Post a Comment