Monetize Your Website or Blog

Thursday, 26 May 2016

பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம்;அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!


சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வை சமீப காலங்களாக அதிக அளவில் பெற்று வருகிறோம்.கூடவே, அடிக்கடி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும்,  புவி வெப்பமயமாதலுக்கு முழு முதற்காரணமாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.



தமிழகத்தில் சமூக அக்கறையுள்ள சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயல்களை செய்து வந்தாலும், சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் அரசு இயந்திரத்தால் குவிக்கப்பட்டு வரும் குப்பை மேடுகளே நாம் சுற்றுசூழலில் எவ்வளவு 'அக்கறை' கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சி. இந்த அவலங்களை களைய அரசே முயற்சி எடுத்தால் எப்படியிருக்கும்..?

சிக்கிம் மாநில அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக அப்படி ஒரு அதிரடியை செய்திருக்கிறது. ஆம்
அரசு மற்றும் அரசு சார்ந்த எந்த விழாக்களிலும் மினரல் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது என அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. நுரையூட்டப்பெற்ற பானங்கள் அடங்கிய பாட்டில்களுக்கும் அந்த தடையை  விதித்திருக்கிறது. அரசின் இந்த உத்தரவை சிக்கிம் மாநில மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இதனால், எதிர்காலத்தில் குப்பைக்கூளங்கள் குறைக்கப்பட்டு சுகாதாரம் பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பாட்டில்களுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், வேறு எந்தெந்த விதமாக தேவையில்லாத கழிவுகளை அகற்றுவது என்பது குறித்தும் சுகாதாரத் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.



குப்பைக்கூளங்கள் பஜார்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிக்கிம் அரசு, பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களில் இருந்து நாம் அன்றாட தேவைக்கான, ஸ்பூன், பிளேட்ஸ், கண்டெயினர்கள் போன்ற பொருட்களையும் உடனடியாக தயாரிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரேம் தாஸ் ராய், கேபினெட் மீட்டிங்கில் கூறுகையில், ''நாம் தான் இந்தியாவிலேயே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் முன்னோடி மாநிலமாக திகழப் போகிறோம். வெளிநாடுகளில் இருந்து மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள்தான் சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்துகிறது. இதற்கும் தடைவிதிக்க உத்தரவிட்டுள்ளோம்.''  என்றார்.

சிக்கிம் மாநிலத்தின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் அடுத்தடுத்த மாநிலங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்.....?




No comments:

Post a Comment