Monetize Your Website or Blog

Friday, 27 May 2016

ரஜினி, சுஹாசினி, ஆபாவாணன், ஆர்.கே. செல்வமணியை உருவாக்கிய கல்லூரியின் அவல நிலை!

ஜெர்மானிய நடிகை ரோமி ஒரு முறை சொன்னார், “எனக்கு சினிமாவைப் பற்றி எல்லாம் தெரியும். ஆனால், வாழ்க்கையை பற்றிதான் எதுவும் தெரியாது” என்று. ஆனால், சினிமாவை காதலிக்கும், சினிமா கனவுகளுடன் இருக்கும் தமிழ் இளைஞனுக்கு, அந்த பிரச்னை என்றும் இருந்ததில்லை. ஆம் அவர்கள் வாழ்க்கை வேறு, சினிமா வேறு என என்றும் பிரித்து பார்த்தது கிடையாது. அவன் ஆன்மாவின் ஒவ்வொரு அணுவிலும் சினிமா கலந்து இருக்கிறது. எடுக்கப்படாத ஆயிரம் சினிமாவை அவன் மனதில் சுமந்து திரிகிறான். அவனுக்கு சினிமாதான் எல்லாம். கொஞ்சம் பயிற்சியும், வாய்ப்பும் கிடைத்துவிட்டால் தமிழ் இளைஞர்கள் நிச்சயம் பல சாதனைகளை செய்வார்கள். ஆனால், அதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா...? வாய்ப்புகள் கிடைப்பது இருக்கட்டும், குறைந்தபட்சம் அவனுக்கு பயிற்சி அளிக்க, வழிநடத்த நல்ல கல்வி நிலையங்கள் இங்கு இருக்கின்றனவா...?

மூடிய இரும்புக் கதவுகளுக்கு வெளியே இளைஞர்கள்:



இருக்கிறது. சென்னையில் வீதிக்கு வீதி சினிமா பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஆனால், அதன் இரும்புக் கதவுகள் என்றும், சினிமாவை காதலிக்கும் ஒரு எளிய இளைஞனுக்கு திறக்கப்படுவதில்லை. அதன் கட்டணங்கள் பல லட்சங்களில் இருக்கின்றன. எப்போதும் போல், எல்லா துறையும் போல், ஒரு கிராமத்து இளைஞனுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, அரசாங்க கல்வி நிலையம்தான். ஆனால், இதிலும் வழக்கம் போல், பராமரிப்புமின்மையும், அலட்சியமும், அந்த கல்வி நிலையத்தை மெல்ல சிதைத்து வருகிறது. அதனுடன் சேர்ந்து இளைஞர்களின் பெருங்கனவையும்.

எம்.ஜி. ஆர் திரைப்படக் கல்லூரி, ஒரு காலத்தில் சினிமா காதலர்களின் கனவை அடைக்காத்த இடம். பல ஆளுமைகளை செதுக்கிய இடம். இப்போது, தன் ஆன்மாவை, பொலிவை இழந்து நிற்கிறது. 1944 ம் ஆண்டு, அடையாறு திரைப்படக் கல்லூரியாக துவங்கப்பட்ட இக்கல்லூரி,  1965 ம் ஆண்டு, தரமணிக்கு இடமாறியது. துவக்கத்தில் 54 ஏக்கரில் படர்ந்திருந்த இக்கல்லூரி, நகர்மயமாக்கலாலும், ஐடி நிறுவனங்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு இப்போது பத்து ஏக்கராக சுருங்கிவிட்டது.

போதுமான பேராசிரியர்கள் இல்லை:

கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் ஃபிலிம் பிராசஸிங் உள்ளிட்ட பல துறைகள் இருக்கின்றன. ஆனால், எந்த துறைக்கும் போதுமான பேராசிரியர்கள் இல்லை என்கிறார்கள் மாணவர்கள்.

இது குறித்து, தற்போது அங்கு பயிலும் ( பெயர் தெரிவிக்க விரும்பாத)  ஒரு மாணவரிடம் பேசிய போது,  “ஒவ்வொரு துறைக்கும் மொத்தம் 12 இடங்கள்தான். கஷ்டப்பட்டு, பெருங்கனவுடன் இக்கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்தபின்தான் பெரும் பிழை செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எந்த துறைக்கும் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பது மட்டுமல்ல,  இருக்கும் பேராசிரியர்களும் கல்லூரிக்கு வருவதில்லை. இங்கு வேலை செய்யும் பேராசிரியர்கள் சிலர், தனியாக திரைப்படக் கல்லூரி வைத்து இருக்கிறார்கள். அவர்கள் கவனம் முழுவதும், அதை மேம்படுத்துவதில்தான் இருக்கிறதே தவிர, இங்கு படிக்கும் மாணவர்கள் மீது அவர்களுக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை...” என்றார் வருத்தத்துடன்.

அக்கல்லூரியின் படத்தொகுப்பு துறையை சேர்ந்த முன்னாள் மாணவர் சூர்யா, “முன்பெல்லாம் இந்த கல்லூரியில் இடம்பிடிப்பதற்காக ஒரு பெரும் போட்டி நடக்கும். தமிழகத்திலிருந்து மட்டும் அல்ல, தென்னிந்தியாவிலிருந்து முழுவதுமிலிருந்துமே இக்கல்லூரியில் சேர பெரும் போட்டி நடக்கும். ஆனால், இப்போது அப்படி அல்ல... தமிழகத்திலிருந்தே போதுமான விண்ணப்பங்கள் வருவதில்லை.”

திரைப்பட நகரம் என்ன ஆனது...?
கல்லூரியில் மட்டும் அல்ல பிரச்னை, கல்லூரி வளாகத்தில் 1994 ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்.ஜி. ஆர் ஃபிலிம் சிட்டியும் இயங்குவதில்லை. துவங்கப்பட்ட காலத்தில், இந்த ஃபிலிம் சிட்டி, மிக உயிர்ப்புடன் இயங்கியது. 'மருதநாயகம்' படப்பிடிப்பும் அங்கு நடந்துள்ளது. இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தும் ஃபிலிம் சிட்டியை பார்வையிட்டுள்ளார். ஆனால், அவைகள் அனைத்தும் கொடுங்கனவாக ஆகிவிட்டன.

திரைப்பட இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர், “வெளிநாட்டில் கூட மிக சுலபமாக படப்பிடிப்பு நடத்திவிடலாம். ஆனால், தமிழகத்தில் நடத்துவது அவ்வளவு எளிதானதல்ல... பலருக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது. அது மட்டுமல்ல, இங்கு போதுமான வசதிகள் இல்லாததால், படப்பிடிப்பிற்காக பலரும் ஹைதராபாத் ஸ்டுடியோக்களுக்கே செல்கின்றனர். எம்.ஜி. ஆர் ஃபிலிம் சிட்டியை மேம்படுத்தினால், சினிமா துறையில் இயங்குபவர்களுக்கு மட்டுமல்ல... சினிமா கற்கும் மாணவர்களுக்கும், தங்கள் குறும்படங்களை எடுக்க உதவியாக இருக்கும்...”

பிற கல்வி நிறுவனங்கள் எப்படி இருக்கிறது...?


மத்திய அரசின்  தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறையின் கீழ் இரண்டு திரைப்படக் கல்லூரிகள், புனே மற்றும் கொல்கத்தாவில் இயங்குகின்றன. மற்றொன்று டெல்லியில் இயங்கும் நடிப்பு பயிற்சி பள்ளி. இவை அனைத்தும் மிகத் தரமாக உள்ளன என்கிறார்கள் அங்கு படித்த மாணவர்கள்.
கபாலி திரைப்படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றும் கிஷோர்,  கொல்கத்தா சத்யஜித்ரே திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.  அவர், “அனைத்து நவீன தொழிற்நுட்பங்களும் அங்கு இருக்கின்றன. அந்தக் கல்லூரி, சினிமாவில் இருக்கும் ஆளுமைகளோடு தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கு வந்து பாடம் எடுக்கிறார்கள். நான் படித்த  மூன்று ஆண்டு காலத்தில் இந்திய திரைத்துறையில் இருக்கும் அனைத்து சிறந்த ஒளிப்பதிவாளர்களுடனும் பணி புரிந்துவிட்டேன். அது என்னை வளர்த்தெடுக்க பேருதவியாக இருந்தது...” என்கிறார்.

ஆனால் எம்.ஜி. ஆர் திரைப்படக் கல்லூரி, அங்கு படித்து இப்போது திரைத்துறையில் கோலாச்சுபவர்களையே பயன்படுத்திக் கொள்வதில்லை.
ஒரு காலத்தில் மிக உயிர்ப்புடன் எம்.ஜி. ஆர் திரைப்படக் கல்லூரி செயல்பட்டது. அங்கு படித்த ஆபாவாணன், அரவிந்த் ராஜ் உள்ளிட்ட திரைப்படக்கல்லூரி மாணவர்கள் சேர்ந்து எடுத்த ஊமை விழிகள் படம் 80களின் பிற்பகுதியில் பெரிதாக பேசப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்பாபு, ரகுவரன், சுஹாசினி தொடங்கி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ராம்கி, அருண்பாண்டியன் என  அந்த கல்லூரியில் படித்த மாணவர்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த கல்லூரியில் படித்து வெளிவந்தவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை தவிர, வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.
திரைப்படக்கல்லூரி மாணவர்களின் சாதனை பட்டியல் தேக்கமடையாமல் இருக்க வேண்டுமென்றால், அரசாங்கம் உடனே கவனம் செலுத்தி, அக்கல்லூரிக்கு உயிரூட்ட வேண்டும் . சென்ற ஆண்டு, அப்போதைய செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கல்லூரியை மேம்படுத்த 75 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். மேலும் பட்டயப்படிப்பை பட்டப்படிப்பாக மாற்றினார். ஆனால், இது மட்டும் போது, நிரப்படாமல் இருக்கும் பேராசிரியர்களுக்கான இடங்களை நிரப்ப வேண்டும். அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களை கொண்ட ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். கல்லூரி  முழுவதுமாக நவீனமாக்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு ஐந்து முதல்வர்களை சினிமா வழங்கி இருக்கிறது. ஆனால், அதற்கு பிரதி உபகாரணமாகவாவது அவர்கள் இதை இக்கல்லூரிக்கு செய்தே ஆக வேண்டும்.




No comments:

Post a Comment