
கொங்கு மண்டலத்தையே ஒருகாலத்தில் அதிர வைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன், இப்போது மவுனமாகிவிட்டார். ' தேர்தலை எதிர்கொள்ள பணமில்லாமல் கடன் வாங்கித்தான் செலவு செய்தார்' என புலம்புகின்றனர் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் இரட்டை இலை சின்னம் பொறித்த அட்டையைக் கையில் தாங்கிக் கொண்டு நிற்பார். அவர் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தவருக்கு, கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, கார்டன் வட்டாரத்தில் இருந்து தனித்துவிடப்பட்டார். இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா.
"அவர் அமைச்சராக கொடிகட்டிப் பறந்த காலம் என்பது 91 முதல் 96-ம் ஆண்டு வரையில் மட்டும்தான். முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் என்பது அம்மாவுக்கும் தெரியும். 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அண்ணனுக்கு வேளாண்மைத் துறையை ஒதுக்கினார். அதுவும் சில மாதங்கள்தான். குடும்பப் பிரச்னையைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்துவிட்டார் அம்மா. இதற்கு முழுக் காரணமும் தம்பிதுரைதான். அம்மாவின் குட்-புக்கில் அண்ணன் இருப்பதை அவர் விரும்பவில்லை. சொல்லப் போனால் 96-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, 'செலவுக்கு என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை. நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரியும் நல்லமுறையில் இயங்கவில்லை. அந்தக் கல்லூரியும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.
இந்தமுறை வேட்பாளராக அம்மா அறிவித்தபோது, பதற்றத்தில்தான் இருந்தார் அண்ணன். ' தொண்டர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும்' என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்கள் அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தார். அவருடைய குடும்ப சொத்துக்களை உறவுக்காரர்கள் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவருக்கென்று நிலங்களும் வீடும்தான் உள்ளது. ரொக்கமாக பணம் எதுவும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும் விற்றுவிட்டார். இதை வெளியில் சொன்னால் நம்ப மாட்டார்கள். பெரும் கடன் சுமையோடு தூக்கமில்லாமல் தவித்து வருகிறார். இந்தமுறை அம்மா கைவிட மாட்டார் என நம்பிக்கையோடு இருக்கிறார்" என்கின்றனர்.
ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், 'செங்கோட்டையன் வருகிறார்' என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது கார்டனின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார்.

No comments:
Post a Comment