Monetize Your Website or Blog

Tuesday, 31 May 2016

புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்துங்கள்... அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!

தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவதற்காக புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித்துறை மற்றும் எரிசக்தி துறை (பொறுப்பு) கூடுதல் தலைமைச்செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



        

அப்போது, தமிழகத்தை மிகை மின் மாநிலமாக மாற்றுவதற்காக அனைத்து மின் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேணடும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரித்து, மிகை மின்மாநிலமாக மாற்றுவதுடன், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மாசு இல்லா மின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

ரூ.3 ஆயிரத்து 921 கோடி மதிப்பில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கம் திட்டம், ரூ.6 ஆயிரத்து 376 கோடி மதிப்பில் 3,800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல்மின்நிலையம், ரூ.12 ஆயிரத்து 778 கோடி மதிப்பில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்ள உப்பூர் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல்மின்திட்டம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து பணியை விரைவு படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



இதேபோல், உடன்குடியில் தலா 1,320 மெகாவாட் உற்பத்தி செய்யும் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, எண்ணூரில் மாற்றியமைக்கப்படும் 660 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலைய பணிகள், 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் கடலாடி அனல்மின்நிலையம், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் குந்தா நீர்மின்சார உற்பத்தி நிலையம், 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சில்லகல்லா சூப்பர் நீர்மின்சார உற்பத்தி நிலையம், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்திறன் கொண்ட மத்திய அரசு திட்டமான செய்யூர் அல்ட்ரா மெகா திட்டம் ஆகியவற்றில் பைப்-லைன் அமைக்கும் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.



No comments:

Post a Comment