
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது மீண்டும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 6 புகார்களை கூறியிருப்பதோடு, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது புகார் கூறி கடந்த 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘ரகுராம்ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல. அவர் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க தவறான வழிகளில் செயல்படுகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இப்போது, ரகுராம் ராஜன் மீது 6 புகார்கள் கூறி அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு, சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.
* ரகுராம் ராஜன் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு தீங்கு இழைத்துள்ளார். இதன் காரணமாக அவை அழிவதுடன், பல ஆயிரக்கணக்கான திறன் குறைந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.
* வட்டி விகிதத்தை உயர்த்துதல் மற்றும் அதிகமான வட்டி விகிதம், அவரது தவறான கொள்கைகள் ஆகியவை அவர் தேசவிரோத உள்நோக்கத்துடன் செயல்படுவதை காட்டுகிறது.
* ரகசியமான, பிரச்னைகளுக்கு உரிய நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை அவர் தனது சிகாகோ பல்கலைக்கழக இ-மெயில் முகவரி மூலம் பாதுகாப்பற்ற வகையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வருகிறார்.
* அரசு அதிகாரியாக இருந்தாலும் பா.ஜனதா அரசை பொது இடத்தில் இழிவுபடுத்தி வருகிறார்.
* முக்கியமான மிகவும் உயர்ந்த அரசு பதவியில் இருக்கும் அவர் தனது குடியுரிமையை (கிரீன் கார்டு) புதுப்பிக்க அமெரிக்காவுக்கு அரசு பயணமாக சென்று வருகிறார்.
* ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி ஏற்ற 2013ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோல அமெரிக்காவுக்கு சென்று குறைந்தது ஒரு நாள் அங்கு தங்கி வருகிறார்.
இப்படி புகார்களை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இதுபோன்ற காரணங்களால் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment