மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா பணத்தை கட்டி நகை வாங்கலாம் என்றதும், பல பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு நகைச் சீட்டு திட்டங்களில் சேர்ந்து விடுகிறார்கள். இந்த நகை சீட்டு திட்டங்களில் சேருவதற்கு முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.
1. நகைச் சீட்டு திட்டத்தில் மொத்தம் எத்தனை மாதங்கள் தவணை செலுத்த வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் நகைச் சீட்டு திட்டங்களை நடத்தும் பெரும்பாலான நகைக்கடைகள், ஆர்பிஐயிடம் அனுமதி எதுவும் பெறுவதில்லை. இதனால் நகைச் சீட்டு திட்டத்தில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உருவாகும். 11 மாத கால அளவில் நடத்தப்படும் நடத்தும் நகைச் சீட்டு திட்டங்கள் எதுவும் ஆர்பிஐயின் கட்டுப்பாட்டில் வராது.
2. நகைச் சீட்டு திட்டத்தில் சேருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது செய்கூலி, சேதாரம் கிடையாது என்பதுதான். ஆனால் சில நகைக் கடைகள் குறிப்பிட்ட அளவு சேதாரத்துக்குதான் விலக்கு அளிக்கிறது. அந்த அளவுக்கு மேல் உள்ள சேதாரத்துக்கு உங்களிடம்தான் பணத்தை வசூலிக்கும். அதாவது சேதாரம் அதிகபட்சம் 18% வரைதான் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும்.

3. சீட்டின் முடிவில் நீங்கள் நகை வாங்கப்போகிறீர்களா அல்லது தங்க காயின் வாங்கப்போகிறீர்களா என்பதை பார்க்க வேண்டும். காயினுக்கான அதிகபட்ச சேதாரம் 4% தான் இருக்கும். இதனால் உங்களுக்கு நஷ்டம்தான். எனவே காயின் வாங்க நினைப்பவர்கள் ஆர்டி போட்டு தேவைப்படும்போது காயின்கள் வாங்கலாம். ஆர்டி-க்கு 7-8%வரை வட்டி கிடைக்கும். இடிஎஃப் திட்டங்களிலும், கோல்டு ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்து நகை தேவைப்படும்போது யூனிட்டுகளை விற்று நகை வாங்கிக் கொள்ளலாம்.
4. நகைச்சீட்டு கால அளவு முழுவதும் உங்களால் தவணையை கட்ட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். நகைச் சீட்டு திட்டத்தை இடையில் நிறுத்தினால், நீங்கள் செலுத்திய தவணைத் தொகையை பணமாக பெற முடியாது. தங்கமாகத்தான் வாங்கமுடியும். அதுவரை செலுத்திய தவணைகளுக்கு எந்தவிதமான வட்டியும் கிடையாது.

No comments:
Post a Comment