Monetize Your Website or Blog

Thursday, 5 May 2016

அம்மா உணவகத்தில் 5 இட்லி சாப்பிட்டேன் ! சென்னை வேட்பாளரின் செலவு கணக்கு...

சென்னை வில்லிவாக்கம்  தொகுதி சட்டமன்ற சுயேச்சை வேட்பாளர்  எஸ்.கந்தசாமி. 
 டெபாசிட் பணமான 10 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக நீல துணிப்பையில் அடைத்துக் கொண்டு போய் தேர்தல் அதிகாரி முன்பு டேபிளில் வைத்து கலகலப்பூட்டிய அதே கந்தசாமி.

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகிலிருந்து தன்னுடைய பிரசாரத்தை  இன்று தொடங்கினார் , கந்தசாமி. மீன்பாடி ரிக்‌ஷாவில் உட்கார்ந்தபடி மைக்கில் பேசி வாக்கு சேகரித்தவரை தேனீர் குடிக்க ஒதுங்கிய இடைவேளையில் சந்தித்துப் பேசினேன்.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ள தொகுதி வில்லிவாக்கம். இங்கு போட்டியிடும் தி.மு.க.வின் வேட்பாளர் ரங்கநாதன் பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். உங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை ஒளி தெரிகிறதா?
அட, என்ன சார் அப்பிடி கேட்டுட்டீங்க... கடந்த மேயர் தேர்தலில் என்னை நம்பி 1800 மக்கள் வாக்களித்துள்ளனர். ஏற்கனவே நான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளேன். இந்த தேர்தலில் சென்னையில் முதல் ஆளாய் வேட்பு மனுதாக்கல் செய்த முதல் சுயேச்சை வேட்பாளரே நான்தான்.
என்ன சொல்லி வாக்கு கேட்கிறீர்கள்?
நாப்பது வயசுக்குள்ளேயே நம்மாளுங்களுக்கு சுகர் பிரசினை வந்துடுது. அவங்க சுகாதாரமான முறையில் வாக்கிங் போக  வார்டுக்கு ஒரு பார்க், யூத்துங்க, யூத்தாகவே இருக்க வார்டுக்கு ஒரு ஜிம் தேவைங்க. அதேபோல் திருட்டு, கொள்ளை, விபத்துகளை தடுக்க அனைத்து தெருவிலும் சிசிடிவி காமிரா, 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனைகள்னு பல விஷயங்களை தொகுதிக்கு கொண்டு வரமுடியும். இப்படி செய்ய முடிந்ததை மட்டுமே சொல்லி வாக்கு கேட்கிறேன்
வேட்பாளராக இதுவரையில் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்?
நான் செய்துள்ள செலவை தேர்தல் அதிகாரிகளிடம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொண்டு போய் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். அந்த கணக்கையே உங்ககிட்டேசொல்றேனே. நான் பிரசாரம் பண்ற மீன்பாடி ரிக்‌ஷாவுக்கு தின வாடகை 50 ரூபாய். இன்று முதல் கணக்கு. 9 நாள் வாடகைக்கு எடுத்திருக்கேன்.  மைக் வாடகை 10 ரூபாய். 5 ஆயிரம் பிட் நோட்டீசை  போட்டிருக்கேன். அதுக்கு 4,200 ரூபாய் ஆகியிருக்கு. என்னோடு சேர்த்து மொத்தம் நாலு பேரு. அம்மா உணவகத்தில் தயிர் ஒன்னு, சாம்பார் ஒன்னுன்னு ஆர்டர் பண்ணி  ஆளுக்கு 8 ரூபாயில் மதிய சாப்பாட்டுப் பிரச்னையை தீர்த்துக்கறோம்.

அதே போல் காலையில் அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு 5 இட்லி சாப்பிட்டுக்கறோம். டீக்கடையில் நாலு பேரும் டீ சாப்பிடற செலவு இரண்டு முறை இருக்கும். இதைத்தான் தேர்தல் அதிகாரிகளிடம் இரண்டு நாளைக்கு ஒருமுறை செலவுக் கணக்கில் கொடுத்தாகணும். இதற்கு ஏதாவது ஆடிட்டிங் (?!) கேட்டாலும் கொடுத்துடலாம், ஒன்னும் தப்பில்லே.
பிரசாரத்தை நீங்கள் மட்டுமே செய்கிறீர்களா, நண்பர்கள், ஆதரவாளர்கள் கூட வருகிறார்களா?
நானே தனியாத்தான் கிளம்பிடறேன்... நண்பர்கள் நாலு பேர்தான் என்னை பின் தொடர்ந்தே வந்துடறாங்க, என்ன பண்றது? நான் பேசிக் களைச்சுட்டா நண்பர் சாரதி எனக்காக கொஞ்ச நேரம் மைக்கில் பேசி ஓட்டு கேட்பார். அவரும் களைச்சுட்டா ஆட்டோ ஓட்டுனரா இருக்கும் கதிர்வேல் கொஞ்ச நேரம் மைக் பிடிப்பார். இவங்களும் களைச்சுட்டா மீன்பாடி ரிக்‌ஷா ஓனர் சுப்பிரமணி பேசுவார். இவங்க நான் கேட்காமலேயே என்  பிரசாரத்துக்கு உதவி பண்றவங்க. அந்த நாலு பேருக்கும் நன்றி.
வில்லிவாக்கம் தொகுதியில் உங்கள் செல்வாக்கு எப்படிப்பட்டது?
வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள குழந்தைகள், குடிகாரர்கள் போக பெண்கள், இளைஞர்கள் என பொதுமக்களில் 75 சதவீதம் பேரை எனக்குத் தெரியும். அவர்களும் என்னை அறிவார்கள். அவை அத்தனையும் எனக்கு வாக்குகளாக மாறினால், வில்லிவாக்கம் தொகுதிக்கு விமோசனம் கிடைக்கும்.

ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?
நாலு பேரு நல்லா இருக்கணும்.. அஞ்சாவதா நானும் நல்லாயிருக்கணும். இதுதான் என்னோட கான்செப்ட்.
நல்லாயிரு (வருவீ)ங்க கந்தசாமி!

No comments:

Post a Comment