Monetize Your Website or Blog

Saturday, 14 May 2016

570 கோடி ரூபாயா..? 195 கோடி ரூபாயா..? -கண்டெய்னர்களில் இருந்தது எவ்வளவு பணம்!

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்துடன் 3 கண்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த கண்டெய்னர்களில், 570 கோடி ரூபாய் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆவணங்களின் அடிப்படையில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரவு 1 மணியளவில் 3 கண்டெய்னர் லாரிகளும், அதற்கு முன்னும் பின்னும் 3 இன்னோவா கார்களும் என மொத்தம் 6 வாகனங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இதில் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி விஜயபாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள், உடனே அந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர்.

அப்போது, கண்டெய்னர்கள் முழுக்க பணம் இருப்பதாகவும், அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கண்டெய்னர் வாகனத்திலும், இன்னோவா காரிலும் ஒவ்வொரு ஆந்திர மாநில போலீசாரும் இருந்துள்ளனர். ஆனால் அந்த போலீசார், காவல்துறையின் யூனிபார்ம் அணிந்திருக்கவில்லை. ஆந்திரா மாநில எல்லைக்கு சென்ற பின் யூனிபார்ம் அணிந்து கொள்ளலாம் என அவர்கள் இருந்துள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கண்டெய்னர் லாரிகளில் மொத்தம் 570 கோடி ரூபாய் இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில், 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் இந்த பண பரிமாற்றம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கண்டெய்னர் லாரிகளுடன் வந்த ஆந்திர போலீசார் கூறுகையில், "விசாகப்பட்டினம் வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்தை தான் அதிகாரிகள் பிடித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தும் பணத்தைவிட அவர்கள் மறுக்கின்றனர். மேலும், வங்கி அதிகாரிகள் வந்து இதனை உறுதிப்படுத்திய பின் தான் விடுவோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்" என்றனர்.


இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ''அந்த மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்படவில்லை. கண்டெய்னர்கள் திறந்து சோதிக்கப்படவில்லை. அவர்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்த கண்டெய்னர்களில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது.

அவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு சாதாரணமாக எடுத்து செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள், வருமான வரித்துறையினர் ஆகியோர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். முழுமையான விசாரணைக்கு பின்னர் ஆவணங்கள் இருந்தால் பணம் விடுவிக்கப்படும்" என்றார்.



No comments:

Post a Comment