Monetize Your Website or Blog

Friday, 13 May 2016

'கவுசல்யாவைப் பார்த்தேன்... கலங்கி நின்றேன்!' -ஜி. ஆர் உருக்கம்

டுமலைப்பேட்டையில் சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா, நேற்று சாணிப்பவுடர் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது மனித உரிமை ஆர்வலர்களைப் பதற வைத்திருக்கிறது. "கணவரின் கொடூர மரணத்தின் பாதிப்பில் இருந்து அந்தப் பெண்ணால் மீளமுடியவில்லை" என்கின்றனர் சங்கரின் உறவினர்கள்.

உடுமலை நகரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் தலித் இளைஞர் சங்கர். " எங்கள் சமூகத்துப் பெண்ணை திருமணம் செய்ததால் கொன்றோம்" என கவுசல்யாவின் தந்தை உள்ளிட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை, சமூகத்தின் மனசாட்சியை பெரிதும் உலுக்கியது.
கொலை சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது மனிதஉரிமை ஆர்வலர்களும், சில அரசியல் கட்சிகளும்தான். பலரும், கவுசல்யாவின் மேற்படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தனர். இந்நிலையில், நேற்று வீட்டில் அழுத நிலையில் இருந்த கவுசல்யா, யாரும் எதிர்பாராத நேரத்தில் சாணிப்பவுடரைக் கரைத்துக் குடித்துவிட்டார். தற்போது கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நாம் சங்கரின் உறவினர் ஒருவரிடம் பேசினோம்.

"இப்போது கவுசல்யாவின் உடல்நிலை தேறி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே சங்கர் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்குச் சென்று அழுது புலம்பி இருக்கிறார். அளவுக்கு அதிகமான மனநல பாதிப்பில் இருக்கிறார். இப்போது சங்கரின் குடும்பத்துடன்தான் அவர் வசித்து வருகிறார். சங்கர் வாழ்ந்த வீட்டிலேயே இருப்பதால்தான் அவருக்கு இந்த மாதிரியான எண்ணங்கள் தோன்றுகிறது. அதிலிருந்து விடுபட வேண்டுமானால் வேறு இடத்திற்கு குடிபோவதுதான் சிறந்தது. நல்ல கவுன்சிலிங்கும் மாற்று இடமும்தான் அவருடைய இப்போதைய தேவை" என்றார்.

இந்நிலையில், இன்று மதியம் கோவை அரசு மருத்துவமனையில் கவுசல்யாவை சந்தித்துப் பேசினார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
நாம் அவரிடம் பேசினோம்.
" இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அவரை சந்தித்துப் பேச மருத்துவர்கள் எனக்கு அனுமதி அளித்தனர். அவரிடம், ' எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப இதுமாதிரியான முடிவுகளை எடுக்கக் கூடாது. நீங்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தால், உங்கள் எதிரிகள்தான் சந்தோஷப்படுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நானும் எங்கள் கட்சியும் உங்களோடு இறுதிவரையில் துணை நிற்போம். எதற்கும் கலங்க வேண்டாம்'  எனச் சொன்னேன்.
அவர் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டார். அவரது மனநிலை ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு சிறந்த கவுன்சிலிங்கை அவருக்கு அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்தேன்" என்றார் வேதனையோடு.

மீண்டு வாருங்கள் கவுசல்யா...!


No comments:

Post a Comment