
தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டபோது, ''தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்திட எண்ணேகோல்புதூரிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவருவேன்.
இந்தத் திட்டத்துக்காக, மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்து வலியுறுத்தினேன். அவர் தமிழக அரசு மூலம் கோப்புகள் அனுப்பினால் நாங்கள் திட்டத்தை நிறைவேற்றித் தருகிறோம் என்றார். ஆனால், தருமபுரி மாவட்ட நிர்வாகம் அதை பொருட்படுத்தவே இல்லை.
அதேபோல், சின்னாற்றிலிருந்து வீணாகி 3 டிஎம்சி தண்ணீர் காவிரியில் கலக்கிறது. இந்த உபரி நீரை தூள்செட்டி ஏரிக்குக் கொண்டுச் சென்று அங்கிருந்து ஜெர்தலாவ் உள்ளிட்ட ஏரிகளை இணைத்து தண்ணீர் வரத்து உருவாக்கினால், பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தத்தில் இந்த தருமபுரி மாவட்டத்தில் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால், அனைத்து நீர்ப் பாசனத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். இதை இந்த அரசு செய்ய மறுக்கிறது. வளர்ச்சித் திட்டங்களைச்க் செயல்படுத்த தயாராக உள்ளோம்.
தமிழகத்தை 50 ஆண்டு காலம் மாறி, மாறி திராவிடக் கட்சிகள் ஆண்டன. அப்போதெல்லாம், மக்கள் வளர்ச்சிக்காக எதையும் செய்யாதவர்கள் மீண்டும் வாய்ப்பைத் தாருங்கள் என்கின்றனர். கடந்த காலங்களில் வாய்ப்பளித்து மக்களுக்கு நன்மை செய்யாதவர்கள் இப்போதும் மட்டும் எப்படி செய்ய முடியும்?.
நடித்தவர்கள் தமிழகத்தை ஆண்டதும் போதும், இனி படித்தவர்கள் ஆளட்டும். அதற்காக, தமிழகத்தை ஆள எனக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். 5 ஆண்டுகள் மட்டும் எங்களுக்கு போதும். அதற்கு மேல் நான் உங்களிடத்தில் வாய்ப்பைக் கேட்க மாட்டேன். இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன்.
மக்களுக்கு இலவச பொருள்களை எதுவும் வழங்காமல், இலவசமாக கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை அளிப்பேன். வேலைவாய்ப்பை உருவாக்குவேன். அதனால், நீங்கள் மாம்பழச் சின்னத்தில் வாக்களித்து பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்" என்றார்.

No comments:
Post a Comment