Monetize Your Website or Blog

Wednesday, 18 May 2016

கன்டெய்னர் ரகசியத்தைக் காக்கும் ரிசர்வ் வங்கி! -மவுனம் கலைப்பாரா ரகுராம்ராஜன்?

திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பணம் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள், உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 'எங்களிடம் ஆவணம் இருக்கிறது'  என ஸ்டேட் வங்கி சொன்னாலும், 'உரியமுறையில் பணம் கையாளப்படவில்லை. இது தனிநபரின் பணமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்' என அதிர வைக்கிறது வங்கி ஊழியர்கள் சங்கம்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை, இடம் பொருள் பார்க்காமல் விமர்சிப்பதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தயங்கியதே இல்லை. ' அவரை மாற்றிவிட்டாலே போதும்' என பா.ஜ.கவின் தலைவர்கள் பகிரங்கமாக பேட்டியளித்து வந்தனர்.
"திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னர் பற்றி  ரகுராம் எந்த தகவலும் சொல்லாமல் இருப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. வருகிற செப்டம்பர் 4-ம் தேதியோடு ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிகிறது. 'மீண்டும் பதவியில் தொடர விரும்புகிறேன்' எனப் பேட்டியளித்தார் அவர். எனவே, கன்டெய்னரை வைத்து மத்திய அரசு நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த விவகாரத்தை அவர் நினைத்தால் எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம்" என்றார் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர்.


மேலும் அவர்,  " கன்டெய்னர் பிடிபட்டு 96 மணிநேரங்கள் கடந்துவிட்டன. பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தைப் பறிமுதல் செய்த உடனே தகவல் வெளியாகவில்லை. 24 மணிநேரம் கழித்துதான் தகவல்கள் வெளியில் கசிந்தன. வழக்கமாக, பணத்தைக் கொண்டு செல்லும்போது டி.ஜி.எம் நிலையில் இருக்கும் ஒரு அதிகாரி, அனைத்து ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எங்காவது போலீஸார் வழிமறித்தால், அடுத்த 15 நிமிடங்களில் அனைத்து ஆவணங்களையும் காட்டிவிட்டு, வாகனத்தை எடுத்துச் சென்றுவிட வேண்டும். அந்த இடத்தில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், சி.ஜி.எம் ரேங்கில் இருக்கும் அதிகாரியைத் தொடர்பு கொண்டு விளக்க வேண்டும்.
எந்த இடத்திலும் வாகனம் நின்றுவிடக் கூடாது எனக் கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், திருப்பூரில் பிடிபட்ட கன்டெய்னரில்,  சூரிரெட்டி என்ற ஒரு சாதாரண ஊழியரை பாதுகாப்புக்கு அனுப்பி இருக்கிறார்கள். பறக்கும் படை அதிகாரிகள் சுற்றி வளைத்ததும், அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் தப்பி ஓடியது ஏன்? உள்ளே இருப்பது 570 கோடி ரூபாய்தான் என எப்படி முடிவு செய்தார்கள்? யார் எண்ணி பார்த்தது? தொகையைச் சொன்னதும் அதை வைத்தே ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழும்புகிறது. வாகனத்தின் உயரத்தையும், கன்டெய்னரின் கியூபிக் மீட்டர் கொள்ளளவையும் பார்த்தால், தொகையின் அளவு அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். 

வங்கியின் ஆவணம் என்று சொல்லும் பேப்பர்களில், 6-ம் தேதி 11-ம் தேதி என இரண்டு தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைக் காட்டுவதற்குக்கூட 26 மணி நேரத்தை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை மிக அலட்சியமாகக் கையாண்டுள்ளனர். தொடக்கத்தில், விசாகப்பட்டினம் கொண்டு செல்லப்படுவதாகச் சொன்னவர்கள், இப்போது விஜயவாடா வங்கி என மாற்றிச் சொல்கின்றனர். தமிழ்நாடு போலீஸின் உதவியை வங்கி அதிகாரிகள் கோராமல் இருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
வாகனத்திற்கு பாதுகாப்பாக வந்த ஆந்திர போலீஸார், வாகனம் கிளம்பிய இரண்டு மணி நேரத்தில் லுங்கி உடைக்கு மாறியது ஏன்? தமிழ்நாடு காவல்துறையின் கவனத்திற்கு கன்டெய்னர் செல்லும் விஷயத்தைக் கொண்டு போகாதது ஏன்? ஒருவேளை இங்கிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு போய்விட்டால் விபரீதமாகிவிடும் என்ற அச்சம் காரணமாக தகவல் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். 'நாங்கள்தான் பணத்தை ரிலீஸ் செய்தோம்' என ஸ்டேட் வங்கி அதிகாரிகள் எங்களிடம் சொல்கின்றனர். அதற்குரிய ஆவணங்களைக் காட்டுவதில் இவ்வளவு காலதாமதம் ஏன்?



முக்கியமான இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளில் மிக முக்கியமானது, வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்பு பணம் தொடர்பானது. 200 எபிசோடுகள் நிரம்பிய அந்த ஆப்ரேஷனில், 180 வீடியோக்கள் தனியார் வங்கி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்படும் கறுப்புப் பணம் தொடர்பாக எடுக்கப்பட்டவை. மற்றவை, அரசு வங்கிகளில் பதுக்கப்படும் கள்ளப் பணம் தொடர்பானது. பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ' வேலை போனாலும் பரவாயில்லை' என்ற மனநிலையோடு, தனிநபர்களின் பணத்தைப் பதுக்கும் வேலையில் ஈடுபட்டார்களா என்பதும் மிக முக்கியமான கேள்வி.

ரிசர்வ் வங்கி நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால், இந்தப் பணம் எதற்காக ஆந்திரா கொண்டு செல்லப்பட்டது? ஆந்திராவோடு தொடர்புடைய தமிழக அரசியல் புள்ளி யார்? எதற்காக இந்தப் பணத்தைக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினார் என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரியும். மத்திய அரசின் முழு ஒத்துழைப்பும் இல்லாவிட்டால், கன்டெய்னர் மர்மத்தை இந்தளவுக்குக் கட்டிக் காப்பாற்ற மாட்டார்கள். 'மத்திய அமைச்சர் ஒருவர் தலையிட்டார்' என தி.மு.க தலைவர் கருணாநிதி சொல்கிறார். அந்த அமைச்சர் யார்? என்பதற்கு மோடிதான் விளக்கமளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகம் வலுப்பெறவே செய்யும்" என விரிவாகப் பேசி முடித்தார் அவர்.    

கன்டெய்னரில் இருக்கும் பணத்தை அரசியல் கட்சிகள், வங்கி அதிகாரிகள் முன்னிலையில் எண்ண வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை, தனது அதிரடி பேச்சின் மூலம் அம்பலப்படுத்தும் ரிசர்வ் வங்கி ஆளுநர், ' கன்டெய்னர் விவகாரத்தில் மவுனம் கலைவாரா?' என்பதே வங்கி ஊழியர்களின் கேள்வியாக இருக்கிறது. 



No comments:

Post a Comment