Monetize Your Website or Blog

Saturday, 13 August 2016

ஒபாமாவும் ஒரு பெண்ணியவாதிதான்!

"இப்படித்தான் ஒரு பெண்ணியவாதி இருப்பார்" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை கடந்த வாரம் எழுதியுள்ளார் ஒபாமா. அவரது பிறந்த நாளன்று வெளி வந்த இக்கட்டுரையின் தலைப்பு, கடந்த ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த பெண்களுக்கான மாநாட்டில் அவர் உரையாற்றும் போது தன்னை பற்றி கூறிக்கொண்டதுதான்.
அக்கட்டுரையில், தனது வாழ்நாளில் எவ்வாறு பெண்கள் வேலைவாய்ப்பில் முன்னேறியுள்ளார்கள் என்று குறிப்பிடும் ஒபாமா, முன்பெல்லாம் பெண்களுக்கு குறைந்த ஊதியத்துடன் கூடிய வேலைதான் கிடைக்கும், ஆனால் தற்பொழுது வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் பேர் பெண்களாக உள்ளனர் என்றும், அவர்கள் விண்வெளி ஆராய்ச்சி, விளையாட்டு, ஹாலிவுட், நீதித்துறை என பல்வேறு துறைகளிலும் வெற்றி பெறுபவர்களாகவும், தலைமை பொறுப்பில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.


மேலும் பெண்கள் அவர்களின் அழகு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நிதி விஷயங்களில் தங்களுக்கு பிடித்த முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை வென்றுள்ளார்கள் எனக் கூறும் ஒபாமா,  உலகமெங்கிலும் உள்ள பெண்களின் எதிர்கால வளர்ச்சியை மேம்படுத்த இன்னும் நிறைய முன்னேற வேண்டி இருக்கிறது என்கிறார்.
தான் பல்வேறு திட்டங்கள் மற்றும் சட்டம் மூலம் இதனை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வந்தாலும், அதனையெல்லாம் தாண்டி இவ்விஷயத்தில் மிக பெரிய சவாலாக இருப்பது நம்மை நாம் எப்படி மாற்றிக்கொள்வது, என்பதுதான் என்றும், மேலும் அது கடினமான ஒன்று எனவும் கூறுகிறார்.
சமுதாயத்தில் ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இருக்கும் வரையறையை உடைத்தெறிய வேண்டும் என்கிறார் ஒபாமா. நாம் பிள்ளைகளை வளர்க்கும் போது பெண்கள் பொறுமையானவர்களாகத்தான் இருக்க வேண்டும், ஆண்கள் உறுதியானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று இருக்கும் நமது  எண்ணமே ஆண்கள் அழும்போதும், பெண்கள் அநீதியை கண்டு குரல் எழுப்பும்போது அவர்களை விமர்சிக்கிறது என்ற பெண்ணியத்தின் முக்கியக் கருத்தை பதிவு செய்கிறார்.
ஒரு தந்தை, தன் குழந்தைக்கு பணிவிடைகளை செய்யும் போது பாராட்டும் இந்த உலகம், அதுவே ஒரு தாய் செய்யும் போது அதை அவரின் கடமையாக பார்ப்பது போன்ற விஷயங்கள் மனதளவில் மாற வேண்டும் எனக் கூறுகிறார். மேலும், வேலைச்சூழலில் ஆண்கள் போட்டி மனோபாவத்துடனும், லட்சியத்துடனும் பணி செய்யும் பொது அவர்கள் பாராட்டுதலுக்கு உள்ளாகின்றனர், ஆனால் பெண்கள் அப்படி இருந்தால் அவர்களை இதே போல் நடத்துவது இல்லை என்று தினந்தோறும் அலுவலகங்களில் பெண்கள் படும் சிரமத்தையும் பாகுபாட்டையும் பற்றிக் கூறியுள்ளார்.
தனது வாழ்வில் மிக முக்கியமானவர்கள் தன் தாய், பாட்டி, மனைவி என்றும், அவர்கள் எப்படிப்பட்ட உழைப்பாளிகள் என்றும் பெருமிதமாக கூறுகிறார். அவர் இல்லினோயிஸ் மாகாணத்தில் செனேட்டர் ஆக இருந்தபோதும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக பணியாற்றிய பொழுதும் வேலை நிமித்தம் காரணமாக குடும்பத்தினருடன், குறிப்பாக தனது பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் போனபோது, தனது மனைவி மிஷேலின் நெருக்கடியான வேலைக்கு மத்தியிலும், குடும்பத்தையும் கவனிக்கும் பொறுப்பும் பாரமும் அவர் மீது விழுந்தது என வருத்தம் தெரிவித்துள்ளார்.


மிஷேலும் தானும் எப்படி அவர்களின் பிள்ளைகள் சாஷா மற்றும் மாலியாவிடம்,  எங்கேயாவது அவர்களையோ அல்லது மற்றவர்களையோ  பாலினம் மற்றும் இனம் சார்ந்து நியாயமற்ற வகையில் நடத்தினால், அதனை எதிர்த்துப் பேச சொல்லிக் கொடுத்துள்ளோம் என்று பெருமையான தந்தையாக கூறுகிறார் ஒபாமா. மேலும் ஒரு தந்தையாக, தான் ஒரு பெண்ணியவாதியாக இருப்பது முக்கியம் என்கிறார் ஒபாமா.
பாலின வேறுபாட்டை எதிர்த்து போராடும் கடமை, ஆண்களுக்கும் சமமாக உள்ளது என்று கூறும் ஒபாமா, கணவர்கள் மற்றும் ஆண் நண்பர்களும் உண்மையிலேயே சமமான ஒரு உறவினை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார்.
'அமெரிக்காவின் இருநூற்றி நாற்பது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒரு பெண், பிரதான அரசியல் கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளராக இருப்பது ஒரு வரலாற்று சாதனை' என்று ஹிலாரி கிளின்டன் பற்றி குறிப்பிட்டு, இதுவே பெண்களுக்கான சமஉரிமை போராட்டத்தில், அவர்கள் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதனை காட்டுகிறது என்று கூறியுள்ளார் ஒபாமா.
ஆண் பெண் அனைவரும் சமமாக இருந்தால் நாம் இன்னும் சுதந்திரமாக செயல்படலாம், என்ற 21-ம் நூற்றாண்டுக்கான பெண்ணியத்தின் குரலாய்  ஒலிக்கிறார் ஒபாமா.



No comments:

Post a Comment