Monetize Your Website or Blog

Friday, 13 May 2016

நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லவில்லை! - கருணாநிதி

நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த சில நாட்களாக தமிழக நாளேடுகளை பிரித்துப் பார்த்தால், ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு பணம் கொழிக்கும் மாநிலமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு, அங்கே இத்தனை லட்சம் ரூபாய், இங்கே இத்தனை கோடி ரூபாய் பறிமுதல், வாக்காளர்களுக்குத் தங்குதடையின்றிப் பணம் பட்டுவாடா, மின்சாரத்தை நிறுத்திவிட்டு இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு பணம் விநியோகம் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அ.தி.மு.க. வினர் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புது உத்தியைப் பண விநியோகத்திற்குக் கண்டு பிடித்து, நமது இந்திய ஜனநாயகத் தேர்தலைச் செழுமைப்படுத்தி (?) வருகின்றனர்.


2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துடன் கை கோர்த்துக் கொண்டு கடைசிநேரத்தில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, அதைப் பயன்படுத்தி, காவல் துறையினர் துணையுடன் பணப் பட்டுவாடா செய்தனர். இந்தத் தேர்தலில், மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு, அந்த இருளைப் பயன்படுத்தி, பல இடங்களில் பண விநியோகம் செய்திருக்கின்றனர். ஆளும் அ.தி.மு.க. வினர் தாங்கள் வாக்காளர்களின் அதிருப்தியையும், கோபத்தையும் கடந்து இனியும் வெற்றி பெற முடியாது என்று கடைசியாக கொள்ளையடித்த பணத்தைக் கத்தை கத்தையாக அள்ளி வீசுகிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.

தேர்தல் நேரத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு, சுமார் நூறு கோடி ரூபாய் கைப்பற்றப்படவில்லை. பண விநியோகம் மாத்திரமல்ல; அம்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா மற்றும் அவருடன் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்றவர்கள் மீது திராவகம் அடைக்கப்பட்ட முட்டைகள் வீசப்பட்டு, அந்த வேட்பாளர் தற்போது மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வருகிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது திராவக வீச்சு நடத்தியவர்கள் அல்லவா? மேலும் அந்தப் பழக்கத்தையே கடைப்பிடிக்கிறார்கள் போலும்!

கோவை மாவட்டத்தில் இரண்டு அதிகாரிகள், கோவை தெற்குத் தொகுதியின் தேர்தல் அதிகாரியும், தொண்டாமுத்தூர் தொகுதியின் தேர்தல் அதிகாரியும் தங்களுடைய சட்ட ரீதியான கடமையையும், மனசாட்சியையும் மறந்து ஆளுங் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேரடியாகவே செயல்பட்டு, அ.தி.மு.க. வேட்பாளர் அரசு வாகனங்களில் பணம் கடத்தவும் உதவி செய்வது வெளியே தெரிந்து, பணம் கடத்தப்பட்டுக் காரியங்கள் யாவும் முடிந்த பின்னர் கடைசியாகக் கண் விழித்துக் கொண்டு, பாரபட்சமின்றிச் செயல்படுகிறோம் என்று பாவனை செய்து, தேர்தல் ஆணையம் அந்த அதிகாரிகளின் கார்களை பறித்துக் கொண்டுள்ளது.

இத்தகைய நிகழ்வுகளிலிருந்து நமக்குத் தெரிவதெல்லாம் ஆளுங்கட்சிக்கு இப்போது தோல்வி பயமும், விரக்தியும் தொற்றிக் கொண்டு விட்டது; அதனால் தான் இப்படிப்பட்ட நாணயக் கேடான காரியங்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருப்பதால், தாங்கள் கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியை வாரி இறைத்து வாக்காளர்களின் மனதை மயக்கி வெற்றி பெற முடியாதா என்று அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் பகல் கனவு காணுகிறார்கள். வாரி இறைத்திடும் பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானிக்குமென்றால்; கோடிக்கணக்கான பணம் வைத்திருக்கும் குபேரர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றால்; இந்தியாவில் டாடாவும், பிர்லாவும், அம்பானியும், அதானியும் அல்லவா ஆட்சி பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள்? 


சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடப்பதைப் பாழ்படுத்திடப் பணத்தை அள்ளி வீசும் அ.தி.மு.க.வினரின் இத்தகைய அராஜக அட்டூழியங்களைக் கண்டு கழகத் தோழர்கள், குறிப்பாக கழக வேட்பாளர்கள் கிஞ்சிற்றும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஆளுங்கட்சியினர் இந்த ஐந்தாண்டுகளில் சேர்த்துக் குவித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இவ்வாறு தேர்தலில் வெற்றி பெறப் பயன்படுத்துவார்கள் என்பதெல்லாம், தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு முன்பே நமக்குத் தெரிந்தது தானே? தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை, காவல் துறையினரின் துணையோடு, காவல் துறை வாகனங்களிலும், ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் மாநிலத்தின் பல இடங்களுக்கும் கொண்டு சென்று பதுக்கி வைத்தார்கள் என்பதெல்லாம் அனைவரும் அறிந்தது தானே! எனவே ஆளுங்கட்சியினர் பட்டுவாடா செய்திருக்கும் பணத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன் கருதி அயராது பாடுபட்டு வருகின்ற தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து தொய்வேதுமின்றி உழைத்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

எனக்கு வயது 92. இந்த வயதிலும் உங்களை நேரில் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுவருகிறேன். தேர்தல் பிரசாரத்திற்காகச் சிலரைப் போல ஹெலிகாப்டரில் நான் பறந்து செல்லவில்லை; வாக்காளர்களை, தனக்கு வசதியான ஓரிடத்தில், கடும் வெயிலில் கூட்டி வைத்து, வாக்கு கேட்க எனக்குத் தெரியாது. வாக்காளர்களைத் தேடி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே போவது தான் என் வழக்கம். பிரசார வாகனத்தில் சாலை வழியே பல நூறு மைல் பயணம்; புகைவண்டிப் பயணம்; பயணிகள் விமானத்தில் பயணம் எனத் தேர்தல் பிரசாரத்திற்காக நான் பிரத்தியேகமான பயண ஏற்பாடு எதையும் செய்து கொள்ளவில்லை. நான் மிக மிகச் சாதாரண, சாமானியன் என்பதால், சிலரைப் போல ஆடம்பர எண்ணமே எனக்கு எழுவதில்லை.

சிலரைப் போல, "வானத்தை வில்லாக வளைத்து விட்டேன்; மணலைக் கயிறாகத் திரித்து விட்டேன்; தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது; எனக்கு வாக்களித்தால் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மக்களைக் கொண்டு செல்வேன்’’ என்று திரும்பத் திரும்பப் புழுத்துப் போன பொய்களையே சொல்லி வாக்கு கேட்க நான் மக்களிடையே வரவில்லை. 2011 தேர்தலின்போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்ததில் பலவற்றை நிறைவேற்றவில்லை; சட்ட மன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்களிலும் பலவற்றை நிறைவேற்றவில்லை. உங்கள் எல்லோருக்கும் தெரியும்! நான் சொன்னதைச் செய்பவன். சொல்லிவிட்டால் செய்தே தீர வேண்டுமென்று தீவிரமாக உழைப்பவன். சிலரைப்போல வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி, வாக்காளர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் எப்போதும் ஏமாற்றியதில்லை!

நான் மாத்திரமல்ல; நம்முடைய கழகப் பொதுச் செயலாளர், பேராசிரியர் 93 வயதிலும் முதற்கட்ட சுற்றுப் பயணம், இரண்டாவது கட்டச் சுற்றுப் பயணம் ஆகியவற்றை முடித்துவிட்டு தற்போது மூன்றாவது கட்டச் சுற்றுப் பயணத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டு பிரசாரம் செய்து வருகிறார். கழகப் பொருளாளரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! அவரைப் பற்றி ஒரு முறை நான் கூறும்போது "உழைப்பு! உழைப்பு! உழைப்பு! அது தான் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்’’ என்று தெரிவித்திருக்கிறேன். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகும் வகையில், காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில்கூட தீவிரமான தேர்தல் பிரசாரப் பணிகளிலே ஈடுபட்டிருப்பதைத் தொலைக் காட்சியில் கண்டேன். 

மேலும், மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழி, தலைமைக் கழகத்தின் பேச்சாளர்கள் எல்லாம் இரவென்றும், பகலென்றும் பாராமல் தேர்தல் பிரசாரப் பணிகளிலும் பயணங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் செய்திகளையெல்லாம் பார்த்திருப்பீர்கள். இடையில் இருப்பது இன்னும் இரண்டே நாட்கள் தான்! அதாவது 48 மணி நேரம் தான். இதுவரை உழைத்த உழைப்பு. உற்ற பயனை விளைவிக்க வேண்டுமல்லவா? கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்மக்கள் பட்ட கொடுமைகளுக் கெல்லாம் விடியல் தேடிடும் வேலையில் நீங்கள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.


"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்’ என்பது அய்யன் திருவள்ளுவரின் அருங்குறள். எனவே அ.தி.மு.க.வினர் அள்ளி வீசும் பணத்தைப் பற்றியோ, அவர்கள் கொள்ளையடித்துக் கைவசப்படுத்தி வைத்திருக்கும் பணத் தோட்டத்தைப் பற்றியோ, அவர்கள் பிரயோகிக்கும் வஞ்சக சூழ்ச்சிகளைப் பற்றியோ, எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மையைப் பற்றியோ எள்ளளவும் கவலை கொள்ளாமல் மக்கள் நம் பக்கம் என்பதால், உழைப்போம்; அயராது உழைப்போம்; எந்தத் தடையெனினும் இடறிவிட்டு இன்முகத்தோடு உழைப்போம்; வெற்றி நமதே!" என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment