Monetize Your Website or Blog

Monday, 2 May 2016

தோல்விபயத்தில் எங்களைத் தாக்குகிறார்கள் திமுகவினர்:வைகோ பரபரப்புக் குற்றச்சாட்டு!

திருவாரூர் தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துப் பேசி வாக்குச் சேகரிக்க சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ,தோல்வி பயத்தால் எங்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.       

மேலும் அவர் தனது அறிக்கையில், "திருவாரூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாசிலாமணி அவர்களை ஆதரித்துப் பேசுவதற்காகப் பிரச்சார வேனில் விரைந்தேன்.

திருவாரூருக்கு முன்பு ஒரு வளைவான திருப்பத்தில் சுமார் 100–க்கும் மேற்பட்டவர்கள் கூடி நிற்கக் கண்டேன்.
அங்கே இருட்டாக இருந்தது. எனவே, அவர்கள் யார் என்பதைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அருகில் நெருங்கும்போதுதான், அவர்கள் கருப்புக் கொடித் தடிகளோடு என்னைத் தாக்க வருவதைப் பார்த்து, எனது வாகன ஓட்டுநர் துரை சாமர்த்தியமாக அந்த வளைவில் வலது பக்கமாக வண்டியைச் செலுத்தி மிகுந்த வேகத்தில் சென்றார். அப்போது அவர்கள் எறிந்த தடிகள் எங்கள் வாகனத்தின் மீது வந்து விழுந்தன.


என் வாகனத்திற்கு முன்னால் சென்றுகொண்டு இருந்த பிரச்சார வாகனத்தில் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டு சென்ற மதிமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் மகேஷ் அவர்களது பிடரியில் ஒரு தடி விழுந்ததால் அவரது பிடரி வீங்கி உள்ளது.

அந்த அடி இன்னும் கொஞ்சம் பலமாக விழுந்து இருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். தொடர்ந்து என் பின்னால் வந்த வாகனங்கள் மீது தடிகளை வீசி இருக்கின்றார்கள். எங்கள் அணிவகுப்பில் இருசக்கர வண்டிகளில் வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னையா என்ற செல்லத்துரை, முகமது ஈசாக் ஆகிய இரு தோழர்களுக்கும் தடியடி விழுந்துள்ளது. நல்ல வேளையாக, ரத்தக் காயம் ஏற்படவில்லை.

நான் திருவாரூருக்குச் சென்று அங்கே பேருந்து நிலையத்திற்கு முன்பு உரையாற்றும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும், அ.தி. மு.க. ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தேன். அவருக்கு வாக்கு அளிப்பது தமிழ் நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றேன்.

அண்ணன் கலைஞரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணிக் கொண்டுதான் சென்றேன். ஆனால், தி.மு.க. தோழர்கள் கருப்புக்கொடி காட்டியதால் நான் பயந்து கொண்டு கலைஞரைப் பற்றிப் பேசாமல் போய்விட்டேன் என்று நமது அணித் தோழர்களிடம் பரிகாசம் செய்வார்கள் என்று கருதியதால் , காவிரிப் பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர்களுக்குக் கலைஞர் செய்த துரோகங்களைக் கூறி விட்டு, கலைஞருக்கு ஓட்டுப் போடுவது காவிரி மண் ணுக்குச் செய்யும் துரோகம் என்றேன்.

எங்கள் அணித் தோழர்கள் தாக்கப்பட்டது குறித்தும், என்னைத் தாக்க முயற்சித்தது பற்றியும் எனது உரையில் குறிப்பிடவே இல்லை. பதற்றம் அதிகமாகி பலத்த மோதல் ஏற்பட்டு விடும் என்று கருதியே அதனை நான் தவிர்த்தேன்.


பின்னர் விசாரித்த போது தான் முழு விவரம் தெரிய வந்தது. என்னைத் தாக்குவதற்கு அவர்கள் தேர்ந்து எடுத்த இடத்தில் விளக்குகளை முன்கூட்டியே அணைத்து விட்டார்கள். சாலையின் பக்கவாட்டில், இருட்டுக்குள் நீண்ட நேரமாக மறைந்து இருந்திருக்கின்றார்கள். அருகில் நெருங்கும் போது எங்கள் கார்களின் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் எது வும் இல்லை.


இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், திருவாரூர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்துதான் இவர்கள் தடிகளோடும், கொடிகளோடும், ஆயுதங்களோடும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் இருந்து எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நடந்ததைக் கேட்டு மிகவும் வருந்தினார்கள். தோல்வி பயத்தால் தி.மு.க.வினர் என் மீது வன்மம் கொண்டு இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட்டு ஒரு மோதலை உருவாக்க முற்படுவதால், அதற்கு இடம் கொடுக்காதவாறு, கழகக் கண்மணிகளும், கூட்டணிக் கட்சிகளின் தோழர்களும் அமைதி காக்க வேண்டுகிறேன்." என்று கூறியுள்ளார்.




No comments:

Post a Comment