Monetize Your Website or Blog

Tuesday, 17 May 2016

பேருந்துக் கட்டணக் கொள்ளை... தேர்தல் ஆணையம் கவனத்துக்கு..!

தேர்தல் ஆணையம் எடுத்த கடும் முயற்சியில், முதல் தலைமுறை இளைஞர்கள் எல்லாம் வாக்களிக்க விருப்பமாக இருக்கிறார்கள்.
சூர்யா சொன்னதை, அஸ்வின் வலியுறுத்தியதை, பிரபுதேவாவின் அறிவுரையை மீற இங்கு பெரும்பாலான இளைஞர்கள் தயாராக இல்லை. ஆம். அனைவரும் வாக்களிக்க விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறதா...? சூழ்நிலை என்று நான் குறிப்பிடுவது வாக்களிக்க பணம் தரப்படுவதையோ, இல்லை அனைத்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதையோ நான் குறிப்பிடவில்லை. அதற்கு எப்போதோ தமிழக சாமான்யன் பழகிவிட்டான்.  அதுவும் தேர்தலில் ஒரு அங்கம்தான் என்று நம்பத் துவங்கி இரண்டு தேர்தல்கள் ஆகிறது.


ஆனால் இம்முறை அவன் எதிர்கொள்வது வேறு பிரச்னை. அந்த பிரச்னையும் அவனுக்கு புதிதல்ல என்றாலும், தேர்தல் காலத்தில் அவன் அதை எதிர்கொள்வது இதுதான் முதல்முறை. பேருந்து கட்டணங்களை குறிப்பிடுகிறேன். ஆம். தீபாவளி, பொங்கல் காலங்களில் விண்ணை தொடும் பேருந்து கட்டணங்கள், இம்முறை தேர்தல் காலத்திலும் எக்குதப்பாக ஏறி சாமான்யனை அடிக்கிறது.

முத்துவின் வாக்கு உங்களுக்கு வேண்டாமா... ?
முத்து வாக்களிக்க போகும் முதல் தேர்தல் இது. மென்பொறியியல் முடித்து, சமீபத்தில்தான் சென்னையில் ஒரு சிறு மென்பொருள் நிறுவனத்தில், எட்டாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தான். முதலில் அவன் நிறுவனம், தேர்தல் அன்று விடுமுறைவிடுவதாகவே இல்லை. ஊழியர்கள் கேட்டுப் பார்த்தார்கள். அதற்கு நிறுவனம், “நிச்சயம் அமெரிக்க தேர்தலின் போது விடுமுறைவிடுகிறோம்..” என்றது. பெரும்பாலான ஊழியர்களுக்கும் விஜயகாந்தை பற்றி தெரிந்ததைவிட டொனால்ட் டிரெம்ப்பை பற்றிதான் அதிகம் தெரியும் என்றாலும், இவர்களுக்கு அங்கு வாக்குரிமை இல்லாததால், தமிழக தேர்தலில்தான் வாக்களித்தாக வேண்டும்.
ஆனால் தேர்தல் ஆணையம் காட்டிய கண்டிப்பிற்கு பிறகு, நிறுவனம் இறங்கி வந்தது. அதுவும் விடுமுறை இல்லை. வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் (Work From Home) என்றது.  முத்துவும் வாக்களிக்க வள்ளியூர் போக ஆயத்தமானான். இணையத்தில் உள்ள ஒரு பிரபலமான தளத்திற்கு சென்று பயணச் சீட்டை முன்பதிவு செய்ய முற்பட்ட போதுதான் தெரிந்தது. பயணக் கட்டணம் ரூபாய் 2000 என்று. வேடிக்கை என்னவென்றால் மதுரைக்கான க்கான விமான கட்டணமே ரூபாய் 3600 தான். பேருந்து கட்டணத்தை கணக்கிட்டு பார்த்தான். போகவர ரூபாய் 4000 ஆனது. இதற்கு அவன் வாங்கும் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் இடமளிக்கவில்லை. சரி, அடுத்த தேர்தலில் வாக்களித்துக் கொள்ளலாம் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டுவிட்டான்.

முத்துவின் ஒரு வாக்கால்,  வாக்கு சதவீதத்திற்கு ஒன்றும் ஆகிவிடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கலாம். ஆனால், இது முத்துவின் அனுபவமல்ல... சென்னை, கோவை, பெங்களூரில் சொற்ப சம்பளத்திற்கு பணி செய்யும் சிவா, சுச்சி, செந்தில், கிருஷ்ணன்களின் நிலையும் இதுதான்... இவையெல்லாம்  நிச்சயம் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கும் வாக்கு சதவீதத்திற்கு பெருத்த அடியை ஏற்படுத்தும் .
  
விளம்பரங்களால் மட்டும் வாக்கு சதவீதங்களை உயர்த்த முடியாது



விளம்பரங்கள் செய்வது, பணப் பட்டுவாடைவை தடுப்பது (!), வன்முறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல. அனைவரும் வாக்களிப்பதற்கு ஏற்ற ஒரு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் பணிதான்.  தென் மாவட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னையில் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் பெரும் விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்புகிறார்கள். ஆனால், முறைப்படுத்தப்படாத பயணக் கட்டணம் பெரும் பிரச்னையாக இருக்கிறது.  இதில் உடனடியாக  தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும். இல்லையென்றால், ஏதாவது தேர்தல் கட்சிகள், 'நாங்கள் இலவசமாக பேருந்துகள் ஏற்பாடு செய்கிறோம்' என்று இதிலும் தேர்தல் விதிமுறைகளை மீற வாய்ப்பிருக்கிறது.

வாக்கு சதவீதம் உயர வேண்டுமென்று நினைக்குமாயின், தேர்தல் ஆணையம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.



No comments:

Post a Comment