Monetize Your Website or Blog

Friday, 13 May 2016

புதிய வாக்காளர்களுக்கு சகாயம் சொல்லும் அறிவுரை!

'எவருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால், கவருக்கு மட்டும் வாக்களித்துவிடாதீர்கள்'- இது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் தேர்தல் முழக்கம்!
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் கூட்டங்களில் பங்கேற்று அதிர வைத்துக் கொண்டிருக்கிறார் சகாயம். நேர்மை அரசியல், தேர்தல், பணப் பரிமாற்றம் என எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் பதில் இருக்கிறது.

'தமிழக அரசியல் வரலாற்றில், 'சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர் முதலமைச்சராக வேண்டும்' என ஓர் அரசு அதிகாரியை நோக்கி விரல்கள் நீண்டது இந்தத் தேர்தலில்தான். இளைஞர்களின் வேண்டுகோளுக்கு பதில் அளித்த சகாயம், 'சமூக இயக்கமாக மக்களிடம் செல்லவே விரும்புகிறேன்' என்றார்.
'சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?', 'முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை?', 'பணநாயகம் தேர்தலில் நடுநாயகமாக இருக்கிறதே?', 'தேர்தல் அலுவலராக இருந்தபோது உங்களைக் கவலைப்படுத்திய விஷயம் எது?' என அவரிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருந்தன.

ஒரு மதிய நேரத்தில் தமிழ்நாடு அறிவியல் மையத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.  

தேர்தலில் புதிய வாக்காளர்களின் பக்கமே அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. 'மாற்றத்தை உருவாக்கப் போகிறவர்கள் அவர்கள்தான்' என்ற விவாதமும் எழுந்துள்ளது. அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? 

என்னைப் பொறுத்தவரையில் புதிய வாக்காளர்கள் படித்தவர்கள். தேர்தல் நேரத்தில் மிகத் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர்களுடைய அடிப்படை பிரச்னையே நல்ல வேலை, தரமானக் கல்வி, தரமான மருத்துவ சேவை போன்றவைதான். தமிழ்நாட்டில் 85 லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். இவர்களுடைய தேவை நல்ல வேலை, தரமான மருத்துவ வசதி போன்றவைகள்தான். இவற்றையெல்லாம் தரக்கூடிய வேட்பாளர் யார் என்பதைச் சிந்தித்து அவர்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.


ஒருவருக்கு நேர்மை என்பதே இன்றைய காலகட்டத்தில் உச்சகட்ட தகுதியாக இருக்கிறதே? இது சரியானதுதானா?

இன்றைய சமூகத்தில் நேர்மையாக இருப்பவர்களை ஆராதிக்கக்கூடிய நிலை இருப்பதே வருத்தமான செய்தி. நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் குழந்தைகளை வளர்க்கும்போது, 'நேர்மையாக வாழ வேண்டும்' என்று சொல்லித்தான் வளர்க்கிறார்கள். இன்றைக்கு நம்முடைய அரசியல் சூழல், குறிப்பாக, சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் மிகுந்த நேர்மையோடும் தியாக உணர்வோடும் வாழ்ந்தார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னால் வந்தவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த நேர்மையோடு இருந்திருக்கிறார்கள். ஆனால், அதனைத் தொடர்ந்து அரசியல் தளங்களில் ஆளுமை செலுத்தியவர்களிடம் நேர்மை அரிதாகிப் போனது என்பது வேதனையான விஷயம். அதனால்தான், இன்றைக்கு நல்ல வேலைவாய்ப்பு, தரமான மருத்துவ வசதி போன்றவை கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக இளைஞர்கள் கருதுகிறார்கள். இவற்றையெல்லாம் சரி செய்யக்கூடிய நேர்மையான ஆளுமையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் நேர்மை என்ற வார்த்தையே வசீகரிக்கக் கூடிய வார்த்தையாக மாறிவிட்டது! 



No comments:

Post a Comment