Monetize Your Website or Blog

Saturday, 14 May 2016

சகாயத்தை கொந்தளிக்க வைத்த ஃபேஸ்புக்! -கிறுகிறுக்க வைத்த கில்லாடிகள்

ட்டமன்றத் தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக இளைஞர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது பேச்சுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக, "அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் எல்லாம் மக்களின் லஞ்சப் பணம்தானே. அதைப் பெற்றுக் கொண்டு வாக்களியுங்கள்"  என சகாயம் கூறியதாக சிலர் அவதூறு தகவல்களைப் பரப்பியுள்ளனர். அதிலும், 'ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி இவ்வாறு பேசலாம்? அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சிலர் எதிர் பின்னூட்டங்களை இடவும், கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் சகாயம். "அவதூறு செய்பவர்கள் வெளியிடும் தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுங்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தன்னுடைய வழக்கறிஞருடன் விவாதித்திருக்கிறார் சகாயம். 

சகாயத்திடம் பேசினோம். " மிகுந்த வேதனையாக இருக்கிறது. இதுபோன்ற அவதூறு தகவல்களை வெளியிடுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி இளைஞர்களிடம் பேசுவதால்தான் இதுபோன்று அவதூறு செய்கிறார்கள். ஒருநாளும், 'பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களியுங்கள்' என்று நான் கூறியது கிடையாது. நேர்மைக்குப் புறம்பாக பணம் பெறுகிற எந்த ஒரு செயலையும் நான் ஊக்கப்படுத்த மாட்டேன். ஒருநாளும் அதை அனுமதிக்க மாட்டேன்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில சமூக விரோதிகள், நான் கூறியது போல தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். உண்மைக்கு மாறான தகவலைப் பரப்புகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர்களை எச்சரிக்க விரும்புகிறேன். இதுபோன்று அவதூறு செய்திகளை இளைஞர்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் கொந்தளிப்போடு. 

" பொது மேடைகளில் நேர்மையான வாக்குப்பதிவு குறித்து சகாயம் வலியுறுத்துவதை சகிக்க முடியாத சில அரசியல் கட்சிகள்தான், இதுபோன்ற அவதூறுகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகிறார்கள். எத்தனையோ எதிர்ப்புகளைத் தாண்டித்தான், நேர்மையான அரசியலை வலியுறுத்துகிறார் சகாயம். இப்படியெல்லாம் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்?" எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.



No comments:

Post a Comment