Monetize Your Website or Blog

Thursday, 12 May 2016

புதிய வழிகளில் பணம் கொடுக்க கட்சிகள் திட்டம்! -அதிர வைக்கும் லக்கானி

தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு புதிய வழி முறைகளில் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரூ.35 கோடியே 55 லட்சமும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரூ.25 கோடியே 5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் தான் இதுவரை அதிகபட்சமாக ரூ.98 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஒரு சில நாட்களில் ரூ.100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் ரூ.37 கோடி உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால் திருப்பி கொடுக்கப்பட்டது. மீதி ரூ.61 கோடி அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு விட்டது.

         



தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக ரூ.24 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வருமானவரித்துறையினர் மட்டும் ரூ.12 கோடியே 5 லட்சத்து 53 ஆயிரத்து 260 கைப்பற்றியுள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.29 லட்சத்து 18 ஆயிரத்து 820 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இதுவரை ஆன்லைன் மூலம் பல்வேறு அரசியல் கட்சியினருக்கு 57 ஆயிரத்து 336 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஊர்வலம், பொதுக்கூட்டம், கட்சி அலுவலகம் திறப்பு உள்பட பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு புதிய வழி முறைகளில் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

அவர்கள் வீடு, வீடாக ஏதாவது ஒரு வழியில் பணம் பட்டுவாடா செய்ய முயல்வதாக கூறப்படுகிறது. அதை தடுக்க வேண்டுமென்றால் இப்போது உள்ள பறக்கும் படையின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கிராம பஞ்சாயத்துக்கு ஒரு பறக்கும் படை வீதம் இருந்தால்தான் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியும் என்பதால் பறக்கும் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 112 பறக்கும் படைகள் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர கூடுதலாக 2 ஆயிரம் பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பறக்கும் படைக்கு ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 4 அரசு அதிகாரிகள், ஒரு போலீஸ்காரர், ஒரு வீடியோ கேமராமேன், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பறக்கும் படையினர் நேற்று இரவு முதல் பணிக்கு வந்து விட்டனர். தற்போது உள்ள மொத்தம் 8 ஆயிரத்து 112 பறக்கும் படையினர் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பணம் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம். அங்கு சப்-கலெக்டர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி எப்போதும் பணியில் இருப்பார். சென்னையில் பண நடமாட்டத்தை தடுக்க வாகன சோதனை மேலும் தீவிரமாக்கப்படும். வாக்குப்பதிவு தினமான வருகிற 16-ம் தேதி அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு சில சாப்ட்வேர் நிறுவனங்கள் தேர்தல் தினத்தன்று தங்கள் பணியாளர்களை தேர்தல் நடைபெறாத மாநிலங்களான கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆந்திர மாநிலம் ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்று பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் அந்த பணியாளர்கள் ஓட்டுபோட முடியாது. இதை அனுமதிக்க முடியாது. அதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய அறிக்கைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் பற்றி பொதுமக்கள் தொழிலாளர் நலத்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்" என்றார்.




No comments:

Post a Comment