மாநகரங்கள், நீண்ட சாலைகள், உயர்ந்து எழுப்படும் கட்டிடங்கள் இது எதுவும் சிமெண்டால், ஜல்லியால், செங்கற்களால் மட்டும் எழுப்பப்படவில்லை, அதில் ஆயிரக்கணக்கான மக்களின் குருதியும், வியர்வையும் கலந்து இருக்கிறது. ஆனால், எந்த மனிதர்களை கொண்டு அந்த கட்டிடங்கள் சமைக்கப்பட்டதோ, அந்த மனிதர்களுக்கு அந்த உயர்ந்த கட்டங்களின் இரும்பு வாசற்கள் திறப்பதேயில்லை. எல்லோரையும் உள்வாங்கி கொள்ளும் மாநகரங்கள், அந்த எளிய மனிதர்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குபுறமாகவே வைத்து இருக்கிறது. இது ஏதோ தமிழகத்தின் நிலை மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இது தான் நிகழ்ந்து இருக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களை புறக்கணிப்பது மட்டும் அல்லாமல், அந்த மனிதர்களைப் பற்றி ஒரு மோசமான பிம்பத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது. எளிமையாக சொல்லவேண்டுமென்றால், உடல் உழைப்பாளர்கள் எல்லாம் முரடர்கள், தீயவர்கள் என்று. அந்த பிம்பத்தை இன்று அனைவரின் நெஞ்சிலும் ஆழமாக பதிய வைத்ததில் சினிமாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
தமிழ் சினிமாவை மட்டும் குறிப்பிடவில்லை. அனைத்து மொழி படங்களும் பூர்வகுடிகளை, உடல் உழைப்பாளர்களை பெரும்பாலும் நேரடியாகவோ, மறைமுகமாக வில்லனாகவே சித்தரித்து இருக்கிறது. இது ஏதோ தற்செயலானது அல்ல. வில்லன் என்ற சொற்பதமே villanusஎன்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து தான் உருவாகியது. இதன் பொருள் மண்ணில், நிலத்தில் வேலை பார்ப்பவர்.
தமிழ் சினிமாவும், உடல் உழைப்பாளர்களும்:
தமிழ் சினிமாவும், உடல் உழைப்பாளர்களும்:
உடல் உழைப்பாளர்களுக்கு இயல்பாக சூட்டப்படும் பெயர்களை, தமிழ் சினிமா தொடர்ந்து தன் வில்லன் கதாபாத்திரத்திற்குள் வைத்து வந்திருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், கதாநாயகனை நேரடியாக சரிசமமாக எதிர்க்கும் வில்லனுக்கு கூட அந்த பெயர்களை பயன்படுத்தாமல், வில்லனுக்கு அடியாளாக இருக்கும் நபர்களுக்குதான் உடல் உழைப்பாளர்களின் பெயர்களை அதிகம் வைத்து வந்துதிருக்கிறது. இதை சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், “தமிழ் படங்கள இங்க மரு வச்சுக்கிட்டு, மீசையை முறுக்கிகிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு... நம்பியாரு, ‘ஏ... கபாலி’ அப்படின்னு சொல்லிய உடனே, குனிஞ்சு சொல்லுங்க எசமான் அப்டின்னு வந்து நிற்பானே... அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா...” அதாவது, வியர்வை சிந்தி உழைப்பவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்று ஒரு பிம்பத்தை தமிழ் சினிமா கட்டமைத்துள்ளது. இதை பார்த்து வளரும் நாம், உடல் உழைப்பை வெறுக்கிறோம். வேர்வை சிந்தாமல், மூளையை மட்டுமே பயன்படுத்தும் White Collar வேலை மட்டுமே போற்றதக்கது, அந்த வேலைகள் செய்பவர்கள் மட்டுமே மரியாதைக்குரியவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால், உருமாறாத உண்மை அதுவல்ல. உலகின் பல அக்கிரங்கள், அநியாயங்கள் அனைத்தும் மூளை உழைப்பாளர்களால் மட்டுமே நிகழ்ந்து வருகிறது. அது பெரும் போராக இருக்கட்டும், வங்கிகளை ஏமாற்றி நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதாக ஆகட்டும். இதை அனைத்தையும் செய்பவர்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல.
உடல் உழைப்பு இழிவானது என்ற எண்ணம், நம் தினசரி வாழ்விலும் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறது. பணம் கட்டி ஜிம்மில் கலோரிகளை எரிக்க தயாராக இருக்கும் நாம் தான், வீடு பெறுக்குவதற்கும், துணி துவைப்பதற்கும் வேலைஆள் வைத்திருக்கிறோம். ‘சுலபமாக நேரம் இல்லை,’ என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள முடியாது, தினமும் ஜிம்மில் செலவிடப்படும் இரண்டு மணி நேரத்தை, வீட்டில் செலவழித்தால் நம் துணிகளை நாமே துவைத்துவிடலாம். ஆனால், நம்மை ஏதோ ஒன்று உடல் உழைப்பு செய்ய விடாமல் தடுக்கிறது. உடல் உழைப்பு செய்வது இழிவானது என்று ஆழ்மனதில் படிந்துவிட்ட படிமத்தை தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
கபாலியும், உடல் உழைப்பும்:

இன்னும் படம் வரவில்லை தான், அந்த படத்தின் பேசு பொருள் என்னவென்று தெரியாது தான். ஆனால், அந்த படம் உடல் உழைப்பை, உழைப்பாளர்களை கொண்டாடி இருக்கும், மதித்து இருக்கும் என்பதற்கு அதன் தலைப்பும், ஒரு நிமிட டீசரும் போதுமானது. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மட்டுமே வைக்கப்பட்டுவந்த பெயர் முதன் முதலில் கதாநாயகனுக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொன்று படத்தின் டைட்டில் போடும் போது வரும் வரைகலை படங்கள் (Graphical Images). ஆம், பிண்ணனி டிசைன்கள் முழுவதும், உடல் உழைப்பாளர்களின் படங்களாக நிறைந்து இருக்கிறது.
ரஜினியை, கபாலியை கொண்டாடுவது என்பது, உடல் உழைப்பை, உடல் உழைப்பாளர்களை கொண்டாடுவது. நாம் கொண்டாடுவோம்....

No comments:
Post a Comment