
அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர்.
ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர்.

மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்த பணத்தில் கருப்பண சாமிக்கு இந்த காணிக்கையை செலுத்தி உள்ளேன். இதற்கு சில பக்தர்களும், இஸ்லாமிய சகோதரர்கள் சிலரும் உதவியாக இருந்து உள்ளனர்" என்றார்.
இந்த பிரமண்டமான அரிவாளை உருவாக்கியவர் மதுரை திலகர் திடலில் இரும்பு பட்டறை வைத்திருக்கும் கார்த்தி. தாத்தா காலத்தில் இருந்தே, இவர்கள் குடும்பத்தினர், இரும்பு பட்டறை நடத்தி வருகின்றனர். கோயில்களுக்கு அரிவாள் செய்வதை ஒரு தொண்டுபோல் இவர்கள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
இது குறித்து கார்த்தி கூறும்போது, ''கோயில்களுக்கு அரிவாள் செய்யும்பொழுது, விரதம் இருந்தே செய்வோம். இந்த அரிவாள் 5 பேரைக் கொண்டு 21 நாட்களில் செய்யப்பட்டது. இதற்கு முன் மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண சாமிக்கு 25 அடி அரிவாள் செய்து கொடுத்திருக்கிறேன். தற்பொழுது கணேசமூர்த்தி அடிகளாரின் விருப்பத்தின் பேரில் 33 அடி அரிவாள் செய்துள்ளேன். இந்தியாவிலே தற்போது, இதுதான் மிகப் பெரிய அரிவாள்" என்றார் பெருமையுடன்.

கோயிலின் முன் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரமாண்டமான அரிவாளை, சுற்று வட்டார மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

No comments:
Post a Comment