Monetize Your Website or Blog

Saturday, 6 August 2016

கலவர காஷ்மீரில் தமிழக மருத்துவரின் நேரடி அனுபவம்!



டந்த ஜூலை மாதம், காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க கமாண்டர் புர்ஹான் வானி, இந்திய பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. 

போராட்டக்காரர்கள் மீது ஏர் கன் தாக்குதல் நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான பேர் இதில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் உடலில் பாய்ந்த குண்டுகள் உயிரைப் பறிக்கும் குண்டுகள் இல்லை என்பதும், காயம் உண்டாக்கும் கண்பார்வை பறிக்கும் குண்டுகள் என்பதும் கவனிக்கத்தத்தக்க விஷயம். ஏன் எனில் அந்தக் குண்டுகள் ‘non-lethal’ pellet எனப்படும் வகையைச் சார்ந்தவை.

இந்த அசாதாரணமான சூழ்நிலையில்,  தாக்குதலில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து காஷ்மீர் முதல்வரிடமும் மருத்துவர்களிடமும் நேரடிப் பாராட்டுகளை நிறைய பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கண் மருத்துவர்  நடராஜன்.
அகில இந்திய கண் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் நடராஜன், கலவரச்சூழலில் காஷ்மீரில் தங்கியிருந்த அனுபவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது குறித்து நமக்களித்த சிறப்பு பேட்டி இங்கே...

" ஜூலை மாதம் 8 ம் தேதி காஷ்மீரில் கலவரம் ஆரம்பித்தது. அதில் நிறைய அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். மூன்று, நான்கு நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை இல்லை. அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்பட்ட சூழலில், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஊடகங்களுக்கும் கூட செய்திகள் வெளியிடவேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியிருந்த நேரம். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கும் கூட, இந்தியாவின் பிற மாநிலத்தவர் செல்ல அச்சமுற்று இருந்தார்கள்.

புர்ஹான் வானி மரணத்தையடுத்து காஷ்மீரில் நடந்த நிகழ்வுகள் அந்த அளவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி இருருந்தன. மருந்து மாத்திரை வாங்க கூட துப்பாக்கிகளைத் தாண்டிச் செல்லவேண்டும் என்ற ஒரு அசாத்திய சூழல் நிலவுகிறது காஷ்மீர் மாநிலத்தில். ஆனாலும் மருத்துவ சிகிச்சை செய்ய போர்க்களம், பாதுகாப்பான மருத்துவமனை என்று இடம் பார்க்க முடியாது. அதிலும் கண்கள் விஷயத்தில் மிகுந்த விழிப்பாக இருக்கவேண்டும். ஏன் எனில் பார்வை இழந்தால் மீண்டும் பெறுவது பெரிய அத்தனை சுலபமில்லையே.

கலவரத்தை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய அரசும், மருத்துவர்களும் முன்வர  வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்து, காஷ்மீர் மருத்துவர் அப்துல், பத்திரிகைகளில் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், காஷ்மீருக்கு அனுப்பப்பட்டு, நிலவரத்தை தெரிவிக்க பணிக்கப்பட்டனர். அவர்கள் அரசுக்கு அறிக்கையும் அளித்தனர். அதன் பிறகு மாநில அரசின்,  ஸ்ரீ மகராஜ் ஹரிசிங் மருத்துவமனையில் இருந்தும் மருத்துவர்கள் இதே கோரிக்கையை விடுத்திருந்தனர். அதேபோல 'பார்டர் லெஸ் வேர்ல்டு பவுண்டேஷன்' கொடுத்த தகவலின்படி  வாட்ஸ் அப்  குரூப்பில்,  " காஷ்மீர் கலவரத்தின்போது நிறையபேர் துப்பாக்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை செய்ய  வேண்டும். இதற்கு உதவிட மருத்துவர்கள் முன்வரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து,  மும்பையில் உள்ள எங்கள் மருத்துவமனை மற்றும் என்னிடம் பயிற்சி பெற்ற கண் மருத்துவர்களிடம், " காஷ்மீர் செல்ல யாருக்கு  விருப்பம்" என்று விசாரித்தேன். இதையடுத்து என்னுடன் 3 டாக்டர்கள் வர விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து மும்பையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கும்  விமானத்தில் பயணித்தோம். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீ மகராஜ் ஹரிசிங் மருத்துவமனைக்குச் சென்றோம். வழியெங்கும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ரோடுகளில் மக்கள் நடமாட்டம்  இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வெறிச்சோடிக் கிடந்தன சாலைகள்.



எங்களுடன் வர இயலாமல்,  பின்னர் வந்த விமானத்தில் டெல்லிவந்து, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீநகர் வந்த எங்களின் குழுவைச் சேர்ந்த இன்னொரு டாக்டர், சென்னையைச் சேர்ந்தவர். அவர் வந்த காரை செங்கல்களைக் காட்டி,  ஆர்ப்பாட்டக்காரர்கள் நடுவழியில் நிறுத்தியுள்ளனர். காரை சோதனை செய்த பிறகு இவர் டாக்டர் என்பதை அறிந்துகொண்டு, பின்னர் செல்ல அனுமதித்துள்ளனர்.இதை அவர் எங்களிடம் ஸ்ரீநகர் வந்த பிறகு தெரிவித்தார் கண்களில் பயம் மின்ன.

நாங்கள் அந்த மருத்துவமனையை அடையும் முன்பே, போன் மூலம் மருத்தவர்களை முன் தயாரிப்பு செய்து இருந்தேன். அங்கு நாங்கள் நுழைந்ததும்,  அறுவைச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தோம். இரண்டரை நாளில் 46 பேருக்கு கண்களில் அறுவை சிகிச்சை செய்தேன். மருத்துவ உலகைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம்தான். காலை முதல் இரவு ஒரு மணி வரையில் அறுவைச் சிகிச்சை  செய்தோம். எல்லோரும் அசந்துவிட்டார்கள்.

பின்னர்  காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா அழைப்பின்பேரில், நானும் எமது டாக்டர்கள் குழுவும் சென்றோம். எங்களின் விரைவான சேவையைப் பாராட்டிய அவர், இது போன்ற மருத்துவ வளர்ச்சிக்கு  ஸ்ரீநகரில் என்னென்ன  செய்யவேண்டும் என்று கேட்டார். லேப் வசதி, மருத்துவர்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கினேன். என்னை விசிட்டிங் பேராசிரியராக இருக்கவும் மெகபூபா பணித்துள்ளார். மேலும்  எனது தலைமையிலேயே காஷ்மீர் மருத்துவர்களுக்குப்  பயிற்சி அளிக்க வலியுறுத்தினார். மொத்தம் 4 நாட்கள் அங்கிருந்து மருத்துவச் சேவை செய்தோம்.

சமூக வலைதளங்களில்  காஷ்மீர் மக்களுக்கு நிறைய சேவை செய்யவேண்டும் என்று எழுதி வருகிறார்கள். ஆனால் நான் எழுதவில்லை. நேரில் சென்று செய்துவிட்டு வந்தேன். அம்மாநில அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மீண்டும் அங்கு இம்மாதத்தில் செல்லவுள்ளேன்.



காஷ்மீர் கலவரத்தின்போது,  ராணுவத்தின் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்கள் பெரும்பாலும், கண்களில் 'ரெட்டினா' பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  'ரெட்டினா' பாதிப்பை சரி செய்யும் வசதிகள் காஷ்மீரில் இல்லை என்பதே இப்போதைய நிலைமை. அதனால் என் போன்ற டாக்டர்களின் செயல்பாடு அங்கே மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது." என்றார் பெருமிதத்தோடு கண் மருத்துவர்  நடராஜன்.

No comments:

Post a Comment