Monetize Your Website or Blog

Monday, 8 August 2016

தே.மு.தி.கவை தெறிக்கவிடும் தொண்டர்கள்! -உள்ளாட்சிக்கு வழிதேடும் விஜயகாந்த்


ள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக, தொண்டர்களை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது தே.மு.தி.க. தேர்தலில் போட்டியிடுவதற்கு, கட்சிக்காரர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், பதற்றத்தில் இருக்கிறார் விஜயகாந்த். ' கடந்த இருபது நாட்களாக கட்சிக்காரர்கள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது தலைமை அலுவலகம்' என்கின்றனர் நிர்வாகிகள்.

சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடம் விரிவாகப் பேசினார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' தி.மு.க கூட்டணியை தவறவிட்டதே தோல்விக்குக் காரணம்; மக்கள் நலக் கூட்டணியை நம்பி களத்தில் இறங்கியிருக்கக் கூடாது' என பலதரப்பட்ட காரணங்களை தே.மு.தி.கவினர் முன்வைத்தாலும், ' அதெல்லாம் முடிந்து போன விஷயம். அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள்' எனக் கடுமை காட்டினார் விஜயகாந்த். இந்நிலையில், 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்காவது வேட்பாளர்கள் முன்வருவார்களா' என்ற சந்தேகம் தே.மு.தி.க வட்டாரத்தில் வலம் வருகிறது.


' தொண்டர்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை சரிகட்டினால் மட்டுமே, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முடியும்' என்பதால் மாநில பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் தீவிர சுற்றுப்பயணத்தில் உள்ளனர். கடந்த வாரம் விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், ' உள்ளாட்சித் தேர்தலில் லோக்கல் செல்வாக்குள்ளவர்கள் தீவிரமாகக் களமிறங்க வேண்டும். மக்களை நேரடியாக சந்தித்துப் பேசுங்கள்' எனக் கட்டளையிட, அவர் பேச்சை இடைமறித்த தொண்டர் ஒருவர், ' தேர்தலில் போட்டியிட்டு இருக்கிற வேட்டியையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. ஏற்கெனவே மனைவி தாலியை வித்து தேர்தல் வேலை பார்த்தது போதும்' எனக் குரலை உயர்த்தியிருக்கிறார். சலசலப்புடனே கூட்டம் நிறைவடைந்தது.

இதையடுத்து, தே.மு.தி.க நிர்வாகிகளை சந்திக்கச் செல்லும் இடங்களில் எல்லாம், ' சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராதவிதமான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இதைக் காரணமாக வைத்து முடங்கிவிட வேண்டாம். மாற்று முகாம்களுக்குச் சென்றவர்கள் உங்களுக்கு வலைவிரித்தாலும் எச்சரிக்கையாக இருங்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணமாக இருந்தது. அதையும் மீறி தேர்தலை சந்தித்துவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் கால்களில் விழுந்தாவது நல்ல ஓட்டுக்களை வாங்கிக் கொடுங்கள்' என சமாதானப்படுத்தி வருகின்றனர். தலைமைக் கழக நிர்வாகிகளின் பேச்சுக்கு எந்தவித ரெஸ்பான்ஸையும் தொண்டர்கள் காட்டவில்லை.



இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், " கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு கேப்டன் வந்து 15 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டன. கடந்த மாதத்தில் ஒருநாள் மட்டுமே வந்தார். ஒருமணி நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார். இளங்கோவனும் பார்த்தசாரதியும் இருந்தால் அவர்களிடம் அரசியல் குறித்துப் பேசுவார். தொண்டர்களை அழைத்து நாட்டு நடப்புகளை விசாரிப்பார். இருவரும் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் கட்சி அலுவலகத்திற்கே கேப்டன் வருவதில்லை. பண்ருட்டியாரும் சந்திரகுமாரும் இருக்கும்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவான அறிக்கைகளை எழுதித் தந்தனர். இப்போது அவருடைய வீட்டில் இருந்தே அறிக்கை தயாராகிறது. ' உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பழைய செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும்' என்பதில் கேப்டன் உறுதியாக இருக்கிறார். அதற்கேற்ப, தீவிர பிரசாரத்தில் பங்கேற்கும் வகையில் உடல் நலனில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, தொண்டர்களைச் சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள் பார்த்தசாரதியும் இளங்கோவனும். விரைவில் கேப்டன் வெளியில் வருவார்" என்றார் விரிவாக.




No comments:

Post a Comment