அ.தி.மு.க - வைப் பொறுத்தவரை, கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதாக கட்சித் தலைமையால் நம்பப்படும் நபர்கள், அடுத்தடுத்து பொறுப்புகள் வழங்கப்பட்டு, கவுரவப்படுத்தப்படுவார்கள். அதேவேளை, அவர்களின் விசுவாசத்தில் எள் முனை அளவுக்கு சந்தேகம் எழுந்தாலும், அடுத்தடுத்து சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகிவிடும், என்பது தெரிந்த விசயம் தான்.
இதுதான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி., விவகாரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு, மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை எனது தலைவர் அறைந்தார்” என பேசியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன், ‘என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறார்கள். நான் நிச்சயமாக எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன்” என திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
கட்சித் தலைமை அவர் மீது நம்பிக்கை இழந்ததன் விளைவு அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. சாதாரண உறுப்பினரில் துவங்கி கட்சியில் அடுத்தடுத்து பொறுப்புகள் கொடுக்கப்பட்டதுடன், தூத்துக்குடி மேயர், மாநிலங்களவை உறுப்பினர், கொறடா என கட்சியிலும் அரசியலிலும் செல்வாக்கோடு இருந்த அவருக்கு இப்போது வீழ்ச்சியைக் காட்ட முடிவெடுத்து விட்டது, அ.தி.மு.க தலைமை. அதன் தொடர்ச்சியாகவே அவரே எதிர்பார்க்காத திருப்பங்களுடன் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கட்சித் தலைமை அவர் மீது நம்பிக்கை இழந்ததன் விளைவு அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. சாதாரண உறுப்பினரில் துவங்கி கட்சியில் அடுத்தடுத்து பொறுப்புகள் கொடுக்கப்பட்டதுடன், தூத்துக்குடி மேயர், மாநிலங்களவை உறுப்பினர், கொறடா என கட்சியிலும் அரசியலிலும் செல்வாக்கோடு இருந்த அவருக்கு இப்போது வீழ்ச்சியைக் காட்ட முடிவெடுத்து விட்டது, அ.தி.மு.க தலைமை. அதன் தொடர்ச்சியாகவே அவரே எதிர்பார்க்காத திருப்பங்களுடன் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக தற்போது அவரை எந்த வழிகளிலாவது ராஜினாமா செய்ய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சசிகலா புஷ்பாவின் குடும்பத்தினர் மூலமாக, சில தொழில் அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேசப்படுகிறது. அத்துடன், அவரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியது போல வழக்குகள் மூலமாக பணிய வைக்கும் முயற்சியும் அரங்கேறி வருகிறது.
அதன்படி, சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் காவல்துறை ஆணையர் மயில்வாகனனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கொடுத்த அந்த புகாரில், ''சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கிளப்பும் வகையில் பேசி வருகிறார். இது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் நெல்லையிலும் சசிகலா புஷ்பா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. தனக்கு, கான்டிராக்ட் எடுத்துக் கொடுப்பதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி ஏமாற்றிவிட்டதாக நெல்லையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் திருஞானத்திடம் புகார் செய்துள்ளார்.
புகார் அளித்துவிட்டு வந்த ராஜேஷிடம் பேசியபோது, ‘நான் டிராவல்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மாற்றுத் தொழில் தொடங்க முடிவு செய்தேன். அந்த சமயத்தில், சசிகலா புஷ்பாவை சந்தித்து உதவி கேட்டால் செய்து கொடுப்பார் என சிலர் சொன்னதால் அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது வீட்டில் இருந்த சசிகலா புஷ்பாவின் கணவரான லிங்கேஸ்வர திலகன், என்னிடம் விசாரித்து விட்டு அவரிடம் அழைத்து சென்றார்.
அவர் என்னிடம் பேசியபோது, ‘ நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள செடிகளை பராமரிக்கும் கான்டிராக்ட் பெற்றுத் தருகிறேன்’ என உறுதி அளித்தார். அவர் கேட்டுக் கொண்டபடி மறு வாரம் சென்று சந்தித்தபோது, ‘இந்த வேலைக்கு மற்றவர்களானால் 25 லட்சம் தர வேண்டும். நீங்கள் 5 லட்சம் குறைத்து 20 லட்சம் கொடுங்கள்’ என்றார். அவர் சொன்னதை நம்பி, முதல் தவணையாக 8 லட்சம் கொடுத்தேன். அப்போது அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் உடனிருந்தார்.
அப்போது, ‘கான்டிராக்ட் ஆர்டர் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சொல்கிறேன். அப்போது மீதித் தொகையை கொடுத்து விட வேண்டும்’ என்றார். நானும் அதனை ஒப்புக் கொண்டேன். கடந்த ஆண்டு மே மாதத்தில் எம்.பிக்கு போன் செய்து கான்டிராக்ட் விபரம் பற்றி கேட்டதற்கு, ‘இது பற்றி என்னிடமோ அல்லது எனது கணவரிடமோ போனில் எதுவும் பேச வேண்டாம். எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசிக் கொள்ளுங்க’ என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.
அதன்படி அவரை அடிக்கடி வீட்டுக்கு சென்று சந்தித்து பேசி வந்தேன். நான் செல்லும் போதெல்லாம், ‘நிச்சயமாக உங்களுக்கு இந்த கான்டிராக்ட் வாங்கிக் கொடுத்து விடுவேன். என்னை நம்புங்கள்’ என்று சொல்லி வந்தார். நானும் அவரை நம்பினேன். கடந்த 10 மாதத்துக்கு முன்பு ஒருநாள், எனக்கு கான்டிராக்ட் ரெடியாகி விட்டதாகவும் உடனடியாக மீதி உள்ள 12 லட்சத்தை தருமாறும் சொன்னார். நானும் அதனை நம்பி அந்த தொகையை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால், அவர் சொன்னது போல ஒரு வாரத்தில் எனக்கு கான்டிராக்ட் ஆர்டர் வரவில்லை. பலமுறை இது பற்றி கேட்டும் முறையான பதில் வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த நான், எனது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கேட்டேன். இதனால் கோபம் அடைந்த சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும், ‘இனிமேல் நீ பணத்தை கேட்டு இங்கே வரக்கூடாது. தொடர்ந்து இதேபோல வந்து கொண்டிருந்தால் உன்னை கொலை செய்து விடுவோம்’ என மிரட்டினார்கள்.

இந்த பிரச்னையில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இது பற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தி எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், எனது பணத்தை அவரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இன்று புகார் செய்தேன்’’ என்றார்.
சசிகலா புஷ்பா மீது தொடர்ச்சியாக தொடுக்கப்படும் புகார்கள், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment