Monetize Your Website or Blog

Saturday, 6 August 2016

ஒரு நம்பர் லாட்டரி: தகவல் சொல்லி போலீசாரை கண்காணித்த உயரதிகாரி!

சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ஒரு போன் கால் வந்தது. அதில், 'உங்கள் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தது அந்த ஆண் குரல். உடனடியாக விருகம்பாக்கம் போலீஸ் டீம், அதிரடியாக களத்தில் இறங்கியது. போனில் வந்த தகவலின் அடிப்படையில், விருகம்பாக்கம் பகுதியில் சோதனை நடத்தியது. அப்போது அங்கு ஒரு நபர், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்றது தெரியவந்தது. உடனடியாக அந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் 40 ஆயிரம் ரூபாயும் இருந்தது.

போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, அந்த நபரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் விருகம்பாக்கம், மதியழகன் நகரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி, ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் மணிகண்டன், கணேசன், சிவக்குமார், ஷேக்தாவூத் என்ற நபர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.


இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கையில் இறங்கிய போலீஸாருக்கு க்ளைமாக்ஸாக ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது, ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு  தகவலை சொன்னதே, போலீஸ் உயரதிகாரி ஒருவர்தான் என்பதுதான்.  தகவல் சொல்லியதோடு, இது விஷயத்தில் போலீஸாரின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்துள்ளார் என்பதையும் தெரிந்துகொண்ட போலீஸ் டீம், தற்போது ரொம்பவே அலர்ட்டாகி உள்ளனர்.

 தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை இருந்தபோதிலும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சென்னை மயிலாப்பூர் பகுதியில், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தூள் பறக்கிறது. இது போலீசுக்கு தெரிந்தாலும் ஏனோ அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. காரணம், இந்த ஒரு நம்பர் லாட்டரி பிசினஸில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதே.


முன்னாள் அமைச்சர் ஒருவர், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரபட்சமின்றி போலீஸார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க முடியும்.

 இதுகுறித்து ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஒருவர் கூறுகையில் "குறிப்பிட்ட இடத்தில் வைத்து வெள்ளைத்தாளில் நம்பர்களை எழுதி வைத்திருப்போம். அதில் ஏதாவது ஒரு நம்பரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து விட்டு செல்வார்கள். அவர்களது செல்போன் நம்பரையும் பெற்றுக்கொள்வோம். ஒரு நம்பரை தேர்வு செய்ய 50 ரூபாய் கட்டணம். காலை முதல் மதியம் வரை இந்த விற்பனை நடக்கும். பிறகு குலுக்கல் முறையில் நம்பர் தேர்வு செய்யப்படும். அப்போது, பரிசு கிடைத்த வாடிக்கையாளர்களுக்கு செல்போனிலேயே அந்த தகவலை எஸ்.எம்.எஸ்  அல்லது வாட்ஸ் அப் மூலம் தெரிவிப்போம். இதற்கென பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது" என்றார் சர்வசாதாரணமாக.


ஒரு நம்பர் லாட்டரியை ஒழிக்க மேற்சொன்ன ஒரு அதிகாரி மட்டும் போதாது...உயரதிகாரிகள் கொண்ட டீமே தேவைப்படும்போல!


No comments:

Post a Comment