திருமணமான தம்பதிகள் பரஸ்பர உடன்பாட்டில் விவாகரத்துக் கேட்டால், அதற்குப் பின்னால் உள்ள காரண காரியங்களை ஏன் எதற்கு என்று கேட்டு, விவாகரத்தை மறுப்பது நீதிமன்றத்தின் வேலையில்லை என்று ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்) ஒரு வழக்கின் தீர்ப்பில், நீதிபதி கே.கே.சசிதரன், நீதிபதி என். கோகுல்ராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. 2013 மே மாதம் திருமணமான தம்பதியர், 2014-ல் இருந்தே தனித்தனியாக வாழ தீர்மானித்து, தனித்தனியாக இருந்திருக்கின்றனர். பிறகு 2015ல் பரஸ்பர உடன்படிக்கையின்படி (Mutual Consent) இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.
திருநெல்வேலி, குடும்ப நல நீதிமன்றம், ‘என்ன காரணத்துக்காக பிரிந்திருக்கிறார்கள், விவாகரத்து கேட்கிறார்கள் என்பது மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு வந்தபோது, மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.
மேலும் நீதிபதிகள் குறிப்பிடும்போது, ‘திருமணமான கணவனும் மனைவியும், இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்று முடிவெடுத்தபிறகு, பரஸ்பர உடன்படிக்கையின்பேரில், அமைதியான முறையில் திருமணத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுகின்றனர். நீதிமன்றம் அவர்களைச் சேர்ந்து வாழச் சொல்லி கட்டாயப்படுத்துவதோ, அதற்கான காரணங்களைக் கேட்பதோ வேண்டியதில்லை. மாறாக ‘விவாகரத்து ஆணை’ வழங்குவது உசிதமானது’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment