Monetize Your Website or Blog

Friday, 12 August 2016

இது இத்தாலி போலீஸ்!

த்தாலியில் தனிமையில் வாடிய முதிய தம்பதியருக்கு போலீசார் சமையல் செய்து உணவு பரிமாறிய புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன.


ரோம் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்,  94 வயதான மைக்கேல் தனது 89 வயது மனைவி ஜோலேவுடன் வசித்து வருகிறார். கடந்த 70 வருடங்களாக இந்த தம்பதியினர் இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு  ஆதரவாக தற்போது  யாரும் இல்லை. இரு நாட்களுக்கு முன், இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது.  

அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் வீட்டின் அழைப்பு மணியை அடித்தும் பயனில்லை. கதவு திறக்கப்படவில்லை. வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து முதியவர்களை அச்சுறுத்துகிறார்களோ என எண்ணிய போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். 

வீட்டினுள் தம்பதிகள் அழுத கண்களோடு இருந்தனர்.  தனிமையில்  வாடிய அந்த தம்பதி, போலீசாரை பார்த்து வேதனை தாங்காமல் மேலும் கதறியுள்ளனர். முதியவர்களைத் தேற்றிய போலீசார் ஆறுதல் வார்த்தைகள் கூறினார். வீட்டிலும் சமைக்க எந்த உணவுப் பொருளும் இல்லாததையும் கண்டு போலீசார் அதிர்ச்சியுற்றனர். அதைத்தொடர்ந்து இத்தாலியின் பிரபலமான 'பாஸ்தா 'உணவை போலீசாரே சமைத்து முதிய தம்பதிக்குப் பரிமாறினர். 

முதிய தம்பதி  உணவருந்தும் புகைப்படங்களை  இத்தாலி போலீசார் , ஃபேஸ்புக்கில் பதிவேற்றினர். நெகிழ வைத்த இந்த பதிவு, பல லட்சம் லைக்குகளையும் ஆயிரக்கணக்கான ஷேர்களையும் பெற்றுள்ளது.  



No comments:

Post a Comment