Monetize Your Website or Blog

Monday, 1 August 2016

பெண் ஊழியர்களுக்கு மின்வாரிய அதிகாரியின் ஷாக்! -ட்ரான்ஸ்ஃபர் மர்மம்

ருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் மீதான பாலியல் புகாரின் மீது, வேலூர் மண்டல அலுவலகத்தில் இன்று விசாரணை நடந்து வருகிறது. ' அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், அவரைக் காப்பாற்றும் வேலைகளில் உயர் அதிகாரிகளும் அமைச்சரும் ஈடுபட்டுள்ளனர்' எனக் கொதிக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். 

தருமபுரி கோட்டத்திற்குட்பட்ட அரூர் மின்வாரியத்தில், செயற்பொறியாளராகப் பணிபுரிகிறார் கொளஞ்சி. இவர் மீது வாரியத்தின் இரண்டு பெண் ஊழியர்கள், தங்களை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்குவதாகப் புகார் கூறியுள்ளனர்.


இதுகுறித்து வாரியத்தின் தலைவர் சாய்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், " செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே எங்களுடைய ஃபீல்டு அலுவலகம் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, 'ஆய்வு வேலையாக வெளியில் செல்ல வேண்டும். கிளம்புங்கள்' எனச் சொல்லவும், ' இப்போதைக்கு அவசியம் இல்லை சார்'  எனச் சொல்லியும், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் ஒரு காட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்னார். டிரைவர் இறங்கிப் போய்விட்டார். அப்போது செல்போனில் இருந்த ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து, தவறாக நடக்க முயன்றார். அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜீப்பில் இருந்து இறங்கிவிட்டேன். என்னை அந்தக் காட்டிலேயே விட்டுவிட்டு அவர் கிளம்பிவிட்டார். அங்கிருந்து நடந்தபடியே அலுவலகம் வந்தேன். செயற்பொறியாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதேபோல், மற்றொரு பெண் ஊழியரும் அதிகாரியின் டார்ச்சர் குறித்து புகார் கூறியிருந்தார். 

' பெண் ஊழியர்களின் புகாரின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு அமைப்பின் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், வாரிய சேர்மனிடம் நேரில் புகார் அளித்தனர். புகாருக்கு ஆளான அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டும், அரூரில் இருந்து வெளியேற அவர் தயாராக இல்லை.
" கும்மிடிப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் செய்தும், செயற்பொறியாளர் கொளஞ்சி அங்கிருந்து செல்லத் தயாராக இல்லை. பெண்கள் அளித்த புகாரின் பேரில் ஒருநபர் கமிட்டி, விசாரணை செய்ய வந்தது. அந்த அதிகாரியோ, பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையே நடத்தவில்லை. இதுதொடர்பாக, மின்வாரிய சேர்மனிடம் மீண்டும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை" எனக் கொந்தளிக்கிறார் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுப்ரமணியம். தொடர்ந்து அவர் நம்மிடம், 
மின் கட்டண உயர்வு, வாரியத்தின் நஷ்டம் என ஒருபுறம் வதைத்தாலும், மறுபுறம் இதுபோன்ற அதிகாரிகளால் மின்வாரியத்தின் பெயர் கெடுகிறது. பாலியல் புகாருக்கு ஆளான அதிகாரியைக் காப்பாற்றும் வேலையில் அமைச்சர் அலுவலகம் இறங்கியுள்ளது. நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என அதிகாரிகளிடம் கேட்டால், ' அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நெருக்குதல் தருகிறார்கள். ட்ரான்ஸ்பர் ஆர்டர் போட்டும் அவர் செல்ல மறுக்கிறார்' என்கின்றனர். தற்போது புகாருக்கு ஆளான பெண் ஊழியர்களை மிரட்டும் வேலையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், பாதிப்புக்கு ஆளான பெண்களின் உறவினர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. நேற்று இருபது பேர் வரையில் அரூர் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். இதைப் பற்றியும் வாரியத்தின் கவனத்திற்குக் கொண்டு போனோம். ' விவகாரம் சாதிக் கலவரமாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. உடனே நடவடிக்கை எடுங்கள்' என்றோம். அதன்பேரில் வேலூர் மண்டல அலுவலகத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடக்கிறது. விசாரணையைத் தீவிரமாகக் கவனித்து வருகிறோம்" என்றார் கொந்தளிப்போடு.

பெண் ஊழியர் புகார் குறித்து, செயற்பொறியாளர் கொளஞ்சியிடம் பேசினோம். " அந்தப் பெண்கள் சொல்லும் புகார்கள் முற்றிலும் பொய். தற்போது எம்.எல்.ஏவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். பிறகு பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார். 

' வேலூரில் இன்று நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் பெண் ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவிட்டால், ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரடியாகக் களம் இறங்குவார்கள்' என்கின்றனர் சி.ஐ.டி.யு அமைப்பின் நிர்வாகிகள். 




No comments:

Post a Comment