Monetize Your Website or Blog

Wednesday, 1 June 2016

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று இறுதி வாதம்..! விரைவில் தீர்ப்பு

முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதம் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இதனால் தீர்ப்பு விரைவில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12ம் தேதியன்று நடந்த விசாரணையின்போது ஜூன் 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியிருந்தனர்.

இதுவரை மொத்தம் 23 நாட்கள் இந்த விசாரணை நடந்து உள்ளது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.பி.ஆச்சார்யா, பேராசிரியர் க.அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்), மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கனவே நிறைவு செய்து உள்ளனர்.



ஜெயலலிதா தரப்பு வாதங்கள் மீதான எதிர்வாதத்தை மீண்டும் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா முன்வைத்து வந்தார். கடந்த மாதம் 12ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது, விசாரணையை நாள் முழுவதும் வைத்துக் கொள்ளலாம். ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும். மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும் அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தது இருந்தனர். அதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் இன்று நடக்கிறது. நாள் முழுவதும் நடைபெறும் வாதம் முடிவடைந்தவுடன் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிப்பார்களா அல்லது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பாளர்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






No comments:

Post a Comment