பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. தேர்தலை தள்ளிவைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்' என டெல்லியை அதிர வைத்திருக்கிறது ஒரு குரல்.
சட்டமன்றத் தேர்தலில், 'நேர்மை அணி' என்ற கட்சியின் சார்பில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலில், 'நேர்மை அணி' என்ற கட்சியின் சார்பில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில், நேர்மை அணி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள், முன்னாள் அரசுப் பொறியாளர்கள் உள்பட 11 அமைப்புகளை உள்ளடக்கியது நேர்மை அணி கட்சி. இந்தக் கட்சியின் சார்பில்தான், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனுவில், '2016 சட்டமன்ற தேர்தல் களம் பணவலிமையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்களுக்கான ஆட்சியை வலியுறுத்துகிறது. கையில் இடப்படும் வாக்கு மை என்பது வலிமையான ஆயுதம். ஆனால், தமிழ்நாட்டில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பணம் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கட்சிக்காரர்களின் இடங்களில் இருந்து பணம் பிடிபடுகிறது. மிகப் பெரிய ஆபத்தில் ஜனநாயகம் சிக்கியிருக்கிறது. எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இதுபற்றி நேர்மை அணியின் ஒருங்கிணைப்பாளரும், அரசுத்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளருமான செ.ம.அரசுவிடம் பேசினோம்.
இதுபற்றி நேர்மை அணியின் ஒருங்கிணைப்பாளரும், அரசுத்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளருமான செ.ம.அரசுவிடம் பேசினோம்.
" பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியும் என்றால், தேர்தல் என்ற சம்பிரதாயம் எதற்கு? அதற்குப் பதிலாக வேட்பாளர்களை ஏலம் விட்டு தேர்வு செய்யலாமே? முதலமைச்சர் பதவி ஆயிரம் கோடி என்றுகூட ஏலம்விட்டு விடலாம். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பணத்தின் தாக்கம் இந்தத் தேர்தலில் தீவிரமாக இருக்கிறது. இதுவரையில் கரூர், எழும்பூரில் பிடிபட்ட பணத்திற்கு எஃப்.ஐ.ஆர்கூட பதிவு செய்யப்படவில்லை. எந்த வகையில் பணத்தை பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. 95 சதவீதம் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டோம் என ஆணையம் சொல்கிறது.
அப்படியானால், இவர்கள் உண்மையான ஆட்களைப் பிடிக்கவில்லை என்பதுதானே உண்மை. நேரம்தான் விரயமாகிறது. உண்மையான பணபரிவர்த்தனையை இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்புறம் எதற்கு தேர்தல்? ஐந்து கோடி வாக்காளர்கள் இருக்கும் இடத்தில், என்னுடைய கோரிக்கைக்கு கையெழுத்துப் போடுவதற்குக்கூட 26 பேர்தான் முன் வந்திருக்கிறார்கள். அப்புறம் எப்படி மக்களைத் திருத்துவது? இந்த விவகாரத்தில் தலையிட்டு தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார் ஆதங்கத்தோடு.
ஜனநாயகத்தில் பணமே நடுநாயகமாக வீற்றிருக்கும்போது, எங்கோ எழும்பும் எளிய குரல்களுக்கு ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது?

No comments:
Post a Comment