Monetize Your Website or Blog

Monday, 1 August 2016

வகுப்பறையிலேயே மது அருந்துகிறார்கள்!' - 'வீணை' காயத்ரியின் வேதனை!


கொலை மிரட்டலுக்கு ஆளான இசைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை காயத்ரியின் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. கொலை மிரட்டல் வழக்கில் கைதான முன்னாள் மாணவரோ, ' பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விடாமல், உதாசீனப்படுத்தியதால் துணைவேந்தர் அறையை நொறுக்கினோம்' என வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார் வீணை காயத்ரி. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசை பல்கலைக்கழகத்திற்குள் கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் புகுந்த சிலர், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரது அறைகளை அடித்து நொறுக்கிவிட்டு, துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.


இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதல்வரையும் நேரில் சந்தித்துப் பேசினார் வீணை காயத்ரி. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பரணிகுமார் உள்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளது போலீஸ்.
துணைவேந்தர் அலுவலகத்தைத் தாக்கியது தொடர்பாக, வாக்குமூலம் அளித்துள்ள பரணிகுமார், " 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் மிருதங்கம் தொடர்பாக படித்து வந்தேன். ஆசிரியர் ஒருவரோடு சேர்ந்து கொண்டு செயல்படுவதாக, என் மீது நடவடிக்கை எடுத்தார் துணைவேந்தர். எனக்கு வர வேண்டிய தங்கப் பதக்கத்தை தகுதியில்லாத வேறு ஒரு மாணவருக்கு வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவும் அனுமதிக்கவில்லை. எனவே, அவரைப் பழிவாங்குவதற்காக இதுபோன்று செய்தோம்" எனக் கூறியிருக்கிறார். 

' மாணவரைப் பழிவாங்கியதால்தான், கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்கிறாரே உண்மையா?' என துணைவேந்தர் வீணை காயத்ரியிடம் கேட்டோம்.


" நான் அவரைப் பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன?. பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் துணைவேந்தராக இருக்க முடியுமா? முற்றிலும் தவறான தகவல். இவர்களுக்குப் பின்புறத்தில் இருந்து இயக்குவதே கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன் என்ற ஆசிரியர்தான். மாணவர்களைத் தவறான வழிக்கு திசை திருப்புகிறார். வகுப்பறைக்குள் அமர்ந்து மது அருந்துவது, புகைப் பிடிப்பது என சில மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். சம்பந்தப்பட்ட ஆசிரியரை மதுரைக்கு மாற்றல் செய்தோம். அந்த ஆசிரியரின் வகுப்பறைக்குச் செல்வதையே அங்குள்ள மாணவர்கள் விரும்பவில்லை. இப்படி நடவடிக்கை எடுத்ததால், 'கூலிப்படையை வைத்துக் கொல்வோம்', 'நெருப்பு வச்சு கொளுத்துவோம்' என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர். மிரட்டல் கடிதம் வந்த அன்றே நான் போலீஸில் புகார் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் இந்தளவுக்கு வந்துவிட்டார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பரணிகுமார் மீது ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் உள்ளது. மிருதங்கப் படிப்புக்கே தகுதியில்லாத அவர் எப்படி தங்கப் பதக்கம் வாங்க முடியும்? இவர்களைத் தூண்டிவிடும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலைப் பண்பாட்டுத் துறை செயலருக்குக் கடிதம் எழுதினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என விவரித்தவரிடம், 

'முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேசினீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரின் பதில் என்னவாக இருந்தது?' என்றோம்.
" என் அலுவலகத்தைத் தாக்கி, மிரட்டல் விடுக்கப்பட்ட நாளில் இருந்து மிகுந்த வேதனையில் இருந்தேன். என்னிடம் பேசிய முதல்வர், ' இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு ஏராளமான வேலைகள் இருக்கின்றன. புதிய படிப்புகளைக் கொண்டு வந்து பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள். பழையபடி உன் முகத்தில் சந்தோஷத்தை மட்டும்தான் நான் பார்க்க வேண்டும்' என்றார். முதல்வரின் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது. எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு நல்லநிலைக்கு வரும் மாணவர்கள், நேரடியாக எங்களை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர். சில மாணவர்களின் ஒழுங்கீனங்களால்தான், இவ்வளவு பிரச்னையும்" என்றார் ஆதங்கத்தோடு. 




No comments:

Post a Comment