Monetize Your Website or Blog

Tuesday, 16 August 2016

ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, ஆந்திர மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றும்போது, ''ஆந்திர மாநிலத்தை 2-ஆகப் பிரித்ததால், ஆந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதேபோல், போலாவரம் பாசன திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கவோ அல்லது அதுதொடர்பாக ஆந்திர மாநிலத்திற்கும், தெலங்கானாவுக்கும் இடையே நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்யவோ இல்லை.



மேலும், ஆந்திர மாநில மறுகட்டமைப்பு சட்டம் 2014-ன்படி மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. அவற்றை நிறைவேற்றும்படியும், அதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆந்திர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போல வளர்ச்சி அடையும்வரை ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.

ஆந்திரத்துக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். விசாகப்பட்டினத்தில் புதிய ரயில்வே முனையத்தை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்து விட்டேன். மாநில பிரிவினையின்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று சமரசத்துக்கு இடமின்றி நாங்கள் போராடி வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய கடைசி பைசா கிடைக்கும்வரை நான் ஓயமாட்டேன். இதில் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நிதி கேட்டு வலியுறுத்தும் அதேவேளையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கான தேவையான பணிகளை ஆந்திர அரசு செய்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திராவை 2022-ம் ஆண்டில் நாட்டின் முதல் 3 மாநிலங்களில் ஒன்றாகவும், 2029-ம் ஆண்டில் முதல் மாநிலமாகவும், 2050-ம் ஆண்டில் உலகில் முதல் மாநிலமாகவும் ஆக்க வேண்டும் என்பதே எனது அரசின் இலக்கு" என்றார்.



No comments:

Post a Comment