Monetize Your Website or Blog

Thursday, 31 March 2016

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! இதுதான் எலெக்‌ஷன் எக்கனாமிக்ஸ்

தொழிலாளர்கள்கூட இல்லை... உற்பத்தி, விற்பனை, மார்க்கெட்டிங், பேலன்ஸ் ஷீட், ஆடிட்டிங் என கம்பெனிகளுக்கான தலைவலிகள் எதுவும் இல்லை. வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை இரைத்துவிட்டு, ஐந்தாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியை அள்ளலாம் என்பதுதான் பொலிட்டிக்கல் பிசினஸ் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை பணநாயகம் சூறையாட தொடங்கிவிட்டது.  

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பறக்கிறது. தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறது. கூட்டணி பேரங்கள் நடந்துவருகின்றன. நேர்காணல்கள் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டன. இந்த சம்பிரதாயங்களைத் தாண்டி ‘ஓட்டுக்குப் பணம் மற்றும் பொருட்கள்’ தருவதையும் திரைமறைவில் தொடங்கி விட்டன கட்சிகள். 


தேர்தல் ஆணையமும் அதிகளவில் பணம் கொண்டு செல்வதையும், பணப் பரிமாற்றம் நடப்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அது என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலையைத் தேர்தலுக்குமுன் எப்படியோ வெற்றிகரமாக நடத்திவிடு கின்றன. அந்தத் தில்லாலங்கடி வேலையை அரசியல் கட்சிகள் எப்படித்தான் காதும் காதும் வைத்த மாதிரி கச்சிதமாக செய்து முடிக்கின்றன என்பது உலக மகா ரகசியம். 

ஒரு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்கின்றன, இந்தப் பணத்தை அரசியல் கட்சிகள் எங்கிருந்து எடுக்கின்றன, இப்படி செலவு செய்யும் பணம் மீண்டும் அந்தக் கட்சிக்கு திரும்பக் கிடைக்குமா என்பதெல் லாம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கே தெரிந்த மனக்கணக்கு. அந்தக் கணக்கின் விடை தேடி நாமும் புறப்பட்டோம்.  

திருமங்கலம் ஃபார்முலா!

திமுக சின்ன லெவலில் தொடங்கி வைத்த ‘திருமங்கலம் ஃபார்முலா’ இப்போது ஒவ்வொரு பெரிய தேர்தலிலும் மிகப் பெரிய லெவலில் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் ரூ.2,000 வரை வாக்காளர்களுக்குக் கொடுப்பது ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதுதான். இதற்காக எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 5 கோடிக்கும் மேல். ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் சரி, அனைத்துக் கட்சிகளும் ஓட்டுரிமை உள்ளவர் களுக்குக் ‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்து’ தங்களுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்பது வழக்கமாகிவிட்டது. 

ஓட்டுக்காக பணம் கொடுப்பதை பெரிய கட்சிகள்தான் செய்கிறது என்று நினைக்கக் கூடாது. சிறிய கட்சிகள்கூட அவர்களின் ‘வசதி’க்கேற்க கொடுக்கத்தான் செய்கிறது. இந்த சிறிய  கட்சிகள் தங்களுக்கு வெற்றி சாதகமாக உள்ள சில தொகுதிகளில் மட்டும் செய்கின்றன. பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் இல்லாமல் போனதுக்கு கரன்சிகள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். பணம் தரவில்லை என்பதனால் நமக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.
ஒரு கட்சி, ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 வீதம் தருகிறது என்று கணக்கிட்டால், 5 கோடி வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம் தோராயமாக ரூ.10,000 கோடி! மாநிலம் முழுவதும் ஓட்டுப்பதிவு என்பது 70% வரைதான் எட்டும். ஆனால், ஒவ்வொரு தொகுதிக்கும் கணக்கில் 45 சதவிகிதத்தில் தொடங்கி 60% வரையில்தான் இருக்கும். அதனால் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் அத்தனை வாக்காளர்களுக்கும் பணத்தை இரைத்துவிட மாட்டார்கள். சுமார் ஐம்பது சதவிகிதத்துக்கும் கீழேதான் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் பாயும். அதுவும் கட்சிக்காரர்கள், நேர்மையானவர்கள் என வடிகட்டி விட்டு, ஏழைகள், பணத்துக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே அந்தப் பணம் போய்ச் சேரும். அந்த வகையில் பார்த்தால், ரூ.10,000 கோடிக்கு கீழேதான் கரன்சிகள் பாயும். 

ஆனால் பிரசாரம், பண விநியோகிக்கும் ஆட்கள், விளம்பரம் ஆகியவைகளுக்கு ஆகும் செலவுகளைச் சேர்த்தால், ரூ.10,000 கோடியை எட்டிவிடும். 10,000 கோடி ரூபாயா என்று வியக்காதீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த பணத்தை ஒன்றுக்கு இரண்டாக எடுத்துவிடுகின்றன அரசியல் கட்சிகள்.  

கமிஷனோ கமிஷன்!  


ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது பற்றியும் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து கட்சிகள் தேர்தல் சமயத்தில் கொண்டு வந்து கொட்டுகின்றன என்பது பற்றியும் சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவிடம் கேட்டோம்.
“இது ஊருக்கே தெரிந்த விஷயம். கட்சிக்காரர்களுக்குப் போஸ்டர் ஓட்டுவது மட்டும் வேலையல்ல; வாக்காளர்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதும் அவர்களுடைய வேலைதான். இங்கு அடிமட்டத்தில் ஒரு டிரைவர் வேலைக்கு லஞ்சம் கொடுப்பதில் இருந்து, பெரிய பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்டுகள், கல்வித் துறை, ரோடு கான்ட்ராக்ட், கார்ப்பரேஷன், பணி நியமனம், அரசு ஊழியர்கள் இடமாற்றம் என்று எல்லாத் துறையிலும் லஞ்சம் தருவது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடக்கிறது.  

இதனால்தான் ராஜாஜி, பொதுப்பணித் துறையைத் தன்னுடைய இரண்டாம் எதிரி என்று குறிப்பிட்டார். அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தது, இன்று அடிமட்டத்திலிருந்து உறிஞ்ச தொடங்கி இருக்கிறது. இப்படி உறிஞ்சப்படும் ஒட்டுமொத்த ஊழல் மற்றும் லஞ்சப் பணமும், மையப்படுத்தப் பட்ட ஊழலின் அடிப்படையில் ஆட்சியிலுள்ள கட்சிக்கு குவிகிறது. அதன்பிறகு கட்சிகாரர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும். அவர்களுக்குப் போக, தேர்தல் செலவுகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தைக் கட்சிக் காரர்கள் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று கொடுக்கிறார்கள்” என்றார்.

இந்த 10,000 கோடி ரூபாயையும் தொகுதி வாரியாகப் பிரித்து, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்காத வகையில் 234 தொகுதியிலும் உள்ள கட்சித் தொண்டர்களை வைத்தே இந்தப் பணம் பிரித்து தரப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்சிப் பிரமுகர்களுக்கு சராசரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு அவர்களுக்கான தொகையைக் கொடுத்து பட்டுவாடா செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அன்று இருட்டில், இன்று வெளிச்சத்தில்!  

ஜனநாயகத்தை வேரருக்கும் இந்த பணநாயகத்தை பற்றி காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் தமிழருவி மணியனிடம் கேட்டோம்.

“எம்.எல்.ஏ., எம்.பி சீட்டுக்கு தரும் தொகையை வைத்து எல்லாம் தேர்தல் செலவை முடித்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் கட்சிகள் ஊழல் செய்து சேர்த்த பணம்தான் பெரும்பாலும் செலவு செய்யப்படும். சேர்த்த பணத்தை அப்படியே கொடுக்கிறதா என்று நினைக்க வேண்டாம், கொடுப்பதே சேர்ப்பதற்காகத்தான். லஞ்சம் தராமல் அரசில் ஒருவேலையும் நடக்காது. திமுக தொடங்கிவைத்த இந்த லஞ்சத்தை, அதிமுக உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. திமுகவில் சில துறைகளில் ஊழல் உச்சத்தில் இருக்கும். ஆனால், அதிமுகவில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லலாம். திமுக இருட்டில் செய்ததை, அதிமுக பட்டப்பகலில் செய்கிறது. 

ஆனால், காசு வாங்கிக் கொண்டு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்வதைவிட வேறொரு பொய் இருக்கவே முடியாது. வாக்காளர்கள் மிகத் தெளிவானவர்கள். அவர்கள் முன்பே முடிவு செய்தவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால், ஓட்டுக்குக் கட்சிகள் கொடுக்கும் பணம், தங்களிடமிருந்து திருடிய பணம் என்பதால், எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறினார். 

ஓட்டுக்காக தரப்படும் பணம் தமிழகத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் தரப்படும் என்று சொல்ல முடியாது. கட்சி சாராதவர்களுக்கே இந்த பணம் தரப்படும். அப்போது ரூ.10,000 கோடிகூட செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது பெரிய கட்சிக்கு.
கதறும் கான்ட்ராக்டர்கள்!

கட்சிகளுக்கு முறைகேடாக கிடைக்கும் பணம் முழுவதும் பெரும்பாலும் கான்ட்ராக்ட்டுகள், டெண்டர்கள் மற்றும் பணியிட மாற்றங்கள், நியமனங்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக, பொதுப்பணித் துறையில், எந்தப் பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45% வரை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. 

இது பற்றி கான்ட்ராக்டர் ஒருவரிடம் கேட்டோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், பொதுப்பணித் துறை அல்லது நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட் என்றால் யாருக்கு எவ்வளவு சதவிகிதம் தரவேண்டும்  என்பதையெல்லாம் விவரமாகக் கூறினார்.

“நெடுஞ்சாலையில் ஒரு பிரிட்ஜுக்கு கான்ட்ராக்ட் எடுத்தால், அது தொடர்பான அமைச்சருக்கு மட்டுமே 8.5% கொடுக்க வேண்டும். பின்னர் எம்.எல்.ஏவுக்கு 3%, வட்டம் மற்றும் மாவட்டம் ஆகியோருக்கு தலா 2%, அமைச்சருடைய பிஏவுக்கு 1% என தந்தால்தான் காரியம் நடக்க ஆரம்பிக்கும். இதன்பிறகு அதிகாரிகள், சீஃப் இன்ஜினீயருக்கும், சூப்ரண்டன்ட் இன்ஜினீயருக்கும் தலா 1 சதவிகிதமும் தரவேண்டும்.
இதையெல்லாம் பைசல் பண்ணிய பிறகுதான் எங்களால் வேலையில் கைவைக்கவே முடியும். அதன்பிறகு, ஏஇ, ஏடிஇ, டிஇ ஆகியோருக்கு தனித்தனியே 2%, குவாலிட்டி கன்ட்ரோல் அதிகாரிக்கு 1%, பிறருக்கு மொத்தமாக 1% என கொடுக்க வேண்டும்.  இதுவே தார் ரோடு போடும் கான்ட்ராக்ட்டுக்கு அமைச்சருக்கு 14.5% சொலையா தரவேண்டும். அடுத்து எம்.எல்.ஏ, வட்டம் மற்றும் மாவட்டம் ஆகியோருக்கு மொத்தமாக 5% தரவேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு முன்பு சொன்னது போலவே கொடுக்க வேண்டும். 

பொதுப்பணித் துறையை எடுத்துக் கிட்டிங்கன்னா, அமைச்சருக்கு 11.5% பிற எம்எல்ஏ, வட்டம், மாவட்டம் எல்லாருக்கும் சேர்த்து 8 % கொடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வழக்கம் போல.  
இப்படி கான்ட்ராக்ட் ஒதுக்கீடுல கிட்டதட்ட 30 சதவிகிதம் வரைக்கும் கொடுத்துட்டு மிச்சம் இருக்கிற 70 சதவிகிதப் பணத்துல வேலைகளைத் தரமா செய்யணும். நாங்க காசுல குறியா இருந்தா இப்ப கட்ற பிரிட்ஜெல்லாம் வர்ற போற லாரிகளின் லோடு தாங்க முடியாம லொடக்குன்னு  விழுந்துடும். அதனால பிரிட்ஜ், ரோடு கான்ட்ராக்டல எல்லாம் காசு மிஞ்சறதே கஷ்டம். முன்னபின்ன தெரியாம கான்ட்ராக்ட் எடுத்தா, லாபம் எதுவும் கிடைக்காம அடுத்து கான்ட்ராக்ட் எடுக்கவே மாட்டாங்க’’ என்று கூறினார். 

பொதுப்பணித் துறை விடும் பல டெண்டர்களில் அதிகபட்சமாக 30% கமிஷன் வசூலிக்கப்பட்டாலும், சில டெண்டர்களுக்கு 45% வரையிலும் கமிஷன் வசூலிப்பதாக சொல்கிறர்கள். 

சில கான்ட்ராக்டர்கள், கமிஷன் அதிகமா இருக்கே என சில அமைச்சர்களிடம் முனகி இருக்கிறார்கள். ‘‘அய்யா, உங்களுக்கு கட்டுப்படியான பண்ணுங்க. இல்லாட்டி விட்டுருங்க. உங்களுக்கு குடுத்த ரேட்டைவிட இன்னும் கம்மியான ரேட்ல வேலை செஞ்சு குடுக்குறதுக்கு ஆளுங்க நெறைய இருக்காங்க!’’ என்று பதில் வந்ததும் வாயை மூடிக் கொண்டார்களாம் கான்ட்ராக்டர்கள். 

மதுரையில் அதிமுக பிரமுகர்களின் சிபாரிசில் கான்ட்ராக்ட், டெண்டர் எடுத்து வேலை செய்யும் ஒருவரிடம் அவர் தருகிற கமிஷன் பற்றி கேட்டோம். தான் யார் என்று சொல்ல விரும்பாத அவர் தந்த கணக்கு இதோ. 

“அரசு டெண்டர்கள் என்பதெல்லாம் ஒரு கண் துடைப்புதான். கட்சிகாரர்களுக்கு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குதான் டெண்டர் கிடைக்கும். அதுவும் டெண்டர் விடறதுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிடும். சும்மா நான்கு, ஐந்து பேர் டெண்டர் லிஸ்ட்டில் இருப்பது போல் காட்டப்படும். ஆனால், முன்பே முடிவு செய்யப்பட்ட நபருக்குத்தான் டெண்டர் போகும். முறைப்படி விளம்பரமும் தரப்படுவது இல்லை. அனைத்தும் மறைமுகமாகவே நடக்கும். 


கட்சிக்காரர்களுக்கு மட்டுமே 30 சதவிகிதத்துக்கு குறையாமல் கொடுக்கப்படும். இதுபோக அதிகாரிகள், அனைத்தையும் அப்ரூவ் செய்வது, பில் கொடுப்பது ஆகியவை இவர்கள் கையில் இருப்பதால், எங்களால் தப்பவே முடியாது. தரம் சரியாக இல்லையே என்று இழுத்தாலே, கொடுக்க வேண்டியதைக் கொடு என்றுதான் அர்த்தம். பணத்தைச் சரியாக கொடுத்துவிட்டால், ‘ஆஃப்’ ஆகிவிடுவார்கள். அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் கூட நாம் தேடிப் போய் பணம் கொடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி தீபாவளி, பொங்கல் என்று எல்லா விழா நாட்களிலும் அவர்களைத் தனியாக கவனிக்க வேண்டும். இல்லை என்றால் வேலையையே பல மாதங்களுக்கு நிறுத்தி விடுவார்கள். அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் போதும், நம்மை கொக்கி போட்டு தூக்கிவிடுவார்கள்.
மற்றொரு கான்ட்ராக்டரிடம் பேசியபோது, பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய ஐந்து மாதங்களில் கான்ட்ராக்ட்டுகள் அதிகம் விடப்படுவதாகக் கூறினார். “தேர்தல் சமயத்தில் வேக வேகமாக கான்ட் ராக்ட்டுகள், டெண்டர்கள் விடப்படும். ஆனால், அவை பெரும்பாலும் விளம்பரம் வெளியிடப்படாமல் வருபவை. அப்போதுதான் அவர்கள் பணம் ஒதுக்கீடு செய்து, அதிலிருந்து பெருந்தொகையை அடித்து கல்லாவும் கட்ட முடியும்.   

அதிகமாக பணம் புரளும் டிபார்ட்மென்ட் என்று சொன்னால், அது பொதுப்பணித் துறை, கார்ப்பரேஷன் மற்றும் வடிகால் நீர் வாரியம் போன்றவைதான். அங்கேதான் அதிகமாக பைப் வாங்கினோம், அது வாங்கினோம், இது வாங்கினோம் என்று கணக்கு காட்ட முடியும். என்னதான் நாம் வேலை செய்து முடித்தாலும் அவர்களுக்கு பணம் தந்்தால்தான் கையெழுத்து போடுவார்கள்’’ என்றார் அந்த நபர்.

கான்ட்ராக்டர்கள் இப்படி புலம்பினாலும், கான்ட்ராக்ட்டுகளை எடுக்க போட்டா போட்டி நடப்பதால் வழக்கமாக கொடுக்கும் கமிஷன் தொகை அதிகரிக்கத்தான் செய்கிறது  என்கிறார்கள். ஒப்பந்தத் தொகையில் சுமார் 30%  கமிஷனாக தந்தால், அந்தக் கட்டுமானத்தின் லட்சணம் எப்படி இருக்கும்? 

ஐந்து ஆண்டுகளில் ரூ.60 ஆயிரம் கோடி! 

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை, இந்து அறநிலையத் துறை என்று கமிஷன் இல்லாத துறையே இல்லை. அடிமட்டத்திலிருந்து தலைமையிடம் வரையிலும் லஞ்சம் புரையோடிப் போயிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் சராசரியாக 10-லிருந்து 30% வரை கமிஷன் புழங்குவதாக கணக்கு சொல்கிறார்கள். 

பொதுப் பணித்துறை அரசு சார் கட்டுமானங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய பணிகளை உள்ளடக்கியது. கடந்த 2015-16 பட்ஜெட்டில் இவை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து (பார்க்க பக்கம் 12, 13, 14, 15) குறைந்தபட்சம் 30% வரை கமிஷன் என்றால்கூட ரூ.9,000 கோடி கமிஷன் கிடைக்கும்.
தவிர, உணவு, எரிவாயு, வேளாண்துறை பொருட்கள் போன்றவற்றை மானியம் மூலம் வழங்க ஏறக்குறைய ரூ.59,185.47 கோடி  ஒதுக்கப் பட்டது. மேலும், இலவச பொருட்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் குறைந்தபட்சம் 10% ஊழல் நடந்தாலும், ரூ.7,000 கோடி வரவாக கிடைக்கும். 


இது தவிர, அரசு ஊழியர்கள் இடமாற்றம், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி களுக்கான அனுமதி என பல்வேறு துறைகள் மூலமாக கிடைக்கும் ‘வருமானம்’ என அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் வருவாய் ரொம்பவே நீளம். ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 கோடி ஆளுகிற கட்சிக்கு கமிஷனாகவும் லஞ்சமாக வும்  கிடைக்கும் எனில், ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் சுமார் ரூ.60,000 கோடி கிடைக்கும். ரூ.60,000 கோடி  சம்பாதிக்க ரூ.10,000 கோடி செலவு செய்ய அரசியல் கட்சிகள் யோசிக்கவா போகின்றன?
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே,  ஆட்சியைப் பிடிக்க ஏன் இத்தனை போராட்டம் என்று


ரசிகர்களால் ரஜினிக்கு இப்படி ஒரு சோதனை வரக்கூடாது!

பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதற்கு எதிரான வழக்கில் பதில் அளிக்குமாறு,  நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள்தான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். அந்த அளவுக்கு நடிகர்களின் படங்களுக்கும், கட் அவுட்டுகளுக்கும் பாலாபிஷேகம், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள் ரசிகர்கள்.


இதில் நடிகர் ரஜினிகாந்த்தின் படம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளியாகும்.  அன்று அவரது ரசிகர்கள் ரஜினி பேனர்கள் மீது பாலை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். இந்த நிலையில், பால் வீணாவதை பார்த்து வேதனை அடைந்த ஒருவர், பெங்களூரு நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து பாலை வீணாக்குவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...

‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.

விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!

இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, 
கே.பி. சுப்பிரமணியன், 
செல்போன்: 99944-49696.

செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.

இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.


சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ.வின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது என்றும் அவர் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நிராகரித்தனர்.  

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகனும் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவாராய் ஆகியோர் அமர்வின் முன் நடைபெறுகிறது. இதில், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் ஆஜராகின்றனர். 


இந்நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. 

இதையடுத்து, கர்நாடக அரசின் வழக்கறிஞர்கள் தவே, பி.வி.ஆச்சாரியா ஆகியோர் தங்களின் வாதங்களை எடுத்துவைத்தனர். அவர்களின் இறுதிவாதம் நிறைவுபெற்ற நிலையில், நாளை அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தன்னுடைய வாதத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், மீண்டும் நீதிபதிகளிடம் அன்பழகன் தரப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது; அன்பழகன் தரப்புக்கு அப்பீல் செய்யவே உரிமை இல்லை எனக் கூறி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.


இதையடுத்து க. அன்பழகன் சார்பாக மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா நாளை தனது வாதத்தைத் தொடங்க உள்ளார். அன்பழகன் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், “சொத்துக்களை வாங்கியதற்கான வருமான வழிகளை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியவில்லை. ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் மட்டுமே ஜெயலலிதா வசம் இருந்தன. இந்த நிறுவனங்கள் மூலம் எந்த வருமானமும் ஈட்டப்படவில்லை. 

1988 முதல் 1989-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜெயலலிதா, 9 லட்சத்து 12 ஆயிரத்து 129 ரூபாய்க்கு 4 கார்களை வாங்கினார்; அதேபோல் 1989-ல் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஜீப் ஒன்றை வாங்கினார். ஆனால் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, முதலமைச்சரான காலத்தில்தான் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு வந்த வருமானத்துக்கும் அவர் சேர்த்த சொத்துக்களுக்கும் சம்பந்தமே இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விபரங்களின் அடிப்படையில், நாளை க.அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா தனது வாதத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஜயகாந்த்தின் சபதம் என்ன தெரியுமா..? விளக்குகிறார் பிரேமலதா!

தல்வரான பின்தான் சட்டப்பேரவைக்குள் நான் கால் எடுத்து வைப்பேன் என்று கேப்டன் விஜயகாந்த் சபதம் ஏற்றுள்ளார் என்று தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவி பிரேமலதா தெரிவித்தார்.

தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவி பிரேமலதா பேசும்போது, ''தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு இணையாக எந்த ஒரு கட்சியும் இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கு கருணாநிதியை முன்னிறுத்துவதா, அல்லது மு.க.ஸ்டாலினை முன்னிறுத்துவதா என்று தி.மு.க.வில் குழப்பம் நிலவி வருகிறது

விஜயகாந்த் அன்று சட்டப்பேரவையில் எழுந்து பேசியவுடனேயே சபாநாயகர், அமைச்சர் பேசிய பிறகு நீங்கள் பேசுங்கள் என்றார். அப்போது விஜயகாந்த் அமைதியாக அமர்ந்தார். அப்போது பேசவேண்டியதைவிட்டுவிட்டு ஏதேதோ விஷயங்களை பேசியதால், கேப்டன் விஜயகாந்த் கொந்தளித்து எழுந்து, 'யோவ் உட்காருயா உங்களுக்கென்ன நான் பதில் வேண்டும்' என்றார்.


அப்போது நத்தம் விஸ்வநாதன் ஏதே பேசவந்த போது, ‘யோவ் நத்தம் உட்காருயா’ என்று கூறினார். இது தான் அன்றைக்கு நடந்தது. இது சட்டப்பேரவையில் இருந்த பாலபாரதிக்கு தெரியும். சட்டசபையில் இருந்த எல்லோருக்கும் தெரியும். அன்றையோடு சட்டசபைக்கு செல்லமாட்டேன். மீண்டும் முதல்வராகத்தான் சட்டப்பேரவைக்குள் கால் வைப்பேன் என்ற உறுதியோடு வெளியே வந்தார் கேப்டன்

மேலும், தே.மு.தி.க.வில் இருந்து அழைக்கப்படும் மாவட்ட செயலாளர்களுக்கு, தி.மு.க.வில் அதே பதவி வழங்கப்பட்டால், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்" என்றார் ஆவேசமாக.



ஜெ. சிறுதாவூர் பங்களாவில் இருந்த லாரிகள் ஒரே இரவில் மாயம்: பரபரப்புத் தகவல்கள்!

 தமிழக முதல்வர் ஜெயலலிதா,  அவ்வப்போது சென்று தங்கும் சிறுதாவூர் பங்களாவில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்தப்பட்டு இருந்த கன்ட்டெய்னர்  லாரிகள் இரவோடு இரவாக மாயமானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுதாவூர் பங்களாவுக்குள் சந்தேகத்தை உண்டாக்கும் வகையில் கன்ட்டெய்னர் லாரிகள் சென்றன என்றும்,  அதில் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டது என்றும், எனவே அது குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும் என்றும்  மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருந்தார்.

இந்த விஷயம் தமிழகம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இது தொடர்பாக,வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் தங்களின் பிரசார கூட்டங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசி வந்தனர். ஊடகங்களிலும் இந்த விவகாரம் வெளியாகியிருந்தது. இது அதிமுக தரப்பை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் சிறுதாவூர் பங்களாவில் இருந்து லாரிகள் வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பங்களாவின் நிலவறைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
 



போர்வாள் அட்டகத்தி ஆன கதை!

‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

1967-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவை ஆட்சியில் அமர்த்த, விருதுநகர் வீதிகளில் கல்லூரிப் பருவத்தில் கால்கடுக்க அலைந்த வைகோ, 50-வது பொதுவாழ்வு பொன்விழாவைக் கண்ட பிறகு வேகாத வெயிலில் விஜயகாந்தை முதலமைச்சராக்க அலையத் தயாராகிவிட்டார். அழகாக ஆரம்பித்த பயணம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. தவறுகளைச் சத்தமாகவும் நல்லவற்றை மறைமுகமாகவும் செய்யும் இயல்புகொண்ட வைகோ, தே.மு.தி.க-வுக்கு விருப்பம் உள்ள பி.ஆர்.ஓ-வாக மாறிவிட்டார்.

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சங்கநாதம் எழுப்பி மாற்று தி.மு.க-வைத் தொடங்கிய வைகோ, அதே கோபாலபுரத்து குடும்பத்தோடு கூட்டணிவைத்துச் சிரித்ததும், ‘ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்' என மறுமலர்ச்சி நடைப்பயணம் கிளம்பிய வைகோ, அதே போயஸ் தோட்டத்தோடு கூட்டணிவைத்து மகிழ்ந்ததும், ‘கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று நம் தலைவர்தான். அவர்களை வீழ்த்தி முதலமைச்சர் ஆகும் தகுதி நம் தலைவருக்குத்தான் இருக்கிறது’ என்று லட்சக்கணக்கான தொண்டர்களை நம்பவைத்து கட்சி ஆரம்பித்த வைகோ, இன்று ‘விஜயகாந்த்தான் கிங்... நாங்கள் கிங் மேக்கர்கள்' எனச் சொல்லி ஜோக்கர் ஆனதும், தனக்கான புதைகுழியைத் தானே தேடிக்கொண்டதன் அடையாளம்.


யாரை ‘கிங்' ஆக்குகிறோம் என்பதை வைத்துதான் ‘கிங் மேக்கர்'களுக்கு மரியாதை. நேருவின் தீர்க்கதரிசனம் லால்பகதூர் சாஸ்திரிக்கு இருந்தது. நேருவின் துணிச்சல் இந்திராவுக்கு இருந்தது. இவர்களை ‘கிங்' ஆக்கியதால் ‘கிங் மேக்கர்' ஆனார் காமராஜர். ஊழல் புகாரால் இரண்டு முறை உச்சந்தலையில் அடிவாங்கி பதவிவிலக நேர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை உட்காரவைத்ததால் ஜெயலலிதா ‘கிங் மேக்கர்' ஆகிவிடுவாரா என்ன?
இவர்கள் அறிவித்திருக்கும் ‘கிங்' யார்? சட்டமன்றத்துக்கும் போகாத, மக்கள் மன்றத்துக்கும் வராத விஜயகாந்தை, மக்களின் எல்லா பிரச்னைகளுக்காகவும் போராடிவந்த வைகோவும், ஜி.ராமகிருஷ்ணனும், முத்தரசனும், தொல்.திருமாவளவனும் தங்களின் ‘கிங்' எனத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். யார் நம் பின்னால் வருகிறார்கள் என்பதைவிட யார் பின்னால் நாம் போகிறோம் என்பதே முக்கியம். இவர்கள் செய்திருப்பது அபத்தம்!

மக்கள் நலக் கூட்டு இயக்கம், கடந்த ஆண்டு (2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள்) உதயம் ஆனது. மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட் டங்களை முன்னெடுப்பதுதான் இவர்களது நோக்கம். மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் மரணம்தான் இந்தத் தலைவர்களை ஒன்றிணைத்தது. ஆகஸ்ட் மாதம் 4-ம் நாள், மதுவிலக்குக்காக முழு அடைப்புப் போராட்டம் அறிவித்தார்கள். தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்கள். இந்தக் கூட்டு இயக்கமே ஏன் கூட்டணியாக மாறக் கூடாது என்ற சிந்தனை பரவி, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கினார்கள். ‘இதுவே எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர்' என்றார்கள். ‘முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக விரோதம்' என்றார்கள். `கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று நாங்கள்தான்' என்றார்கள். ‘மாற்றமே நாங்கள்தான்' என்றார்கள். நான்கு தலைவர்களும் பிரசாரப் பயணம் போனார்கள். கருணாநிதியை விரும்பாத, ஜெயலலிதாவை விரும்பாத, விஜயகாந்தையும் விரும்பாத சக்திகளால் மாற்று அணியாக மக்கள் நலக் கூட்டணி பார்க்கப்பட்டது.
நல்லதோர் வீணை செய்து நலங்கெடப் புழுதியில் எறிந்தது மாதிரி, அதைக் கொண்டு போய் விஜயகாந்த் காலில் வைத்துவிட்டார்கள். `மக்கள் நலக் கூட்டணி இனி ‘கேப்டன் விஜயகாந்த் அணி' என்று அழைக்கப்படும்’ என அறிவித்துவிட்டார் வைகோ. கருணாநிதி அணி, ஜெயலலிதா அணி... இதோடு விஜயகாந்த் அணி. அவ்வளவுதான் மாற்றம். இதுதான் இந்த நான்கு பேரும் தமிழ்நாட்டுக்குத் தர நினைத்த மாற்றமா? விஜயகாந்தை தி.மு.க-வுடன் சேரவிடாமல் தடுத்துவிட்ட ஒரு மகிழ்ச்சியே, ம.தி.மு.க-வின் வளர்ச்சிக்குப் போதுமா? விஜயகாந்த் முதலமைச்சர் ஆகிறாரா இல்லையா என்பது வேறு விவகாரம். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டவர்களோடு சேர்ந்து, இனி விஜயகாந்தைப் பற்றி எதிர்காலத்தில் பேசும் தகுதியையும் வைகோ இழந்துவிட்டார்.

மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க-வை இணைத்தது, இந்தக் கூட்டணிக்கு உண்மையான பலம்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. கூட்டிப்பார்த்தால் 6 சதவிகித வாக்குகளைக் கொண்டுள்ள இந்த நான்கு கட்சிகளோடு விஜயகாந்த் சேருவதன் மூலமாக, 5 சதவிகிதம் கூடி... 11 ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதன் மூலமாக `மாற்றுச் சக்தி’ என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டது இந்த அணி.

‘நாங்கள்தான் மாற்று அணி’ எனச் சொன்னதுதான் இதுவரை இவர்களுக்கு இருந்த பலமே. அதையே இழக்கத் தயாராக இருந்தார்கள் என்றால், இவர்களுடைய பின்னணியே சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. மு.க.தமிழரசு மகன் திருமணத்தில் தனக்கு முதல் வரிசையில் நாற்காலி போடவில்லை, தமிழிசை சௌந்தர ராஜனுக்கு முன்னால் தன்னைப் பேசச் சொல்லி அவமானப்படுத்தினார்கள் என்று எல்லாம் ஈகோ பார்த்த வைகோ, முதலமைச்சர் நாற்காலியையே விஜயகாந்துக்குத் தூக்கித் தர முன்வந்தது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. வைகோவும் விஜயகாந்தும் பால்ய நண்பர்கள் அல்ல.

`19 மாதங்கள் வைகோ சிறையில் இருந்துவிட்டு வந்தபோது, எல்லோருமே அவரது வீட்டுக்குப் போய் வாழ்த்து தெரிவித்தார்கள், விஜயகாந்த் நீங்கலாக’ என்கிறார்கள் ம.தி.மு.க தொண்டர்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகாலம் இருவரும் பரஸ்பரம் சந்தித்ததே இல்லை. 

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் சந்தித்தார்கள். தேர்தலுக்குப் பிறகும் அந்த நட்பு தொடரவில்லை. இப்போது இரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்தார்கள். மொத்தமாக நான்கைந்து நாட்கள் மட்டுமே நெருக்கமாகப் பார்த்த ஒரு மனிதருக்கு, முழு வக்காலத்து வாங்க வைகோ முடிவுக்குவருகிறார் என்றால், அவருக்கு விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவது என்ற லட்சியத்தைவிட, கருணாநிதி, ஸ்டாலினின் நாற்காலி கனவைத் தடுக்கும் தந்திரம் மட்டுமே தூக்கலாகத் தெரிகிறது. கருணாநிதியை வீழ்த்த தன்னையேவா காவுகொடுப்பது? அடுத்தவன் மீது சாக்கடையை அள்ளி வீசிவிட்டு, தனது முகத்திலேயேவா கையைத் துடைப்பது?

மக்கள் நலக் கூட்டணிக்கு முதலில் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை. ‘இதன் தலைவராக அண்ணன் வைகோ இருக்கட்டும்' என திருவாரூர் கலந்துரையாடலின்போது திருமாவளவன் சொன்னார். ‘நான் தலைவராக இருக்க மாட்டேன்; ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்’ என்று வைகோ மறுத்தார். ‘வெற்றிபெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்கள்’ என்றும் சொன்னார்கள். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த ரவிக்குமாரும், எஸ்.எஸ்.பாலாஜியும் `திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்க வேண்டும்’ என சர்ச்சைக்கு தூபம் போட்டார்கள். `இதை ஏற்கிறேன்’ என்றோ... `மறுக்கிறேன்’ என்றோ வைகோ அறிவிக்கவில்லை. இதை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தாத திருமா, ‘நாடு இன்னமும் பக்குவம் அடைய வில்லை' என விரக்திவாதம் பேசினார். தனக்கு வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, வைகோ பெயரை திருமா முன்மொழியவும் இல்லை. திருமாவை அறிவிக்க மனம் இல்லாத வைகோவும், வைகோவை ஏற்க விரும்பாத திருமாவும் சேர்ந்து விஜயகாந்தை முன்மொழிகிறார்கள். `நல்லகண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என முத்தரசன் அறிவித்தார். ஆனால், இந்த ‘நல்லவர்கள்’ அனைவருமே அப்போது கருத்துச் சொல்லா மெளனிகளாக இருந்தார்கள்.

திருமா இதுவரை மீசையை முறுக்கிக் கேட்டது என்ன? ‘நாங்கள் அனைவருக்கும் இதுவரை பயன்பட்டோம். இனி பயன்பெறுவோம். இனி யாரோடு கூட்டணி அமைத்தாலும் கூட்டணி ஆட்சிதான்' எனச் சொல்லி கருத்தரங்கு தொடங்கினார். அதற்கு ஜி.ராமகிருஷ்ணனை அழைக்கப்போனபோதுதான் மக்கள் நலக் கூட்டமைப்புக்கான விதை விழுந்தது. திருமா சொல்லித்தான் வைகோவை அழைக்க ஜி.ராமகிருஷ்ணன் போனார். கூட்டமைப்பு தொடங்கியது. எனவே இந்தக் கூட்டணியின் கருவே, கூட்டணி ஆட்சிதான். அந்த லட்சியச் சொல், விஜயகாந்துடன் இந்த நான்கு தலைவர்களும் கையெழுத்துப்போட்ட ஒப்பந் தத்தில் இல்லை. ‘விஜயகாந்த்தான் முதலமைச்சர்' என்பதை ஒப்புக்கொண்ட நான்கு தலைவர்கள், அப்படி அமையும் ஆட்சி இந்த நான்கு கட்சிகளும் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியாக அமையும் என விஜயகாந்திடம் ஏன் கையெழுத்து வாங்கவில்லை? ‘கூட்டணி ஆட்சிக்கு விஜயகாந்த் ஒப்புக் கொண்டார்’ என வைகோ பேசும்போது சொல்கிறார். அவ்வளவுதான். ஒப்பந்தமாக எழுதப்படவில்லை.

மார்ச் 10-ம் தேதி ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில், ‘தனியாகத்தான் நிற்பான் இந்த விஜயகாந்த்’ என்று சொன்ன விஜயகாந்த், கோயம்பேட்டில் மார்ச் 23-ம் தேதி, ‘கூட்டணி அமைத்துள்ளோம்' என எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்ல முடிகிறது என்றால், அவரது ‘சின்னக் கவுண்டர்' வாக்கு தவறாமை சினிமாவில் வேண்டு மானால் மாறாது. சிந்தனைச் செல்வனுக்கும், வன்னி அரசுக்கும், ஆளூர் ஷா நவாஸுக்கும் கேட்காமலேயே அமைச்சர் பதவியை விஜயகாந்த் தருவார் என நம்புகிறாரா திருமா?

திருமாவுக்கு மறந்திருக்கும்... விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அதற்கு எதிராக திருமாவளவன் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதைவிட ஒரு ‘காமெடி' அந்த அறிக்கையில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணியும் கையெழுத்துப் போட்டிருப்பார். ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் சேர்ந்து அறிக்கைவிட்ட விநோதத்தை தமிழகம் அன்று பார்த்தது. பொதுவாழ்வில் வெள்ளிவிழா கண்ட அந்த திருமா, இப்போது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார். ‘விஜயகாந்தின் முடிவு 50 ஆண்டுகள் அரசியல் வரலாற்றை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது’ என்கிறார்.


ஆம்! புரட்டிப்போட்டுவிட்டதுதான்.  ம.தி.மு.க-வையும் விடுதலைச் சிறுத்தைகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும்!

தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் பாவம் செய்பவர்களில் தேர்ந்தவர்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள். கருணாநிதியுடன் சொந்தப் பகையால் சண்டைபோட்டுவிட்டு வெளியேறிய எம்.ஜி.ஆருக்கு, தத்துவார்த்த முகமூடியை முதலில் மாட்டியவர் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாண சுந்தரம். ‘எம்.ஜி.ஆர் மீது துரும்பு பட்டாலும் கீறல் பட்டாலும் சும்மா இருக்க மாட்டோம்’ எனப் பேசியவர் சித்தாந்தவாதி பாலதண்டாயுதம். திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக தனது கட்சி வேட்பாளர் என்.சங்கரய்யாவை வாபஸ் பெறவைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. ஒரு கொள்ளியில் இருந்து காப்பாற்ற இன்னொரு கொள்ளியை மூட்டுவதே கம்யூனிஸ்ட்களின் மாற்றுப்பாதை. அன்றைய கருணாநிதி ஆட்சி மீதான மக்களின் கோபத்தை எம்.ஜி.ஆர் எளிமையாக அறுவடைசெய்ய பாதை அமைத்துக் கொடுத்தவர்கள்தான் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்கள். ‘மக்களிடம் இருந்த தி.மு.க எதிர்ப்பு உணர்ச்சியை நாம் திரட்டி வைத்திருந்தோம். அறுவடைக்கு ஒருவர் திருட்டு எண்ணத்துடன் ஓடிவருகிறார்’ என அன்றே எச்சரித்தார் காமராஜர். அன்று எம்.ஜி.ஆர்; இன்று விஜயகாந்த். அன்று பி.ராமமூர்த்தி; இன்று ஜி.ராமகிருஷ்ணன். அன்று கல்யாணசுந்தரம்; இன்று முத்தரசன்.

அன்று மூலதனம் பேசிய கம்யூனிஸ்ட்கள், இன்று மகாபாரதம் பேசுகிறார்கள். விஜயகாந்தை தர்மனாகவும், வைகோவை அர்ஜுனனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை நகுலனாகவும், தொல். திருமாவளவனை பீமனாகவும் தன்னை சகாதேவனாகவும் முகம்காட்டுகிறார் முத்தரசன். சபாஷ்! நீங்கள் கட்சி நடத்தவில்லை. கதாகாலட்சேபம் நடத்துகிறீர்கள் என்பது தெரிகிறது.

மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்... உங்களை இயக்கும் கிருஷ்ணன் யார்?



விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளர் திமுகவில் வீழ்ந்த கதை இப்படிதான்!

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளரும், விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளருமான யுவராஜ் இன்று அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் யுவராஜ். விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளரான இவர், இன்று காலை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், " விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்றும் கருதினோம். தொண்டர்களின் விருப்பமும் அதுவாக இருந்தது. ஆனால் அவர் தி.மு.க.வுடன் கூட்டணி சேராமல் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்று எனக்கு காரணம் தெரியாது. அவரது இந்த முடிவு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அவரது கூட்டணி முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால் நான் தி.மு.க.வில் இணைந்தேன். என்னை போன்ற பெரும்பாலான தொண்டர்களும் தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வரும் எண்ணத்தில் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் தே.மு.தி.க.வினர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன்" என்று கூறினார்.


இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தே.மு.தி.க.வினர் 130 பேர்,  ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் அறிவாலயம் சென்று தி.மு.க.வில் இணைந்தனர். 


சில மணி நேரத்தில் திமுகவுக்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், திமுகவில் சேர்ந்த சில மணி நேரத்தில் புதிய மாவட்ட செயலாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 

தே.மு.தி.க. வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த யுவராஜ், இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன்" என்று கூறியிருந்தார்.

திமுகவில் யுவராஜ் இணைந்த சில மணி நேரத்தில் வடசென்னை மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நியமித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "'தேசிய முற்போக்கு திராவிட கழதக்தின் வடசென்னை மாவட்ட கழக செயலாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி துணை செயலாளர் மு.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ப.மதிவாணன் ஆகியோர் இன்று (30.3.16) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.


இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தென் மாவட்ட இளைஞரின் இந்த கேள்வியால் கதிகலங்கிய அன்புமணி!

இதுவரை நீங்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எட்டிப்பார்த்ததுண்டா என்று கேள்வி எழுப்பி அன்புமணியை கதிகலங்க வைத்தார் இளைஞர் ஒருவர்.

மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற 'உங்கள் ஊர் உங்கள் அன்புமணி' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, இந்த அரசாங்கம் மக்களுக்காக செயல்படவில்லை. இது மக்களுக்கான அரசு இல்லை. இது ஜெயலலிதாவிற்கான அரசாங்கமாகதான் செயல்படுகிறது. மதுபானக்கடைகளின் மூலம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. இவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும். பாமகவை வெற்றி பெற வைப்பதன் மூலமே தமிழகத்திற்கு நல்லதொரு மோட்சம் கிடைக்கும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், இதுவரை நீங்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எட்டிப்பார்த்ததுண்டா என்று கேள்வி எழுப்பி அன்புமணியை கதிகலங்க வைத்தார். மேலும், நீங்கள் வன்னியர்களுக்குதானே ஆதரவாக பேசி வருகிறீர்கள், எல்லா சமுதாயத்து மக்களுக்கு சமமாக நடப்பீர்களா? மற்றும் உங்கள் கட்சியில் வார்டு செயலாளர் பதவிக்கு கூட ஆள் இல்லை என்று கேள்விகளை அடுக்க அன்புமணி, என்ன சொல்வதென்று திகைத்து, யாரோ கேட்க சொன்ன கேள்விகளை கேட்கிறீர்கள். தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். பாமக என்றுமே அப்படி இருந்ததே இல்லை என்று சமாளித்தார்.

மேலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி, கூட்டணி பற்றி எந்த கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவேதான் எந்த கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை. மேலும் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பில்லை என்றார்.

திமுக, அதிமுகவிடம் பிற கட்சிகள் தானே சென்று வாய்ப்பு கேட்கின்றன என்று கேட்டதற்கு, கோபத்தோடு பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காத்தார் அன்புமணி.

வழக்கம் போல கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. சென்ற முறை பாமக கூட்டத்தின் இறுதியில் பிரியாணிக்காக சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



உஷாரான பிள்ளைகள்: தேர்தல் செலவுக்காக கையேந்தும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

திமுகவின் நிறுவனரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகியம்மாள் அணி என்று அதிமுக  இரண்டாக உடைந்து,  அரசியல் களம் அதகளப்பட்டுக்கொண்டிருந்தபோது,  ஜானகியம்மாளுக்கு ஆதரவாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன்.
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட அவர் தலைமையில் பல தலைவர்கள் கச்சைகட்டிக்கொண்டிருந்தபோது,  ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து அவரை அரசியலில் காலுான்றச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன். 

அதிலும் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரைவிட ஒருபடிமேலாக தன் அதிகார பலத்தால் ஜெயலலிதாவுக்காக பெரும் கஷ்டங்களை சந்தித்து அவரை அரசியலில்‘‘ லைம் லைட்டுக்கு ’’ கொண்டு வந்தவர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர் ஆகிய இருவர்.  இவையெல்லாம் ஜெயலலிதாவே நினைத்துப்பார்க்க விரும்பாத விஷயங்கள் மற்றும் அதிமுகவின் சீனியர்கள் மட்டுமே அறிந்த சேதி. 


காலச்சூழலில் ஜெயலலிதாவிடம் முரண்பட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திமுகவிலும், திருநாவுக்கரசர் தனிக்கட்சி, பாஜக தற்போது காங்கிரஸ் என ஐக்கியமானது காலத்தின் கோலம். 
தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக,  சட்டசபையில் ஜெயலலிதாவின் பலத்தை காட்ட அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை குதிரைபேரம் பேசி விருதுநகரில் தன் ஸ்பின்னிங் மில்லில் தங்க வைத்து புதிய அரசியல் ஃபார்முலாவை அரங்கேற்றியவர் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரோடு நெருக்கமாக இருந்த அவரின் நிலைதான் இப்போது பெரும் பரிதாபத்திற்குரியது. திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., இதே சாத்தூர் தொகுதியில் ( இப்போது அது அருப்புக்கோட்டை தொகுதி)  4 முறைக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்,  அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு,  தொகுதிக்கு புதுமுகமான அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வனிடம் 11 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தற்போது 2016-ம் சட்டசபை தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தயாராகும் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தேர்தல் செலவுக்காக தனது சொத்துக்களை சத்தம் இல்லாமல் விற்று பணம் திரட்டி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... 

'என்ன பாஸ் நீங்க... சாதாரண கவுன்சிலர்கிட்டயே கோடிகளில் புரளும்போது அமைச்சர், எம்.எல்.ஏ., என்று பல முறை பதவி வகித்த அவரிடம் இல்லாத பணமா?' என்று நீங்கள் கேட்கலாம்.  ஆனால் அதுதான் உண்மை. பாரம்பர்யமாக பஞ்சு வியாபாரத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  பணம் வசதி படைத்தவர்தான். ஆனால் தாராளமாக பணம் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர். கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நாராயணன், ரமேஷ் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. 
கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக பதவி வகித்த அவர், தனது மகன்கள் மற்றும் மகளுக்கு அவர்களது பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தார். அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்கு கதிர் சில்க்ஸ் என்ற பெயரில் புதிதாக பெரிய துணிக்கடையும், புது ஸ்பின்னிங் மில்லும் ஆரம்பித்து கொடுத்தார்.

ஆட்சி மாறினால் ஏதாவது பிரச்னை வருமோ என்று நினைத்து தனக்கென்று தனியாக பணம் மற்றும் சொத்துக்களை வைத்துக்கொள்ளவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை செலவழித்தார். இந்நிலையில் திமுக தோற்று அதிமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலில் தோல்வி அடைந்த அவரால் வழக்கம் போல் தாராளமாக செலவு செய்ய முடியவில்லை. தன் மகன்கள் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைமை.

இந்நிலையில் 2016 சட்டசபை தேர்தலில்,  அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,  தேர்தலி செலவுக்காக பணம் திரட்டுவது தொடர்பாக குடும்பத்தினரிடம் கடந்த வாரத்தில் விவாதித்திருக்கிறார். “ஏற்கனவே கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்ததில் பணம் நெருக்கடி. பட்ஜெட் போட்டு செலவு செய்யாமல் இப்படி தாராளமாக கோடிக்கணக்கில் செலவு செய்தால் உங்கள் காலத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் நடுத்தெருவுக்குதான் வரவேண்டும் ”என்று  அப்போது அவரது மகன்கள் கை விரித்ததாக சொல்லப்படுகிறது.

பெற்ற பிள்ளைகளே இப்படி சொல்லி விட்டார்களே என்று மனம் நொந்து போனார் அண்ணாச்சி. பிறகு விஷயம் அறிந்த குடும்ப நண்பர்கள்,  கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களது பெயரில் இருக்கும் சில சொத்துக்களை விற்பதற்கு அவர்கள் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்காக தொடங்கப்பட்ட கதிர் சில்க்ஸ் மற்றும் விருதுநகர் தந்தி மரத்தெருவில் உள்ள 5 பெரிய வீடுகளில் 3 வீடுகள் என்று சில சொத்துக்களை விற்றிருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
'கஷ்டப்பட்டு' சம்பாதித்த சொத்துக்களை இப்படி அரசியலுக்காக விற்கிறாரே என்று இதனால் கொஞ்ச காலமாக அவரது குடும்பத்தில் புகைச்சல்.

இதில் அண்ணாச்சிக்கு ஆறுதலான விசயம்,  சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் அவரது மகள் தனது ஒரு பெரிய சொத்தை விற்று 3 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு தருவதாக உறுதியளித்துள்ளாராம். மகளின் ஆறுதல் வார்த்தையால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கொஞ்சம் மனம் தேறியிருக்கிறார். 

இப்போதெல்லாம் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று சொல்லி கலங்குகிறாராம். அதோடு ‘‘ எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு சொல்லி வருத்தப்படுகிறாராம்.

கவலைப்படாதீங்க அண்ணாச்சி மீண்டும் 

அவசரப்பட்ட நடுவர்களை அசரவைத்த போட்டியாளர்...!

 "காட் டேலண்ட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்விட்சர்லாந்தில் பிரபலம். இதில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், ஓவியம் ஒன்றை வரையத் தொடங்கினார். சில நொடிகளில், அவருடைய ஓவியம் மிகவும் குழந்தைத்தனமாகத் தெரியவர, நடுவர்கள் ஒருவர் பின் ஒருவராக "ரிஜெக்டட்" பட்டனை அழுத்தினர். 


நான்கு நடுவர்களும் ரிஜெக்டட் பட்டனை அழுத்திய பிறகும் மிக வேகமாக ஓவியத்தை வரைந்து முடித்து, அதனை தலைகீழாக்கி, அதன் மீது சாக் பொடியினைத் தூவினார் போட்டியாளர். அவ்வளவுதான், அதுவரை மிகவும் வேடிக்கையான ஒரு ஓவியமாக இருந்த அந்த ஓவியம் திடீரென, ஒரு ஆணின் முகத்தை கொண்ட மிக அழகான ஓவியமாக மாறியது.
 
ஆச்சர்யத்தால் வாயடைத்துப்போனார்கள் நடுவர்கள். தங்களின் தவறை உணர்ந்த அவர்கள், அந்த போட்டியாளரை கட்டித் தழுவி தங்களின் வருத்தத்தினை தெரிவித்தனர்.



ஐ படத்திற்கான விக்ரமின் டயட் என்ன தெரியுமா!

என்னது... ஐ படத்துல அப்படி ஒரு நடிப்பைக் கொடுத்த விக்ரமுக்கு தேசிய விருது இல்லையா?’ என பிரபலங்கள் பொங்கும் இந்த நேரத்தில்..
’ஐ’ படம் பற்றியும் அதில் தன் உழைப்பு பற்றியும் விக்ரம் கொடுத்த பேட்டி...


'இன்னைக்கும் எங்கே போனாலும் 'ஐ’ பத்தி கேட்கிறாங்க; பாராட்டுறாங்க. அதைப் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், ஒண்ணேஒண்ணு மட்டும் சொல்றேன். ஒரு ஹீரோ ரொம்ப ஸ்வீட்டா சொன்னார். அவர் யார்னுலாம் கேட்காதீங்க. 'விக்ரம்... 'ஐ’ பார்த்ததும் எனக்கு இதான் தோணுச்சு... 'இந்த ஷாட்டுக்காக நீங்க கொஞ்சம் சாக முடியுமா?’னு உங்ககிட்ட ஒரு டைரக்டர் கேட்டிருந்தா, 'ஓ.கே சார்... டப்பிங் முடிச்ச பிறகு அந்த ஷாட் வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டு, நீங்க அந்தக் காட்சிக்காக உயிரை விட்டாலும் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’னு சொன்னார். 'ஐ’ பற்றின பாராட்டுக்கள்லயே அதான் பெஸ்ட். ஆனா, அந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சா, அப்படிக்கூடப் பண்ணிடலாமேனு தோணுச்சு. ரெடி ஃபார் எனி கேம் இன் சினிமா'' - இந்த எனர்ஜிதான் விக்ரம். பல வருடங்களுக்கு முன் சினிமா ஆர்வத்துடன் சென்னைக்குக் கிளம்பிய அந்த மனநிலையிலேயே இன்றும் இருக்கிறார்.
'' 'ஐ’ படத்துக்கு எப்படி அந்த லுக் வரவெச்சீங்க... இன்னும் அதை ரகசியமா வெச்சிருக்கீங்களே..?''

'' 'ஐ’, என் கரியரில் முக்கியமான சினிமா. ஏன்னா, அந்த அளவுக்கு அசுரத்தனமா உழைச்சேன். அந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கான ஒரே சவால்... நேரம்தான்! 'ஐ’ பற்றி சொன்ன ஷங்கர் சார், 'பாடிபில்டர், மாடல், அகோரமா ஒரு கூனன்’னு மூணு கெட்டப். முதல்ல பாடிபில்டர். தயாராகிடுங்க’னு சொன்னார். ஷூட்டிங் ஆரம்பிக்க மூணு மாசம்தான் இருந்தது. அதுக்குள்ள பாடிபில்டருக்கான கட்ஸ் கொண்டுவரணும். வழக்கமா பாடிபில்டர்களுக்கு சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி மூணும் சரிசமமா இருக்கணும். ஆனா, எனக்கு நேரமும் கம்மி; தூக்கமும் கம்மி. சிலர் 'ஸ்டெராய்ட் எடுத்துக்கலாம்’னு சொன்னாங்க. 'வேண்டாம்... நானே வொர்க் பண்றேன்’னு சொல்லிட்டுப் பண்ணேன். நல்ல ரிசல்ட். அடுத்து மாடல் கெட்டப். ஒல்லியா இருக்கணும்; ஆனா, முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கணும். வெயிட் குறைச்சா முகம் எப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு குழப்பம். ஆனா, யோசிக்க நேரம் இல்லை. ரெண்டு மாசம்தான் கையில இருந்தது. ஜிம், டயட்னு ஏத்தின கட்ஸைக் கரைச்சு மாடல் லுக் கொண்டுவந்துட்டேன். 'கூனன்’ கெட்டப்புக்கு எடையை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்கணும். ஆனா, சாப்பிடாம இருந்தா மசில்ஸ் போயிடும். அதுக்காக குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு 15 வேளை சாப்பிடுவேன். ஒரு வேளை சாப்பாடுங்கிறது அரை ஆப்பிள்தான், அப்புறம் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, மூணாவது வேளைக்கு வாழைத்தண்டு ஜூஸ்... இவ்ளோதான் ஒரு வேளையின் அதிகபட்ச சாப்பாடு. தினமும் சாப்பாடு மூலமா நம்ம உடம்புக்கு 1,500 கலோரி கிடைச்சா, உழைப்பின் மூலமா அதில் 1,000 கலோரிகளை எரிப்போம். மீதி 500 கலோரி கொழுப்பா உடம்புல சேரும். ஆனா, நான் சாப்பாடு மூலமா 1,000 கலோரி எடுத்துக்கிட்டு, ஜிம், சைக்கிளிங்னு 2,000 கலோரி எரிச்சேன். எடை குறைச்சுக் குறைச்சு 53 கிலோ வந்துட்டேன். 'ரவுண்டா 50 கிலோ  வரை போயிரலாம்’னு சொன்னேன். 'அது ரிஸ்க். நம்ம உடம்பு ஓர் அதிசயம். என்ன சிக்கல் இருந்தாலும் வேலை செய்யும். ஆனா, 50 கிலோவுக்குக் கீழே போனா ஒருவேளை உடம்புல ஏதாவது ஓர் உறுப்பு ஃபெய்லியர் ஆச்சுன்னா, அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது’னு டாக்டர்கள் சொன்னாங்க. மனசே இல்லாம 53 கிலோவோடு நிறுத்திட்டேன். என் பயிற்சியாளர் பரத் இந்த டிராவல் முழுக்க என் கூடவே இருந்தார். பொதுவா இவ்வளவு மெனக்கெட்டா, உடம்பு இயல்புக்குத் திரும்ப அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுமாம். ஹாலிவுட் ஹீரோக்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கு. ஆனா, நான் ஒரே வருஷத்தில் பழைய பூரிப்பைக் கொண்டு வந்துட்டேன். இப்போ நான் அடுத்தடுத்த படங்கள்ல எதுக்கும் தயார்!''


''அப்போ ஏதாவது ஒரு கஷ்டமான தருணத்தில், 'ஏன் இந்தப் படத்துல கமிட் ஆனோம்’னு நினைச்சது உண்டா?'
'

''நிச்சயமா இல்லை. 'இதை நான் சந்தோஷமா அனுபவிக்கப்போறேன். இதுல எந்தச் சிரமமும் இல்லை’னு முடிவுபண்ணித்தான் 'ஐ’ புராஜெக்ட்டுக்குள்ள வந்தேன். 'இதை எல்லாராலயும் பண்ண முடியாது. உன்னால முடியும். நீ நினைச்சா முடியும்’னு சொல்லிட்டே இருந்தேன். அதனால பெரிய கஷ்டமா தெரியலை! என்ன... வீட்லதான் ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. அரை தக்காளியோ, அரை முட்டையோ அது நேரத்துக்கு வந்துரணும். ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் கோபம் பிச்சிக்கும். ஏன்னா, அந்த அளவுக்கு எப்பவும் பசிச்சுட்டே இருக்கும். அப்போ என்னைச் சமாளிக்க ரொம்பச் சிரமப்பட்டுட்டாங்க. ஆனா, படம் பார்க்கிறப்ப அதெல்லாம் மறந்துட்டாங்க!''
''நல்ல நல்ல படங்களா நடிக்கிறீங்க. ஆனா, ஒவ்வொரு படத்துக்கும் இடையில ஏன் இவ்ளோ இடைவெளி?''

''எந்த நடிகரும் வேணும்னே ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணணும்னு நினைக்கிறது இல்லை. எல்லாருமே, 'நிறையப் படங்கள் கொடுங்க, நிறையப் பணம் கொடுங்க’னுதான் நினைப்பாங்க. நானும் அப்படித்தான். ஆனா, பல காரணங்களால் என் ஒவ்வொரு படமும் தாமதமாகி இருக்கு. ஆனா, இனி அப்படி நேரத்தை வீணாக்க விரும்பலை. 'ஐ’ படத்துக்கு அப்புறம் ஒரு முடிவு எடுத்துட்டேன்... வருஷத்துக்கு ரெண்டு படங்கள் நடிக்கணும். இந்த வருஷ ஆரம்பத்துல 'ஐ’ வந்துச்சு. இதோ வருஷக் கடைசியில் '10 எண்றதுக்குள்ள’ வரப்போகுது. இனி இப்படி வருஷத்துக்கு ரெண்டு படங்கள் வரலைன்னா, 'ஏன் விக்ரம்?’னு கேளுங்க. நான் மொட்டை போட்டுக்கிறேன்!''