Monetize Your Website or Blog

Tuesday, 29 March 2016

சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணமா?: வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் விஜயகாந்த்!

என்னை குறித்தும், கூட்டணி குறித்தும் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சமீபத்தில் மக்கள் நல கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மக்கள் நல கூட்டணியின் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. இந்த பிரசாரத்தில் விஜயகாந்த் கலந்துகொள்ளவில்லை. அதற்கு அவரது உடல்நிலை காரணம் என்றும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று சில நாட்கள் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார்.
இந்தநிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு முன்பாக சிங்கப்பூர் சென்று விஜயகாந்த் சிகிச்சை பெற முடிவு செய்திருக்கிறார் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும், நேற்றிரவு 11.30 மணிக்கு புறப்படும் விமானம் ஒன்றிலும் விஜயகாந்த் பெயர் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் நேற்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் ‘பேஸ்-புக்’ மூலம் காட்டுத் தீ போல பரவியது.
இந்நிலையில், இது குறித்து விஜயகாந்த் தனது முகநூல் பதிவில், "என்னை பற்றியோ நமது கூட்டணி குறித்தோ பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நமது லட்சியம்! வெல்வது நிச்சயம்! நமது முரசு! நாளைய தமிழக அரசு!" என்று பதிவிட்டுள்ளார்.


இதேபோல், தே.மு.தி.க. இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பதிவில், ''தே.மு.தி.க. தலைவர் கேப்டன் பற்றியும், தே.மு.தி.க.வை பற்றியும் அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளையும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல், உண்மை செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கேப்டன் அவர்கள் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக இன்று வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு வெளியிட வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment