Monetize Your Website or Blog

Friday, 25 March 2016

'வாரிசு அரசியல்வாதிகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்!'

ரசியல்வாதிகளின் இன்னொரு முகமாக செயல்படுவது அவர்களின் வாரிசுகள் தான். குறிப்பாக தொடர்ந்து மாவட்ட செயலாளர், அமைச்சர், எம்.எல்.ஏ. என பதவிகளில் வருபவர்களின் மகன், மகள்கள் தான் அரசியல் வாரிசாக உருமாறுகிறார்கள். .அதற்கு சாட்சியாக பலரும் தமிழ்நாட்டில் உள்ளனர். அதே வரிசையில் தான் தற்போது முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும் தி.மு.க.வின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளருமான சுரேஷ் ராஜனின் மகன் தமிழ் அரசியல் களம் காண வந்துள்ளார்.

தமிழ், 25 வயது இளைஞர். சி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஆனால், மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனுக்கு என்ன மரியாதையை குமரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் கொடுக்கிறார்களோ அதே மரியாதையை தமிழுக்கும் கொடுக்கிறார்கள். காரணம், சுரேஷ்ராஜனிடம் மனக்கசப்பு ஏற்பட்டவர்கள், கோபத்திற்கு ஆளானவர்கள் தமிழிடம் வந்து, ''பேசி அப்பாவை சமாதானப் படுத்துப்பா. நான் எப்போதும் அப்பா ஆளுதான். எவனோ என்னை பத்தி அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்திருக்கிறான். நீ தான் அப்பாக்கிட்ட பேசி சரி செய்யனும்" என்று தினம் தினம் பஞ்சாயத்து கொண்டு வருகிறார்கள் . அதிலும், தமிழின் வயதுதான் அவர்களின் அரசியல் அனுபவம் என்று இருப்பவர்கள்கூட இவரிடம் அடங்கி மரியாதையாக பேசி வருவதும் வேடிக்கைதான்.

குமரிமாவட்ட தி.மு.க.வில் யாராவது அறிக்கைவிட்டால், ''இங்க பாரு தமிழ், மாவட்டத்தை (சுரேஷ் ராஜனை) மீறி அறிக்கை விடுறார். நீதான் அப்பாக்கிட்ட சொல்லி இப்பவே அவரை கண்டிச்சி வைக்கணும். இல்ல.அவங்க வளந்துருவாங்க" என்று சிலர் உசுப்பேத்துவதும் நடந்துதான் வருகிறது. அதிலும் சில ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க சென்னை செல்லும்போது, சுரேஷ் ராஜனின் மகன் தமிழையும் அழைத்துக் கொண்டு அவர் கையால் விருப்ப மனு கொடுத்தனர்.
அந்த புகைப்படத்தை, தினசரிகளில் செய்தியாக்கி பெருமைபட்டும் கொண்டனர். இது பத்தாது என்று அதனை ஃபேஸ் புக்கிலும் போட்டு தனக்குதான் சீட் என மனக் கோட்டைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். தற்போது குமரி மாவட்ட நிழல் மாவட்டச் செயலாளராகவே தமிழ் வலம் வருகிறார். தமிழின் தயவு கிடைத்தால் கட்சியில் பொறுப்பு என்ன... எம்.எல்.ஏ.சீட்டே கிடைக்கும் என்கிறது குமரி மாவட்டத்தின் ஒரு தி.மு.க. கூட்டம்.

தி.மு.க.வில் நேர்காணல் முடிந்ததில் இருந்து எப்போதும் தமிழின் செல்போன் அலறிக் கொண்டேதான் இருக்கிறதாம். சுரேஷ் ராஜனிடம் சொல்ல தயங்கும் விஷயங்களை தமிழிடம் கூறி,  அதை சுரேஷ் ராஜன் காதுகளை எட்டச் செய்கின்றனர் சில தி.மு.க. நிர்வாகிகள். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் போட்டியிட சீட் கேட்டுள்ள பேரூராட்சி தலைவர் ஒருவர், தமிழிடம் உருகி ''அப்பா கன்னியாகுமரி தொகுதியில நிக்கலனா எனக்கு வாங்கி தர சொல்லுப்பா. காலத்துக்கும் உங்களுக்கு விசுவாசியாக இருப்பேன். அப்பா என்ன சொல்லுறாரோ அதை மட்டும்தான் கேட்பேன்" எனக் கூறி கன்னியாகுமரி தொகுதிக்கு துண்டை போட்டு இருக்கிறாராம்.


அதிலும் அவர், தமிழை மாவட்டம் என்று அன்பாக அழைப்பதும் தனி சிறப்புதான் போங்க. இவரே தனக்கு போட்டியாக இருந்த அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளரை தமிழின் மூலம் ஓரங்கட்டிவிட்டார். இப்படியாக இன்னும் பலர் சீட்டுக்காக தமிழை சுற்றி வருவது சகஜமாகி விட்டது. தமிழ் எந்த ஒரு கட்சி நடவடிக்கையிலும் ஈடுபடவே மாட்டார். தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பவர்.

ஆனாலும் சிலர் தங்களது சுயநலத்திற்காக அவரை படிக்க கூட விடாமல் தொந்தரவு செய்து,  அவரது பாதையை மாற்றி வருகின்றனர். இதன் உச்சமாக அவரை ஏதாவது ஒரு துக்க வீட்டில் பார்த்தால் கூட தங்கள் விஷயங்களை கூறி,  அதை தந்தையிடம் சொல்ல சொல்லி நச்சரிப்பவர்களும் இருக்கதான் செய்கின்றனர்" என்கின்றனர் குமரி மாவட்ட தி.மு.க. அனுதாபிகள்.

ஆக, வாரிசு அரசியல்வாதிகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் தானே!

No comments:

Post a Comment