Monetize Your Website or Blog

Friday, 25 March 2016

சொன்னார்கள்... செய்தார்களா?

மிழ்நாட்டுக்கு மட்டுமா... கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறப்போகிறது. அங்கு நிலைமை எப்படி? 

மேற்கு வங்காளம்:

தொடர்ந்து 34 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளம், 2011-ம் ஆண்டில்தான் இடதுசாரிகளின் கையைவிட்டுப் போனது. 2011-ம் ஆண்டு காங்கிரஸும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸும் கூட்டணிவைத்து இடதுசாரிகளை வீழ்த்தினார்கள். இந்தத் தேர்தலில் மம்தாவை வீழ்த்த, காங்கிரஸும் இடதுசாரிகளும் கூட்டணிவைத்துள்ளனர்.
இந்தச் சட்டமன்றத் தேர்தல் மூலம், இழந்த பெருமையை மீண்டும் பெற்றுவிடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள். அதனால்தான் கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் இடதுசாரிகள், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, `கன்யாஸ்த்ரி திபாஸ்’ என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் செய்த நிதி உதவி அங்கு செம ஹிட். கிட்டத்தட்ட 

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம், யுனிசெஃப் அளவில் பாராட்டப்பட்டிருக்கிறது. 2013-14ம் ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய முதல் மாநிலமாகவும் சிறந்து விளங்கியது மேற்கு வங்காளம். 2014-ம் ஆண்டில் உண்மையிலேயே மின்மிகை மாநிலமாக மேற்கு வங்காளம் மாறியது. இந்த மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் மம்தாவின் கிராஃபை உயர்த்தியிருக்கின்றன.
`வங்கத்தின் முகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாறியிருக்கிறது...' என்ற ஒரு பாடலை வீடியோவுடன் வெளியிட்டு இருக்கிறார்கள் திரிணாமூல் காங்கிரஸினர். இந்தப் பாடலில் மம்தா அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகளால் பாதிப்படைந்த பகுதிகளும், கோர்க்காலாந்து பிரச்னை நடந்த பகுதிகளும் எப்படி அமைதிநிலைக்குத் திரும்பியுள்ளன என்பது எல்லாம் இந்த வீடியோவில் இருக்கின்றன. யூடியூப், சவுண்ட் கிளவுட், தொலைக்காட்சிகள், எஃப்.எம் என பல்வேறு இடங்களிலும் தீதியின் புகழ் பாடுகிறார்கள்.
ஆனால், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸின் பெயர் பலத்த அடி வாங்கியிருப்பது அதற்குப் பின்னடைவே. மேலும், தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டிருக்கும் மம்தாவின் மந்திரிகளை மக்கள் உடனே மறந்துவிட மாட்டார்கள். ஒரு தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய மம்தா மந்திரிகள், கட்டுக்கட்டான பணத்துக்காக சட்ட விதிகளைத் தூக்கி எறியத் தயாராக இருப்பதைக் கண்டு, பெங்காலிகள் கொதிக்கிறார்கள். இது தீதியின் இமேஜுக்கு செம டேமேஜ். 

ஊழல் புகார்கள், மோசடிப் புகார்கள் மட்டும் இல்லாமல் மாநிலத்தின் நிதிநிலையே மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்கிறது. `மோசமான நிதிநிலைக்கு இடதுசாரிகளுடைய மோசமான நிர்வாகமே காரணம்’ எனக் கூறிக்கொண்டே இருக்கிறார் தீதி. மக்கள் இதை நம்பினார்களா என்பது, மே 19-ம் தேதி தெரியும்.

கேரளா:

‘மலையாளிகள், சப்பாத்தியை எப்போதும் இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்தே உண்பார்கள்’ என வேடிக்கையாக ஒரு பேச்சு உண்டு. சப்பாத்தியைத் திருப்பிப் போடுவதைப் போல இந்த முறை இடதுசாரிகள் என்றால், அடுத்த முறை காங்கிரஸ், அதற்கு அடுத்த முறை மீண்டும் இடதுசாரிகள் என, கடந்த 30 ஆண்டுகளாக இதையே செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒருங்கிணைந்த ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரிகள் கூட்டணி தனி. சமீபகாலமாக கேரளத்தில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் படிப்படியாகக் கூடிவருகிறது, அதையொட்டி பா.ஜ.க தலைமையில் இன்னொரு கூட்டணியும் இங்கே போட்டியிடுகிறது.

பா.ஜ.க ஒற்றை இலக்க எண்ணிக்கையில் வெற்றிபெற்றால்கூட, அது அந்தக் கட்சியை வலுப்படுத்துவதாகவே இருக்கும். அதே சமயம் மற்ற இரு கட்சிகளுக்கும் அது பெரிய அடியாகவும் இருக்கும். ஏனெனில், வழக்கமாக கேரளத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கும், அந்த வாய்ப்பை இழக்கும் கூட்டணிக்கும் இடையிலான எண்ணிக்கை வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும். 

கேரளாவில் இதுவரை நடைபெற்றுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் இடதுசாரிகள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் முதலமைச்சர் உம்மன்சாண்டியின் மீது கூறப்பட்ட ஊழல் புகார்கள் ஆளும் கட்சிக்குப் பெரிய பின்னடைவைத் தந்துள்ளன. அதேபோல மதுவிடுதிகளின் உரிமம் புதுப்பிக்கும் விவகாரத்தில் கட்சிக்குள்ளேயும் அமைச்சரவைக்கு உள்ளேயும் பலர் ஊழல் புகாரில் சிக்க, உம்மன்சாண்டிக்கு ஏகப்பட்ட குடைச்சல். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்குப் பலத்த அடி. இந்த முறையும் மலையாளிகள் சப்பாத்தியைத் திருப்பிப் போடுவதற்கான அறிகுறிகள் ஏகமாகத் தெரிகின்றன. தோழர்கள் ஆட்சியைக் கைப்பற்றும்பட்சத்தில் அச்சுதானந்தன், பினராயி விஜயன் இருவரில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற போட்டியும் நடக்கலாம்.

ஊழல் புகார்களையும் முறைகேடுகளையும் மக்கள் மறக்கும்விதமாக தங்களது சாதனைகளான ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசித் திட்டம், கொச்சின் மெட்ரோ ரயில் திட்டம், முதலமைச்சர் அலுவலக இணையதளத்தில் தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் திட்டம்... என தங்கள் சாதனைகளைச் சொல்லி தீவிரப் பிரசாரம் செய்துவருகிறது காங்கிரஸ். இடதுசாரிகளோ சூரிய மின்சக்தி ஊழல், மதுவிடுதிகள் உரிமம் தொடர்பான ஊழல், பணப்பயிரான ரப்பரின் விலை சரிவு, விலைவாசி உயர்வு என ஆளும் கட்சியின் மீதான புகார்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை கேரளத்தில் காங்கிரஸ் தோற்கும் பட்சத்தில், தென்னிந்தியாவில் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலமாக இனி கர்நாடகம் மட்டுமே இருக்கும்.


அசாம்:
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் ஒரே மாநிலம் அசாம். `அசாம் கன பரிஷத்' போன்ற மாணவர் எழுச்சிகள் எல்லாம் காணாமல்போன பிறகு, தொடர்ந்து ­15 ஆண்டுகளாக அசாமில் காங்கிரஸ் ஆட்சிதான். கடந்த மூன்று தேர்தல்களிலும் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ். ஆனால், நடந்து முடிந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. மொத்தம் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 7-ல் பா.ஜ.க வெற்றிபெற, 3-ல் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதனால்தான் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்கிற பரபரப்பு எகிறியிருக்கிறது. தமிழகம் போலவே இந்த முறை பலமுனைப் போட்டிக்குத் தயாராகி இருக்கிறது அசாம். 

புதுச்சேரி:

' தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணி இன்னும் இழுபறி நிலையில்தான் இருக்கிறது. கடந்த முறை கட்சி ஆரம்பித்த மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, இந்த முறை  பதற்றத்தில் இருக்கிறார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டுசேர்ந்தவர், தேர்தல் முடிந்ததும் சுயேட்சையுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க-வுடன் சேர்ந்து சந்தித்தவர், ராஜ்யசபா எம்.பி பதவியை அ.தி.மு.க-வுக்குத் தாரைவார்த்தார்.  மீண்டும் இந்தத் தேர்தலையும் அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கும் திட்டத்தில்தான் இருக்கிறார் ரங்கசாமி. ஆனால், அ.தி.மு.க-விடம் இருந்து இதுவரை நோ ரெஸ்பான்ஸ். புதுச்சேரியிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறது தி.மு.க. `தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு சரியில்லை' எனப் பிரசாரம் செய்கிறது காங்கிரஸ். மாறாக, `நிறையப் பேருக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறோம். வளர்ச்சித் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன' என்கிறார் ரங்கசாமி. எளிமையான மனிதர் எனப் பெயர் பெற்றிருக்கும் ரங்கசாமி, மீண்டு வருவது கூட்டணி அமைவதைப் பொறுத்தது. 
 


No comments:

Post a Comment