Monetize Your Website or Blog

Monday, 21 March 2016

புலியை சுட்டுக் கொன்றது நியாயமா? -கச்சைக் கட்டும் சர்ச்சை!

ந்தக் காட்சியைப் பார்க்கவே மனம் வேதனைப்படுகிறது. உயிரற்ற உடலாக ஒன்பது வயதுடைய அந்தப் புலி வேனில் ஏற்றப்படுகிறது. அதன் உடம்பைச் சுற்றிலும் அமர்ந்துள்ள அதிரடிப்படை வீரர்கள் செல்ஃபி எடுப்பதும் உடலைப் புரட்டிப் போடுவதும் தொடர்கிறது. எல்லோர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடுகிறது. கால்கள் கட்டப்பட்டு, ரத்தம் சிந்திய நிலையில் வேனுக்குள் புலி மரணித்துக் கிடக்கிறது. 

வடமாநிலத் தொழிலாளி மது ஓரனை கொன்று தின்ற புலியை, எட்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்தது அதிரடிப்படை மற்றும் வனத்துறை. ஒன்பது கூண்டுகள், 48 கண்காணிப்பு கேமராக்கள், மோப்ப நாய் என தீவிர முயற்சி எடுத்தாலும், அவ்வளவு எளிதில் அவர்களின் கைகளுக்கு புலி சிக்கவில்லை. இன்று மதியம், தேவர் சோலை எஸ்டேட் பகுதியின் புதர்ப் பகுதியில் பதுங்கியிருந்த புலியை வெளியே கொண்டு வர முயற்சித்தனர். இதனால் கோபமான புலி, வீறுகொண்டு தாக்க முயற்சிக்க, அதிரப்படையினர் சுட்டுக் கொன்றனர். இப்படித்தான் மீடியாக்களுக்குத் தகவல் தரப்பட்டது. இது ஏதோ போலி என்கவுண்ட்டருக்காக, நமது ஊர் போலீஸார் எழுதும் கதை போல இருக்கிறதே என நினைக்க வேண்டாம். நடந்த சம்பவமும் இதுதான்.


மனிதனைக் கொன்று தின்னும் நிலைக்கு புலி ஏன் தள்ளப்படுகிறது? மேன் ஈட்டர் வகைப் புலிகள் காட்டுக்குள் இருக்கக் கூடாது என்பதே விதி. சரிதான். ஆனால், மயக்க மருந்து செலுத்தி புலியை உயிரோடு பிடித்திருந்தால், ஏதோ ஒரு சரணாலயத்தில் அது உலா வந்திருக்குமே? 'ஒரு காட்டுக்குள் 14 ஆண்டுகள் வலம் வரக் கூடிய புலி, ஏதோ ஒரு சண்டையில் காயம்பட்டாலோ, வேட்டையாட முடியாத அளவுக்குப் பலவீனமாலோ அது தனது கூட்டத்திடம் இருந்து தனித்துவிடப்படுகிறது. உணவுக்கு வேறு வழியில்லாத சூழலில் தனக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய, அதிக எதிர்ப்பு காட்டாத மனித இனத்தை நோக்கி அது வருகிறது' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

" புலி சுட்டுக் கொல்லப்பட்டது வேதனையானதுதான். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சமீபகாலங்களில் மனிதனைக் கொன்று தின்ற மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. அண்மையில் மகாலட்சுமி என்ற பெண் புலியால் கொல்லப்பட்டதால், போலீஸ் வாகனத்தை மக்கள் சூறையாடினர். நிலைமையைக் 
கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தால் காட்டின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும். எனவே, புலியைப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் வனத்துறைக்கு ஏற்படுகிறது. புலியைப் பிடிப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. மயக்க ஊசி போட்டுத்தான் பிடிக்க முடியும். இன்றைக்கு மதியம் புலியைப் பிடிக்க முயற்சித்தபோது, புதருக்குள் மறைந்திருந்தது. அது மீண்டும் தாக்க முயற்சிக்கும்போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டது. புலியின் மரணம் வலியைத் தரக் கூடிய நிகழ்வுதான். அந்தப் புலி செய்த ஒரே தவறு ஒரு மனிதனைக் கொன்றது. புலியை சுட்டுக் கொல்வதும், கூண்டில் அடைப்பதும் ஒரே தண்டனைதான். கூண்டில் அடைப்பதன் மூலம் ஆயுள் தண்டனையையோ, மரண தண்டனையையோ அந்தப் புலிக்கு அளிக்கிறோம். புலிகள் மேன் ஈட்டராக மாறுவது என்பது துரதிஷ்டவசமானது.

எல்லைக் கோட்டைத் தீர்மானித்து வாழ்பவை புலிகள். இணை சேரும் நேரம் தவிர, மற்ற புலிகளை அது தன்னருகில் சேர்ப்பதில்லை. புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதன் வாழ்விடத்தின் எல்லைப் பரப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில், புலிகளுக்கு தேவையான வாழ்விடம், தொந்தரவு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை நாம்தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான சுதந்திர சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வேட்டையாட முடியாத புலிகள், ஒருகட்டத்தில் தனது கூட்டத்தின் மூலம் காட்டின் எல்லைக்கு வெளியே தள்ளப்படுகின்றன. சூழல் நிர்பந்தத்தில்தான் அது மேன் ஈட்டர் புலியாக மாறுகிறது. சராசரியாக அதிகபட்சம் 14 வருஷம் புலிகள் வாழும். மேன் ஈட்டர் புலிகளை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நவீன இயந்திரங்களும் நம்மிடம் இல்லை. அரசாங்கம் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதில், நாம் சமாதானமடைய ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு புலியைக் கொன்று நிறைய புலிகளைக் காக்கிறோம் என்பதுதான்" என்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன். 

புலி மனிதனைக் கொன்றுவிட்டது. புலியை மனிதன் கொன்றுவிட்டான் என்று பேசாமல், அவற்றை உயிரோடு உலவவிடுவதற்கான உபகரணங்களை வாங்கும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே விலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 


No comments:

Post a Comment