Monetize Your Website or Blog

Friday, 18 March 2016

இளைஞர்கள் அரசியல் அறிவதை கட்சிகள் ஏன் விரும்புவதில்லை?

மிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும், ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, அரசை கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது, ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு.  ஆனால், அண்மையில் ஒரு வீடியோ பார்த்தபோது, பெருநகர இளைஞர்கள் அரசியல் அற்றவர்களாக ஆகிவிட்டார்களோ என்ற அச்சம் வருகிறது.
'பா.ம.க வா அப்படின்னா... மோடி நம் தேசத்தின் குடியரசு தலைவர்...?'

விகடன் வீடியோக் குழுவினர் அண்மையில், நகரத்தை சேர்ந்த பல இளைஞர்களை சந்தித்து, பா.ம.க வின் விரிவாக்கம் சொல்லுக...? அன்புமணி யார்...? போன்ற கேள்விகளை கேட்டு இருந்தனர். ஆனால், பெரும்பாலான இளைஞர்களுக்கு, இதற்கான விடை தெரியவில்லை. ஒரு இளைஞர், 'பா.ம.க ன்னா பாரதிய ஜனதா கட்சிதானே...!' என்கிறார். இன்னொரு, பெண்மணி, 'சத்தியமா கேள்விபட்டதில்லை' என்கிறார். நிச்சயம் இது நகைப்பிற்குரிய விஷயம் இல்லை. இந்த அறியாமை பேராபத்தானது. கிட்டதட்ட கால் நூற்றாண்டு காலம், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாய் இருக்கின்ற கட்சி, தொடர்ந்து பத்திரிகைகளின் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த கட்சியை தெரியவில்லை என்பதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது...? பா.ம.க வை பற்றிய புரிதல் மட்டும் இது இல்லை... இன்றைய இளைஞர்கள் பலருக்கு, நம் தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக கோலாச்சி வரும் திராவிட கட்சிகளையும் தெரியவில்லை, அதன் அரசியலையும் தெரியவில்லை. 

தமிழக கட்சிகளுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய வானொலிக்கு,  ஆட்களை எடுக்கும் குழுவில் நண்பர் இயக்குனர் வெற்றிவேலும் ஒரு முறை இருந்தார். அவர், அந்த நேர்காணலில் நடந்த ச
ம்பவங்களை பகிர்ந்து கொண்ட போது பகீரென்று இருந்தது. மன்மோகன் சிங் யார் என்ற கேள்விக்கு, தமிழக கவர்னர் என்று பதில் வந்து இருக்கிறது. அதுவும், நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் கடினமான கேள்விகளை கேட்பதாக குறைப்பட்டு கொண்டார்களாம்.  

நான் ஒரு முக்கிய ஆங்கில நாளிதழில் பணியாற்றிய போது, எனக்கும் இது போன்ற இளைஞர்களை சந்திக்க நேர்ந்து இருக்கிறது. பி.ஜே.பி தன் முகமாக மோடியை முன்னிறுத்தி மெகா வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பை ஏற்ற தருணம் அது. அப்போது இன்டன்ஷிப் (internship) கேட்டு, ஆங்கிலத்தில் முதுநிலை படிக்கும் ஒரு மாணவி வந்திருந்தார். அவருக்கான நேர்காணல் கேள்விகளை என்னுடைய ஆசிரியர் அனுப்பி இருந்தார். அந்த கேள்விகளை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆம், அவர் அனுப்பி இருந்த கேள்வி...  திரு. நரேந்திர மோடி யார்...? நம் தேசத்தின் நிதி அமைச்சர் யார்...? போன்ற எளிமையானகேள்விகள்தான்.  ஆனால், நரேந்திர மோடி யார் என்ற கேள்விக்கு, நம் தேசத்தின் குடியரசு தலைவர் என்றும்,  நாட்டின் நிதி அமைச்சர் யாரென்று தெரியாது என்றும் பதில் இருந்தது.
தமிழக அரசியலே இளைஞர்களுக்கு தெரியாதபோது, தேசிய அரசியல் குறித்த வினா, நிச்சயம் நம்மவர்களுக்கு கடினமான கேள்விகள்தான்.

நாம் அரசியல் விழிப்பு உணர்வற்றவர்களாய், தேசத்தின் நிதியமைச்சர் யாரென்று தெரியாமல் இருந்தால், மல்லையாக்கள் ஆயிரம் கோடிகள் சுருட்டத்தான் செய்வார்கள்.


அரசியல் தெரியாமல் இருப்பது பெருமைக்குரிய விஷயமா...?
என் பிள்ளைகள் கல்லூரியில் எந்த மாணவர் அமைப்பிலும் இல்லை... அவனுக்கு/அவளுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை... படிப்புண்டு, அவன் வேலை உண்டு என்று இருக்கிறான் என்று பல பெற்றோர்கள் பெருமையாக சொல்லக் கேட்டு இருக்கிறேன்.  இது உண்மையில் பெருமைக்குரிய விஷயமா..? படிக்கும் மாணவர்கள் எந்த தேர்தல் கட்சியிலும் இணைந்து அவர்களுக்காக கொடி பிடிக்க வேண்டாம், ஆனால் குறைந்த பட்சம் அரசியல் தெளிவில் இருக்க வேண்டாமா...?  இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும் ஒரு மெல்லிய அரசியல் இருக்கிறது. இங்கு யார் ஆட்சியில் இருந்தாலும், கொள்கைகளை வரையறுக்கும்போது, பொது சமூகத்தின் நலனைவிட, யாரோ ஒரு சிலரின் நலன் முதன்மையாகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், வெறும் புத்தக புழுவாக மட்டும் இருந்து வளரும் பிள்ளைகள், இந்த நவீன சமூகம் ஏற்படுத்தி உள்ள சிக்கல்களை எப்படி புரிந்துகொள்வார்கள்...? எப்படி திடமாக அதிலிருந்து மீண்டு வருவார்கள்...?

பெற்றோர்களே விரும்பி அனுமதித்தால் கூட, இன்றைக்கு பல கல்வி நிலையங்களில், மாணவர் அமைப்புகள் கிடையாது. ஆம். மாணவர்கள் தெளிவு பெற்றுவிட்டால், அவர்களின் குரல்கள் தரமற்ற உள்கட்டமைப்பை, முறையற்ற கல்வி கொள்ளையை கேள்வி கேட்கும் என்ற காரணங்களுக்காக, தமிழகத்தின் எந்த தனியார் கல்வி நிலையங்களிலும், மாணவ சங்கங்களை கட்டமைக்க அனுமதி கிடையாது. தனியார் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, பல அரசு கல்லூரிகளிலும் இதுதான் நிலை. 

'கல்வியை தாண்டி எதையும் சிந்திக்காதே... தானுண்டு, தன் படிப்பு உண்டு என்று இரு' என்று நாம் ஒரு சுயநல சமூகத்தை கட்டமைக்க வேண்டிய காரணம் என்ன...? இடது, வலது என்று பல அரசியல் தத்துவங்களை புரிந்து கொண்டால்தானே, மாணவர்கள் மனதளவில் வலுவானவர்களாக வளர முடியும்...?

மார்க்ஸ் என்னும் மாபெரும் மேதையை உணடாக்கியது பெர்லின் பல்கலைக்கழகம். பாடங்களை தாண்டி பல தத்துவங்களை அங்கு விவாதித்தார்கள். நம் இந்திய தேசமே பல சிந்தனை மரபுகளின் ஊற்றுக் கண்ணாக இருந்து இருக்கிறது. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம் ஆகிய ஆறு சிந்தனை மரபுகள் இங்கு தோன்றியது. இவற்றையெல்லாம் விவாதிக்க கல்லூரிகள் களம் அமைத்து தராமல், யாருக்கான அடிமைகளை அவர்கள் உருவாக்கி தருகிறார்கள்?.

இது திராவிட இயக்கங்களின் தோல்வி

தமிழக இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு, திராவிட கட்சிகளுக்கு உண்டு. இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சியில் உத்வேகம் பெற்று ஆட்சியை பிடித்த திராவிட கட்சி, மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தமக்கு ஆபத்து என்று அஞ்சுவது தெளிவாக தெரிகிறது. அதனால், ஒவ்வொரு முறையும், அனைத்து தடைகளையும் மீறி, ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம், சமூக காரணங்களுக்காக அணி திரளும் போது, தனது உளவு அமைப்புகளை வைத்து அதை ஒடுக்குகிறது, நசுக்குகிறது. 

திராவிட கட்சியினர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் அமைப்புகள் உள்ளதா...?  இல்லை, அவர்கள் ஏதேனும் கருத்தரங்கம் வைத்து அவர்கள் ஆசானான, பெரியார், அண்ணாவை பற்றி பேசி இருக்கிறார்களா...? 

அரசியல் பேசுவது தீட்டு என்ற மனநிலையை, அவர்கள் வெற்றிகரமாக உணடாக்கி, ஒரு தலைமுறை இளைஞர்களையே டி-பொலிடிசைஸ் ( Depoliticise) செய்துவிட்டார்கள். 

திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும், இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதில் கட்சி வேறுபாடுகள் தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்.

ஏன் இவர்கள் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...? அவர்களுக்கு நன்கு தெரியும், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், அனைத்தையும் கேள்வி கேட்பார்கள்  என்று.

அரசியல் பயில்வோம்

மாணவர்கள் சாதி அரசியல் பயின்றதால்தான், கையில் ஆளுக்கொரு கலரில் காப்பு கட்டி திரிகிறார்கள்... இதில் தெளிவாக அரசியலும் பயின்றுவிட்டால்...? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது என்கிறீர்களா... உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.  அரசியல் என்பது வாக்கரசியலோ, சாதி அரசியலோ இல்லை... அது தத்துவங்களை பயில்வது, அதன் ஊடாக சமூகத்தை பார்ப்பது, பிரச்னைகளை புரிந்து கொள்வது, தீர்வை தேடுவது. 
இங்கு அனைத்து விஷயங்களும் அரசியலுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. பார்க்கும் சினிமா, மாதம் நாம் போடும் வீட்டு பட்ஜெட் என அனைத்திலும் நுண்ணிய அரசியலின் ரேகை படர்ந்து இருக்கிறது. நாம் அரசியலில் பங்கேற்கிறோமோ இல்லையோ, இந்த காலக்கட்டத்தில், நாம் அதை கண்காணித்தலும், அதை புரிந்து கொள்வதும் மிக அவசியம். ஒரு நல்ல ஜனநாயகத்திற்கும் அதுதான் வலுசேர்க்கும்.


No comments:

Post a Comment