Monetize Your Website or Blog

Thursday, 3 March 2016

' கருணாநிதி ஏ1…ஜெயலலிதா ஏ2 ': விளாசும் வைகோ!

90 வயதைத் தாண்டினாலும் மீண்டும் தமிழக முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி துடிக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளரும்,  மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கடுமையாக சாடி உள்ளார். 

தமிழகத்தில் மற்றக் கட்சிகளை விட முன்னதாகவே சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி, மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள்,  மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி,  ஆவடி மற்றும் அரக்கோணத்தில் பிரசாரத்தினை தொடங்கி  வேலூரில் நேற்று இரவு ( செவ்வாய்) பொதுக்கூட்டம் நடத்தினார்கள். 

இரவு 10 மணி ஆனபோதிலும் கூட்டம் தொடங்கவில்லை. ஆனாலும் கூட்டம் கலையாமல் இருந்தது. முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,  இயல்பாக கதையொன்றைச் சொல்லி ஆரம்பித்தார்.


‘ஒரு அழகான கிராமத்தில் நல்ல மண் வளம், கடுமையான உழைப்பாளர்கள் எல்லாம் இருந்தது.  ஆனால் கிராமம் செழிக்க தண்ணீர் வசதி சுத்தமாக இல்லை. இரண்டு மலைகள் தண்ணீரை தடுத்து நின்றது. அந்த மலையைத்  தகர்க்க கிராமத்தினர் நான்கு பேர் சேர்ந்தார்கள். அதைப் பார்த்து ராஜா வீட்டு கன்றுக் குட்டிகள் இரண்டு அவர்களை பைத்தியக்காரர்கள் என்றது. இவர்கள் மலையை உடைக்க மாட்டார்கள் இவர்களே உடைந்துபோவார்கள் என்றார்கள் சிலர். ஆனால் கடந்த நவம்பர் மாதம் அந்த அதிமுக,  திமுக எனும் மலைகளில் துளையிட்டு விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலையை அகற்றிவிடுவார்கள்.’ என்றார்.

அடி முதல் நுனி வரை ஊழல்


அடுத்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “ விஜயகாந்த் முடிவை எதிர்பார்த்து தமிழக அரசியல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். மக்கள் நலக்கூட்டணி அமைந்ததால்தான் மற்றவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை. 1967ல் காங்கிரஸை எதிர்க்க யாரும் இல்லை என்ற நிலை இருந்தது. பேரறிஞர் அண்ணா காங்கிரஸிற்கு எதிராக திமுகவை உருவாக்கினார். அப்போது திமுகவில் 3 லட்சம் உறுப்பினர்கள் கூட கிடையாது. இதே போல் சின்ன சின்ன கட்சிகள் இணைந்து கூட்டனி அமைத்தது. அப்போதும் ஊடகங்கள் கிண்டலடித்தன. காங்கிரஸை பந்தயக்குதிரையாகவும்,  திமுக கூட்டணியை கழுதையாகவும்,  குதிரையோடு கழுதை போட்டிபோடுவதாகவும் கார்ட்டூன் போட்டார்கள்.
ஆனால் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.  திமுகவிற்கு மாற்று அதிமுக, கலைஞருக்கு மாற்று ஜெயலலிதா என இப்படியேதான் தொடர வேண்டுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல். சத்துணவு ஆயா வேலை முதல் துணை வேந்தர் பதவி வரை ஊழல். சட்டப்பேரவையில் அமைச்சர் ஆணவத்தோடு,  'மதுக்கடைகளை மூட மாட்டேன்' என்கிறார். இன்னொருவர் மத போதகர் போல் காதில் மைக்கை மாட்டிக் கொண்டு,  'ஒரு பைசா ஊழல் இல்லாத மது இல்லாத ஆட்சியைக் கொடுப்பேன்' என்கிறார். ஆனால் ஊழல் வழக்கிற்காக சிபிஐ நீதிமன்ற படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார். எங்கள் நால்வர் மீதும் இதுப்போன்ற எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாது” என்றார்.

பெரியார் பெயரை உச்சரிக்க தகுதியில்லை


அடுத்து பேச வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் “ அண்ணா அவர்கள் மறைந்த பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் பெரியார் வகுத்த சாதி பேதமற்ற முற்போக்கான சமூக கோட்பாடுகளை கடைபிடித்தார்களா?. கைவிட்டுவிட்டார்கள். தந்தை பெரியார் பெயரை உச்சரிக்க தகுதியற்றவர்கள் இவர்கள்.
சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் தக்கோலத்தில்,  தலைமை காவலர் மணல் கொள்ளையரால் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். போலீஸ் மந்திரியான ஜெயலலிதா மணல் கொள்ளையர்களை அதன் பிறகாவது ஒடுக்கினரா? இரட்டை இலையை பச்சை குத்திக் கொண்டு திரியும் கட்சிக்காரர்கள் வேலை வாங்க வேண்டும் என்றால் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும். உங்களுக்காக நான் என சொல்லும் அம்மாவிற்கு கொடநாட்டில் ஆயிரம் ஏக்கரில் எதற்கு எஸ்டேட்? ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கைச்  சந்திக்கிறார். கலைஞர் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார்கள். இந்த இரண்டு ஊழல் கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது.” என்றார்.

கருணாநிதி ஏ1    ஜெயலலிதா ஏ2!


இறுதியாக மைக் பிடித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  “ மக்கள் நலக்கூட்டணிக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆனால் கருத்துக் கணிப்புகளில் மதிமுகவிற்கு 2 சதவீதமாம். விடுதலைச் சிறுத்தைகளுக்கு 1 சதவீத ஆதரவுதான் இருக்கிறதாம். கருத்துக்கணிப்புகளை தயவு செய்து நம்பாதீர்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் திராவிட இயக்கத்தை இழி சொல்லுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். குற்றவாளிகளை ஏ1 ஏ2 என்பார்கள். கருணாநிதி ஏ1…ஜெயலலிதா ஏ2. மணல் கொள்ளை,  கிரானைட் கொள்ளையில் சமக் குற்றவாளிகள். சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. குன்ஹா தீர்ப்பை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றம். மீண்டும் உள்ளே செல்வார் ஜெயலலிதா.


1970ல் திருச்சியில் திமுக கூட்டம் நடந்தது.அப்போது காமராஜரைப் பார்த்து கலைஞர் “ இந்த வயதிலும் முதலமைச்சராக ஆசைப்படுகிறார் காமராஜர்” என்றார். ஆனால் அவர் இன்று 90 வயதை தாண்டியும் தன் மகனுக்கு கூட தலைவர் நாற்காலியை தர மறுத்து முதலமைச்சராகி விட துடிக்கிறார். அவர் மகனுக்கே 64 வயது. ஆனால் எனக்கு 1998ல் அமைச்சராக வாஜ்பாய் வாய்ப்பளித்த போதும் மறுத்தவன். என்றைக்கும் வைகோ பதவிக்கு விருப்பப்பட்டதில்லை. மக்கள் பிரச்னைதான் எனக்கு முக்கியம். அதற்காகவேதான் இந்த கூட்டணி. இது நிச்சயம் ஆட்சி அமைக்கும்” என்றார்.


No comments:

Post a Comment