Monetize Your Website or Blog

Saturday, 5 March 2016

விளையாட்டுத்துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்: சானியா மிர்சா சுளீர்!

ன்னை நோக்கி வரும் சிக்கல்களையும், சர்ச்சைகளையும் தவிடு பொடியாக்கி வெற்றிகளை குவித்து வருபவர்... நம்பர் ஒன் அந்தஸ்துடன் இந்திய தேசமே கொண்டாடும் நபர்...  இந்திய விளையாட்டுத்துறையில் பெண்களுக்கான உந்து சக்தியாக திகழக்கூடியவர்... வேறு யார் சானியா மிர்சா தான் அவர். 

அடுத்தடுத்த வெற்றிகளுக்கிடையே, இன்னும் சில போட்டிகளுக்கு நடுவே கோவை வந்திருந்தார் சானியா மிர்சா. நிகழ்ச்சியின் நடுவே அவரிடம் பேட்டி கேட்டோம். எந்த பத்திரிக்கை என்றார் அழகு ஆங்கிலத்தில்.

பெர்சனல் கேள்விகள் வேண்டாம். விளையாட்டைப்பற்றி என்றால் பேசலாம் எனச்சொல்ல... அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்....

கோவைக்கு வருவது இதுதான் முதல் முறையா? 


இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பே ஜூனியர் விளையாட்டு போட்டி ஒன்றில் பங்கேற்க கோவை வந்துள்ளேன். தற்போது மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கோவை நிறைய மாறிவிட்டது. இப்போது வளர்ந்த நகரமாக கோவை காட்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். கொண்டாடுகின்றனர். 



தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறீர்கள். இந்த சாதனையை எப்படி உணர்கிறீர்கள்?


நிச்சயமாக மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னுடைய விளையாட்டு சிறப்பாக அமைந்துள்ளது. அதனாலே மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடிந்தது. கடைசியாக 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வென்றுள்ளேன். அடுத்ததாக யூ.எஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இன்று இரவு அமெரிக்க கிளம்புகிறேன். அங்கு புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும். அதை செய்து வெற்றி பெறுவேன்.
இப்போது இரட்டையர் பிரிவில் விளையாடுகிறீர்கள். ஒற்றையர் பிரிவில் விளையாடுவதற்கும், இரட்டையர் பிரிவில் விளையாடுவதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
உடனிருப்பவர்களுடன் நல்ல நட்பு இருப்பது அவசியம். களத்தில் உடன் விளையாடுபவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். தொழில், டென்னிஸ், வாழ்க்கை என அனைத்திலும் அப்படித்தான். கெமிஸ்ட்ரி முக்கியம். ஆரம்பத்தில் நாங்கள் நண்பர்கள் இல்லை. ஆனால் தற்போது நல்ல நண்பர்களாகி விட்டோம். அதுதான் சிறப்பாக விளையாட உதவுகிறது. அதுதான் இந்த வெற்றிகளையும் சாத்தியமாகி இருக்கிறது.

விளையாட்டு துறைக்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறது?


விளையாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன. தற்போது மக்கள் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டு களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். காமன்வெல்த் விளையாட்டு புதிய நம்பிக்கை தந்துள்ளது. அதன் பின்னர்தான் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் மற்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் எந்த அளவிற்கு திறன்கள் உள்ளது என்பதை உணர்ந்துள்ளனர். விளையாட்டு துறையில் ஜெயிப்பதும், சாதிப்பதும், வெளிச்சத்திற்கு வருவதும் கடினமானது. 

மற்ற விளையாட்டுகளை விட கூடுதல் பணம் தேவைப்படும் துறையும் கூட. நம் நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது என்பது எளிமையான காரியம் அல்ல. அதற்கு அரசாங்கம் உதவி வருகிறது. இது இன்னும் அதிகமாகும் என நம்புகிறேன்.
விளையாட்டு வீரர்களின் ஃபிட்னஸ் தற்போது எப்படி இருக்கிறது?

ஒவ்வொரு பகுதிக்கு தகுந்த மாதிரி வீரர்களின் தகுதி இருக்கும். ஈரோப்பியன், அமெரிக்கன் கால் ஃபிட்னஸ் நன்றாக இருக்கும். நம்ம நாட்டை பொறுத்தவரை கோஆர்டினேசன் நன்றாக இருக்கும். முதலில் முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும். இப்போது லெவல் ஆப் ஃபிட்னஸ், லெவல் ஆப் டென்னிஸ் ஆகியவை மேம்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் சீக்கிரம் வளர்ச்சி இருக்கும்.

ஒவ்வொரு முறையும் வெற்றி தோல்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


விளையாட்டு துறையில் வெற்றி தோல்வி இருக்கும். வெற்றியோ, தோல்வியோ அதில் தேங்கி விடக்கூடாது. அடுத்தடுத்து இலக்கை நோக்கி நகர வேண்டும். அதுதான் உதவும். வெற்றியின் போது மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே தோல்வி அடையும் போது நமக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தமுறையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அதுதான் தோல்வியில் இருந்து வெளியே வர ஒரே வழி.



இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்கள் நிலை எப்படி இருக்கிறது?
ஒரு பெண் அத்லெட்டாக நான் பெருமைப்படுகிறேன். நிறைய தடைகள் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும். நான் விளையாட ஆரம்பிக்கும் போது, பெண்கள் டென்னிஸ் விளையாடுவது என்பது கேள்விப்படாத விஷயமாக இருந்தது. பெண்கள் டென்னிஸ் விளையாடி ப்ரொபஷனல் அத்லெட்டாக வருவது என்பது கேள்விப்படாத விஷயம். நான் விளையாடும் போது டென்னிஸ் கோர்ட் கண்டுபிடிப்பதில் துவங்கி எல்லாவற்றுக்கும் கஷ்டம். எதுவுமே இல்லை. மிகவும் மோசமான நிலை அது. 
ஆனால் இப்போது அப்படி இல்லை. நிறைய வளர்ந்திருக்கிறது. எளிதாக விளையாடுகிறார்கள். நான் ஆடும்போது அவ்வளவு ஈசியாக இல்லை. ஒரு பெண் என எடுத்துக்கொண்டால் ஒரு கேள்வி முன்னால் வந்து விடும். நீ எப்போ விளையாடுறதை நிறுத்தப்போறே.. உன் நிறம் மங்கிட்டு வருது. எப்போ கல்யாணம்னு கேள்விகள் வந்துகிட்டே இருக்கும். நம் கலாச்சார முறை அப்படி. இதில் இருந்து முன்னேறி நாம் வெளியே வர வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறீர்கள். விளையாட்டில் உங்களுக்கு சிறந்த காலமாக கருதுவது எது?

நிச்சயம். இதுதான். நம்பர் ஒன் தி வேர்ல்டு. இதுதான் என் பெஸ்ட் டைம். 41 முறை மேட்ச் தொடர்ச்சியாக வென்றிருக்கிறோம். நாங்க சாதிச்சிருக்கோம். அடுத்த போட்டிக்கு அமெரிக்கா போகிறேன். ஒரு மாசம் அங்கே தான் இருக்கப்போறேன். இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஒலிம்பிக்கில் யாரோடு சேர்ந்து விளையாடப்போகிறீர்கள்? பயிற்சியை துவங்கி விட்டீர்களா?

நான் இப்போது அமெரிக்கா போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 5 மாசம் இருக்கு. ஒரு ஆண்டில் 30 வாரம் நாங்கள் போட்டியில் பங்கேற்கிறோம். காலம் நெருங்க நெருங்க தான் போட்டியில் கவனம் செலுத்த முடியும். எனவே ஒலிம்பிக்கில் இன்னும் யாரோடு விளையாடுவது என்பதை முடிவு செய்யவில்லை. பயிற்சியையும் துவங்கவில்லை.




No comments:

Post a Comment