'நான் ஆர்.மீனாட்சி. கடந்த 2000-வது வருடம் எனக்கு எச்.ஐ.வி இருப்பது மருத்துவ சிகிச்சை மூலம் எனக்கு தெரியவந்தது. முற்றிலும் உடைந்து போனேன். அந்த காலக் கட்டத்தில் எய்ட்ஸ் இருந்தால் இறப்பு நிச்சியம். அது ஒரு உயிர் கொல்லி என எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் செய்து வந்தார்கள். ஏன் மருத்துவமனைகளிலேயே கூட எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் தான் என எழுதப்பட்டிருந்தது. இதனால், மனதளவில் பெரும் பாதிப்பு அடைந்தேன்.

ஆனால் என் வீட்டிலோ எய்ட்ஸ் நோயாளி என்ற எந்த ஒரு பாகுபாடும் பார்க்கவில்லை. என்னை சம்மமாகவே நடத்தினார்கள். எனக்கு பல வழிகளில் உற்சாகம் அளித்தார்கள். அதன் மூலம் மரணக் கனவிலிருந்து என்னை மீட்டெடுத்தார்கள். ஆனால், அப்போது என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையை அனுபவித்து வந்தார்கள். மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளி பிரிவுகளில் ஒருத்தர் பக்கத்திலும் ஒரு அட்டண்டர் கூட இருக்கமாட்டார். எய்ட்ஸ் நோயாளிகள் பக்கத்தில் பொதுமக்கள் நிற்பதற்கும் கூட பயப்பட்டனர். அதனால் எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் ஒழிந்தும், மறைந்துமே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், நானோ மாறாக சமூகத்தோடு ஒற்றி வாழ்ந்தேன். என்னைப் போன்ற பலரது நிலையை மாற்ற எண்ணினேன். அதனால் தான், 2002-ம் வருடம், விசு நடத்திய அரட்டை அரங்கத்தில், முதன் முதலில் நானே விருப்பப்பட்டு கலந்துகொண்டு, எச்.ஐ.வி பற்றி உண்மையான விளக்கத்தை மக்களுக்குக் கூறினேன். எய்ட்ஸ் பற்றி நான் பேசுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் கவுன்சிலர் (மனச்சிக்கல்கள்) ஆனந்த் குமார் மற்றும் கோவை அரசு மருத்துவர் மாகதேவன் ஆகியோர்தான்.

அதன் மூலம் பலரது வாழ்வில் மாற்றம் நடந்ததை நான் உணர்ந்தேன். அதற்கு பின் மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகள் பிரிவில் அட்டண்டர் கூடவே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். நான் அரட்டை அரங்கத்தில் கூறியவுடன், பல ஊடகங்கள் எனது பர்ஸ்னல் வாழ்வை அவர்களது ஊடகங்களில் போட்டு, என்னை சில மனச்சிக்கல்களுக்கும் ஆளாக்கினர். அதுவும் ஒரு புறம் இருந்தது. நான் முன்னாடி ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். ஒன்பதாவதே படித்திருந்தேன். பின் 2003-ம் வருடம் சென்னையில் கவுன்சிலிங்கில் டிப்ளமோ முடித்தேன். அடுத்து எம்.ஏ சமூகவியலியும் கரஸில் படித்து முடித்தேன். 2003-ம் வருடமே எனக்கு எச்.ஐ.வி இருப்பதை ஒரு விளம்பரத்தின் (போஸ்டர்) மூலம் தமிழ்நாடு முழுக்க ஒட்டி பலரது வாழ்வில் ஊக்கத்தை ஏற்படுத்தினேன். அதனையடுத்து 2005-ம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதை தமிழக அரசு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து நான் இங்கு வந்து எய்ட்ஸ் பற்றி முறையான கருத்துக்களை மக்களுக்கு பரப்ப ஈடுபட்டு, சமூக சேவகராக மாறினேன். இப்போது நான் கவுன்சிலராக பணி புரிந்து வருகிறேன். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து CDHUNS என்ற சங்கத்தைத் தொடங்கினோம். அந்த CDHUNS என்றால் கோவை டிஸ்ட்ரிக்ட் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்கம். அதன் மூலம் நாங்கள், முதலில் மக்கள் முன்னிலையில் சென்று பியர் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தோம். அதாவது நாங்கள் எய்ட்ஸ் மூலம் அனுபவித்த சொந்தக் கருத்துக்களை கூறி மற்றவர்களை ஊக்கப்படுத்துவது, அடுத்து காய்கறி சந்தை, ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரது முன்னிலையில் முகாமிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்தோம். பல கல்லூரிகளுக்குச் சென்று அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுத்தோம்.இந்த எய்ட்ஸைப் பொருத்தவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கட்டுப்பாடோட இருப்பது அவசியம். மன ரீதியாக இருப்பதற்கு சிறந்த கவுன்சிலிங் பெறுவதும். யோகா போன்று செய்து வருவதும் நல்லது. உடல் ரீதியாக என பார்க்கும் போது, எய்ட்ஸ் மூலம் வரும் பக்கவிளைவுகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும், எச்.ஐ.வி டி.பி (Tuberculosis) முக்கியமானது. இதைக் குணப்படுத்த ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து அதன்படி நடந்து வந்தாலே போதுமானது. இடையில் நெஞ்சு வலியோ, மூட்டு வலியோ வந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வர வேண்டும்.

இப்போதைய சூழ்நிலையில் எய்ட்ஸை மட்டும் தான் முழுமையாக குணப்படுத்த நம்மிடம் சிகிச்சை இல்லை. மற்ற படி எய்ட்ஸை கட்டுப்படுத்தவும், அதனால் வரும் சந்தர்ப்பவாத நோய்களைக் குணப்படுத்தவும் நம்மிடம் மருந்து உள்ளது. கட்டாயம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை CD4 டெஸ்டை எடுத்துக்கொண்டு, அதன் படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் எச்.ஐ.வி.யைக் கட்டுப்படுத்த ART (Anti Retro viral Therapy) கூட்டு மருந்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். அந்த மாத்திரையை வாங்குவதற்கு மாதத்தில் ஒரு நாள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வரவேண்டியதுள்ளது. அதனால் எங்கள் சங்கம் சார்பாக அரசு மருத்துவமனைகளில் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது ART கூட்டு மருந்தை விற்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்'' என தைரியமும், தன்னம்பிக்கையும் கண்ணில் மிளிர முடிக்கிறார் ஆர்.மீனாட்சி.

No comments:
Post a Comment