Monetize Your Website or Blog

Saturday, 5 March 2016

தேர்தலுக்கு பயந்து ரசிகர்களை சந்திக்க மறுத்தாரா ரஜினி?!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டு முக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அவரை சந்திக்க சென்றுள்ளனர். ஆனால், சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.


லிங்கா படம் வெளியானபோது விநியோகஸ்தர்களுடனான பிரச்னையால் அமைதியாக இருந்தார் ரஜினி. அதன் பின்னர், கபாலி படம் ஷூட்டிங் இயக்குநர் ஷங்கருடன் இணையும் 2.0 படத்திற்கான டிஸ்கஷன்  என குதிரை வேகத்தில் ஒடிக் கொண்டிருக்கிறார் ரஜினி.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு,  இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷண் விருதை அவருக்கு அறிவித்து கெளரவித்தது. இது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்ததுடன், ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

இதற்காக, மகிழ்ச்சியுடன் அனுமதி கேட்டு வந்தவர்களை, உடல் நிலையை காரணம் காட்டி ரஜினி சந்திக்காமல் தவிர்த்துவிட்டார், தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்தித்தால் ரசிகர்கள் அரசியல் குறித்து பேசுவார்கள் என எண்ணியே அவர்களை சந்திப்பதை ரஜினி தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரஜினியை சந்திக்க சென்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ''மத்திய அரசு தலைவருக்கு விருது அறிவித்ததை விழா எடுத்துக் கொண்டாட நினைத்தோம். இந்த விழாவை திருச்சியில் 100 ஏக்கரில் இடம் பார்த்து பெரிய மாநாடு போல் நடத்துவதற்கு திட்டமிட்டோம். மேலும், தலைவரின் 64-வது வயதை குறிக்கு வகையில், 6,400 பேருக்கு நலதிட்டங்களை தலைவர் கையால் விழா மேடையில் வழங்கவும் நினைத்தோம்.

தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் இதில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இதற்கு எவ்வளவு செலவாகும், எந்த இடத்தில் நடத்துவது என அனைத்தையும் திட்டமிட்டு ரெடி செய்து எடுத்து கொண்டு,  தலைவரை சந்திக்க சென்றோம். தலைவரின் உதவியாளாரிடம் திட்ட மதிப்பீட்டை காண்பித்து அவரிடம் காண்பிக்க சொன்னோம். அவரும் நாங்கள் கொடுத்த தகவலை தலைவரிடம் காட்டி இருக்கிறார்.

அதன்பின் வெளியே வந்த உதவியாளர், 'நீங்கள் அளித்தவற்றை தலைவர் ஒவ்வொன்றாக பார்த்து சூப்பர்.. சூப்பர்... என்று சொன்னார். மேலே பார்த்தவாறு ஆழ்ந்த அமைதியுடன் சில நிமிடங்கள் இருந்தவர், உடல்நிலை சரியில்லை. எனவே இப்போது அவர்களை சந்திக்கவில்லை. இந்த பாராட்டு விழா நடத்துவது குறித்தும் பின்னர் யோசிக்கலாம்' என சொல்லி அனுப்பினார் என்றார். அதனால், வழக்கம் போல் நாங்கள் அவரது உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்றனர் ரசிகர்கள்.
இது குறித்து தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் கூறும்போது, ''தலைவருக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்க தஞ்சாவூர், திருச்சி, நாகை, மதுரை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் எல்லோரும் கடந்த வாரத்தில் தலைவர் வீட்டிற்கு சென்றோம்.
தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சந்திக்க முடியவில்லை. அவர் உதவியாளரை சந்தித்துவிட்டு வந்தோம். மீண்டும் நாங்கள் தலைவரை சந்தித்து, அனுமதி வாங்கி பாராட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்துவோம்" என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.



மேலும் சிலரோ, ''விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரம், பொதுக்கூட்டம் என தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் ரசிகர்கள் நமக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தி, அதில் நம்மை கலந்துகொள்ள அழைக்கிறார்கள். அப்படி செய்தால், அது தேவை இல்லாத பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்'' என்று நினைத்திருப்பார் என்கிறார்கள். 

பொதுவாகவே தேர்தல் வந்தால் தன் பெயரும் தன் ரசிகர்கள் பெயரும் பெரிய அளவில் சும்மாவே அடிபடும். இதில் பாராட்டு விழாவை மாநாடு போல் நடத்தினால் கேட்கவா வேண்டும். இதை தவிர்க்கவே ரசிகர்களையும் சந்திக்காமல் திருப்பி அனுப்பியிருப்பார். ஆனாலும். ரசிகர்கள், எப்படியாவது இந்த விழாவிற்கு தலைவரிடம் அனுமதி வாங்கி படையப்பாவின் படையை காண்பிப்பதற்கு தயாராகதான் உள்ளனர்" என்றனர்.


No comments:

Post a Comment