Monetize Your Website or Blog

Thursday, 28 April 2016

கூட்டணி கட்சியினரே பணம் கேட்டால் எப்படி? -வைகோவின் நெக்ஸ்ட் ஆவேசம்!

தேர்தல் பணிகளுக்காக நம் கூட்டணியில் உள்ள சில கட்சியினரே செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் எப்படி என கோவையில் வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (27-ம் தேதி) கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டபோது, ''இந்த தேர்தலில் கோடான கோடி பணத்தை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று நூதனமான முறையில் தரப்போகிறது.

இந்த நேரத்தில், இந்த பண வெள்ளத்தை எதிர்த்து நாம் வெல்ல முடியுமா என்ற கேள்வி ஊடகங்களில், பத்திரிகைகளில் முன்வைக்கப்பட்டு வருகிறது. நாம் வெல்ல முடியாது என்றும், நமக்கு வாய்ப்பில்லை என்றும், இன்னும் நம்மை அறவே கணக்கில் எடுத்து கொள்ளாத வாதங்கள் திட்டமிட்டு, சில ஏற்பாடுகளின் அடிப்படையில் தந்து கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் யாரால் வெல்ல முடியும் என்றால், என்னைப் போன்றவர்களின் பேச்சால் மட்டும் அல்ல.

எந்த கட்சியிலும் இல்லாத இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகளால் தான் இது முடியும். கோவையில் நான் வேட்பாளர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, 3, 4 வயது குழந்தைகள், நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பினார்கள். என்னிடம் பணமில்லை அதனால் போட்டியிடவில்லை என சொன்னேன். குழந்தைகள் கூட அரசியல் பேசுகிறார்கள்.

இந்த இளம் பிள்ளைகள் நினைத்தால் நிச்சயம் நம்மை வெற்றி பெற வைக்கலாம். இந்த  கூட்டம், ஆரவாரம், கோஷம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நமக்கு வெற்றியை தந்துவிடாது. இந்த இளம் தலைமுறை, இந்த முறை முடிவெடுத்தால் மாற்றத்தை கொண்டு வரலாம். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். பேய் மழையில் தமிழகத்தை  காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். தமிழகத்தையே காப்பாற்ற போகிறவர்களும் அவர்கள் தான்.

ஊழலுக்கு இரு கட்சிகளும் அடையாளம். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. அதனால் நாட்டை பாழாக்குபவர் ஜெயலலிதா. ஊழலில்லாத அரசு, மதுவில்லாத அரசை நாங்கள் கொண்டு வருவோம். மாணவர்கள் கல்விக்கடனை அரசு ஏற்றுக்கொள்ளும். பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை நிதியுதவி வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் தரமிகுந்த மருத்துவமனைகள் ஆக்கப்படும். இந்த தேர்தலில் நீங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.


தேர்தல் பணிகளுக்காக நம் கூட்டணியில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல இடங்களில் பூத் செலவுக்கு முதல் சுற்றில் 15 ஆயிரம் வேண்டும். 2வது சுற்றி; 15 ஆயிரம் வேண்டும். 3வது சுற்றில் 15 ஆயிரம்  வேண்டும் என லட்சக்கணக்கான பணத்திற்கு கணக்கு கொடுக்கிறார்கள். கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் பூத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் கொடுப்பார்கள். அவர்களோடு கூட்டணி வைத்திருந்த அந்த பாவத்தின் காரணமாக நம்மவர்கள் சிலருக்கு அந்த நோய் வந்திருக்கிறது.

நம் வேட்பாளரிடம் கேட்கிறார்கள், வேட்பாளர்களிடம் எதற்காக கேட்கிறீர்கள். நம் வேட்பாளர் ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். அதை வைத்து எப்படி வேலை செய்வது என கூட்டணியில் உள்ள சில கட்சியினர் கேட்கிறார்கள். நான் பகிரங்கமாக சொல்லி விடுகிறேன். பணம் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது. கூட்டணி கட்சித் தொண்டர்களே பணம் கேட்டால் எப்படி..? யாருக்கு வருத்தமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. 234 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன். பணம் 10 ஆயிரம் எதுக்கு? பாதி பேர் தண்ணி அடிக்க. பணம் கொடுக்க மாட்டோம்" என்று கண்டிப்பாக பேசினார்.

கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!

ரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக  கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, அந்த மாநிலத்திலேயே சுத்தமான கடற்கரைப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதற்குக் காரணம் 40 வயதை கடந்த காலு டாங்கர் என்ற தனி மனிதனின் அளப்பரிய பங்கு.

கடந்த நான்கு வருடங்களாக ஒரு சேவை போல்,   தினமும் தண்டி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகிறார் காலு.
குப்பைகளை சேகரிக்க கையில் ஒரு பெரிய சாக்குப்பையோடு தினமும் காலை 6.30 
மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார். மக்கள் அதிகம் கூடும் மூன்று சதுர கிலோமீட்டர் கடற்கரை பரப்பளவை, தினமும் சுத்தம் செய்கிறார். இரண்டு மணி நேரம் சுத்தம் செய்த பிறகு, வரும் பார்வையாளர்களுக்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் நிரப்புவார்.

இவர், தான் கடற்கரையை இவ்வாறு சுத்தப்படுத்திக்கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து முகநூலிலோ  ட்விட்டரிலோ அப்லோட் செய்துகொள்ளவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் சுற்றுப்புறத் தூய்மைக்காக இந்த சேவையை செய்துவரும் காலு டாங்கரிடம்,  எதனால் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள் என்றால், ‘தினமும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரிடமும் குப்பைகளை தயவுசெய்து குப்பைத் தொட்டியில் போடுங்கள் என எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் பயனில்லை. எனவே நானே  குப்பைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டேன்’ என்கிறார்.

கடற்கரையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் மீனவர்களிடம் மாதம் 100 ரூபாய் வசூல் செய்து, அதன் மூலம் அங்கிருக்கும் தண்ணீர்த் தொட்டியைப் பராமரிப்பது மற்றும் வேறு சில பராமரிப்பு வேலைகளையும் செய்து வருகிறார்.


காலு போன்ற மனிதர்களின் மகத்தான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, நாம் குப்பைகளை சேகரித்து கடற்கரையை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ.. குறைந்தது அடுத்தமுறை கடற்கரைக்குப் போகும்போது குப்பையை போடாமலாவது இருக்கலாமே...


100 ஏக்கர் ஆரண்யா வனம்: 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு!

க்களுக்காக இலவச மருத்துவமனை, கல்விக்காக இலவச பள்ளி, வயதானவர்களுக்காக முதியோர் இல்லம், கமூக சிந்தனையுடன் இயங்குபவர்கள் மத்தியில், இனி எதிர்வரும் எல்லாதலைமுறைகளும் இயற்கையோடு இயைந்து நலமுடன் வாழ, தனி ஒரு மனிதனாக ஒரு காட்டை உருவாக்கியுள்ளார்  ஆரண்யா சரவணன்.
ஆரண்யா சரவணன்...? புதுச்சேரி ஆரோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில்,  தனது 22 வருட கடும் முயற்சியால் 'ஆரண்யா வனம்' என்ற காட்டை உருவாக்கிய வனப் போராளி!

புதுச்சேரி நகரப்பகுதியிலிருந்து 4 மைல் தொலைவில் அமைந்துள்ள ஆரண்யா வனம், பச்சைப்போர்வையை போர்த்தியதுபோன்று பசுமை கொஞ்சுகிறது. காடுகள்,  பறவைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இல்லம். மனிதர்கள் அங்கு ஒரு சாதாரண பயனாளி மட்டுமே. அப்படி ஆரண்யா வனமும் மனிதனின் வாசம் படாத  வனம்தான் என்பதற்கு சாட்சியாக, காட்டிற்குள் நுழைந்துதும் நம்மை வரவேற்கின்றன பாம்புகள். ஆச்சர்யமாக நம்மை அச்சுறுத்தாமல் விலகி வழிவிட்டு செல்கின்றன.


குயில் ஓசையை மறந்துவிட்ட இந்த தலைமுறையான நமக்கு, அங்கு ஒலிக்கும் குயில்களின் ரீங்கார ஓசை ஆரம்பத்திலேயே அமர்க்களமான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. பறவைகளின் அந்த ஓசையில் அவற்றின் சுதந்திரம் தெறிக்கிறது. கோரஷான அந்த குரல் நமக்கு அச்சம் தரும் அதே வேளை, 'இது எங்களின் வனம்' என அவை பெருமிதப்படுவதுபோல் இருக்கிறது.

காட்டின் மையத்தில்,  தலையில் முண்டாசு கட்டி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி நம்மை வரவேற்கிறார் சரவணன்.

“பூமி வெப்பமயமாவதால் எதிர்காலத்தில் பேரழிவுகளை விரைவில் சந்திக்க இருக்கின்றோம். அதற்கு முட்டுக்கட்டையிடும் முயற்சிதான் இந்த காடு வளர்க்கும் திட்டம்” என சுருக்கமாக தன் முயற்சியை சொல்கிறார் ஆரண்யா வனத்தின் (காடு) சொந்தக்காரர் சரவணன்.

'காடுகளை காக்கவேண்டும் என்ற உந்துதல் எதனால் ஏற்பட்டது?' என நாம் கேள்வியை முன்வைத்தோம்.
“திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில், மரங்கள் நிறைந்த பசுமையான வளையாப்பட்டு கிராமத்தில் பிறந்தவன் நான். பச்சைத் தங்கம் எனக் கூறி மலையடிவாரத்தில் உள்ள மரங்களை சமூக விரோதிகள் வெட்டி சாய்ப்பார்கள் தொடர்ந்து இந்த சீரழிவை பார்த்துவந்த சிறுவனான எனக்கு மனம் குமுறியது. ஒருமுறை எனது மாமாவுடன் சேர்ந்து இந்த அக்கிரமத்தை எதிர்த்தோம். ஆனால் பலனில்லை. இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், இயற்கையின் மீதும் காடுகளின் மீதும் அதிக பற்றுக்கொண்டேன். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை அழிவிலிருந்து காப்பாற்ற வலியுறுத்தி, 1987 -ம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் சார்பில், கன்னியாகுமரியிலிருந்து கோவா வரை நடைபெற்ற பாதயாத்திரையில் கலந்து கொண்டேன். பின்னர் இயற்கையை பேணிக்காக்கும் ஆரோவில் சமூகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்றார் .
'ஆரண்யா காடு உருவாக்கம் பற்றி சொல்லமுடியுமா?' என்ற நமது அடுத்த கேள்விக்கு,  சற்று இடைவெளிவிட்டு பதில்சொல்லத்துவங்கினார் சரவணன்.

“புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கும் ஊசுட்டேரி அருகே உள்ள பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தை, ஆரோவில் நிர்வாகம் 1967 ம் ஆண்டு வாங்கியது. வெட்டாந் தரையாகவும் செம்மண் மேடாகவும் இருந்ததால்,  இந்தப்பகுதியை கால்நடைகள் மேய்ச்சலுக்காக மட்டுமே கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

1994 -ம் ஆண்டு ஆரோவில் நிர்வாகத்திடம் எனது விருப்பத்தை வெளியிட்டேன். நிலம் எனது பராமரிப்பில் வந்தது. வெட்டாந்தரையாக இருந்த நிலத்தில், மரங்களே இல்லாத சூழலில், சிறிய வகை குடில் ஒன்றை ஆரோவில் நிர்வாகத்தினர் அமைத்துக் கொடுத்தனர்.

ஆரம்பத்தில் இரவு பகல் வித்தியாசமின்றி பாம்புகளும்,  விஷப் பூச்சிகளும் சர்வசாதாரணமாக  உலவிக்கொண்டிருக்கும். எனது முயற்சிகளுக்கு இத்தகைய ஒரு சூழல் அச்சம் தருவதாக இருந்தது. போகப்போக அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை கையாண்டேன். பிறகு அந்த இடத்தில் தங்கி வனவள மேம்பாட்டு முயற்சியில் ஈடுபட்டேன். இந்த நிலத்தை வளப்படுத்த மழைநீரை வீணாக்காமல் சேமிக்க முடிவு செய்தேன். அதுதான் இந்த காடு வளர நான் எடுத்த முதல் முயற்சி.

உள்ளூர் இளைஞர்கள் சிலர் என் முயற்சிகளுக்கு பக்கபலமாய் இருந்தார்கள். அவர்கள் உதவியுடன் மணல் மேடுகளில் உள்ள ஓடைகள் வழியாக, வீணாகும் மழைநீரை தடுத்து நிறுத்தி, ஆங்காங்கே உயரமான வரப்புகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைத்தோம். இதனால் 70 சதவீத மழைநீர் வீணாகாமல் நிலத்திலே தேங்கியது. இந்த முயற்சியினால் நிலத்தடி நீர்மட்டம் 50 அடியிலிருந்து 35 அடியாக உயர்ந்தது.


உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் முதற்கட்டமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்  நடப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து அங்குள்ள கோயில்கள், கிராமப் பகுதிகளிலிருந்து மரக்கன்றுகள், விதைகள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை சேகரித்து வந்து நட்டுவைத்தோம்.

செம்மண் பூமி என்பதால் மரங்கள் தடையில்லாமல் வளர வசதியாக இருந்தது. சில வருடங்களில் மரத்தின் விதைகள் மூலம் இயற்கையாகவே வளர்ந்த மரங்களின் எண்ணிக்கையே லட்சத்தை தாண்டியது.

இது எனக்கு எடுத்துக்கொண்ட பணியில் பெரும் உத்வேகத்தை தந்தது. அடுத்தகட்டமாக நாட்டில் அழியும் நிலையில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கினோம்.
இப்போது இந்த காட்டில் மரங்கள், செடி கொடிகள் என பல லட்சம் தாவரங்கள் உள்ளன. சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, கருங்காலி என 1000 க்கும் மேற்பட்ட விதவிதமான மரங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள மரங்களை வாழ்விடமாக கொண்டுள்ள 250 க்கும் அதிகமான பறவையினங்கள் காணப்படுகின்றன” என்று சொல்லும் சரவணன் முகத்தில் பெருமித ரேகைகள்.

இடைவெளி விட்டு மீண்டும் பேசத்துவங்குகிறார்  சரவணன். “நரி, முள்ளம்பன்றி, முயல், எறும்புத்திண்ணி என 40 வகைக்கும் அதிகமான விலங்கினங்கள் இங்கு உள்ளன. மூலிகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அதிகம் உள்ளது இந்த காட்டின் சிறப்பு” என வெற்றிகரமான மனிதராக புன்னகைக்கிறார் சரவணன்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில்,  “சுற்றுப்புற சூழல் நண்பன்’ என்ற மாத இதழையும் நடத்தி வந்திருக்கிறார் சரவணன். மனைவி வத்சலா, மகள் நற்செல்வி என அளவான குடும்பம் அவருடையது.
சரவணன் உருவாக்கிய ஆரண்யா வனத்தை சுற்றிப்பார்க்க,  பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவருகின்றனர் தற்போது. பேராசிரியர்கள், தாவரவியல் அறிஞர்கள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் பார்வையிட வருகின்றனர். அவர்களுக்கு மரங்கள், காடுகள் உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி மையம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தனிஒருவனாக நின்று ஆரண்யா வனத்தை உருவாக்கிய சரவணன், தன் பணி நிறைவடைந்ததாக கருதி காட்டைவிட்டு வெளியேறிவிடவில்லை. மனைவி, மகளுடன் காட்டிலேயே வீடு கட்டி, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்கிறார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களால் நாம் எத்தனை உயரத்தை எட்டிப்பிடித்தாலும், இயற்கையிலிருந்து விலகி நாம் எதையும் சாதிக்கமுடியாது. பேராபத்துக்களின்போது அது நம்மை காப்பாற்றுமா என்பது ஐயமே.

இயற்கையை நேசிப்பதும்,  இதை வளர்த்தெடுப்பதுமான நடவடிக்கைகள் மட்டுமே அந்த பேராபத்துகளிலிருந்து நம்மை காக்கும் ஆயுதமாக இருக்கும். அத்தகையதொரு முயற்சிக்கு முன்மாதிரி மனிதராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் சரவணன் போன்ற வனப் போராளிகளுடன் கைகோர்த்து செயல்படுவது மட்டுமே, நமது எதிர்கால தலைமுறைகளை இந்த மண்ணில் சிக்கலின்றி வாழ வைக்க ஒரேவழியாக இருக்கும்.

சுவரில்லாமல் சித்திரமில்லை...உண்மைதான், காடுகள் இல்லாமல் நம் கனவுகள் இல்லை!




 

விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட காதலிகளின் கணவன்கள்... சென்னை திகில்!

சென்னையில் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட நபர்களின் மரணம் குறித்து போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையின் முடிவில் சென்னை ஈஞ்சம் பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பிடிபட்டுள்ளார்.
உத்திரமேரூரைச் சேர்ந்த ஶ்ரீதரை கடந்த ஆண்டு மே-மாதத்திலும்,  அக்டோபர் மாதத்தில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஹென்றியையும் விஷ ஊசி மூலம் கொன்ற ஸ்டீபன்,  இதற்கு முன்னால், தன்னுடைய சொந்த மைத்துனர் ஜான் பிலோமினனை கடந்த ஆண்டு ஏப்ரலிலும் விஷ ஊசி போட்டுக் கொன்றுள்ளார்.

இந்தக் கொலைவழக்கில் ஸ்டீபன் பிடிபடுவதற்கு காரணமாக இருந்தது, அவர் வீட்டில் கொள்ளை போனதாக  கடந்த 4.4.2016 அன்று அவரே கொடுத்திருந்த புகார்தான்.  "என் வீட்டில் இருந்து 40 பவுன் நகைகளை யாரோ கொள்ளையடித்துச் சென்று விட்டனர்" என்று புகாரில் ஸ்டீபன் சொல்லியிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பாலாஜி, முருகானந்தம், சதீஷ்குமார் ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட அடுத்தகட்ட விசாரணையில்தான் ஸ்டீபன் ஒரு சீரியல் கில்லர்  என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது.

'எப்படி ட்ரேஸ் செய்தீர்கள்?' என்று விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் பாண்டியனிடம் கேட்டேன். 
 " ஸ்டீபன் கொடுத்த புகாரில் மூன்று பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டதோடு, ஸ்டீபன் சொல்லி அடுத்தடுத்து முன்று பேரை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக வாக்கு மூலத்தில் சொல்லி விட்டனர்
மனைவியைப் பிரியக் காரணமாக இருந்த மைத்துனர் ஜான்பிலோமின்,  ஹென்றியின் மனைவியோடு இருந்த கள்ளக் காதலுக்காக ஹென்றி,  ஶ்ரீதரின் மனைவியோடு இருந்த கள்ளக் காதலுக்காக ஶ்ரீதர் என்று மிகவும் சாதாரணமாக  ஸ்டீபன் சொல்லி விஷ ஊசியை பயன்படுத்தி கொலை செய்துள்ளனர்.
ஶ்ரீதர் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள்,  விஷ ஊசிகள், சிரிஞ்சுகள் கைப்பற்றப் பட்டுள்ளன.  விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்றார் பாண்டியன்.
சென்னை அண்ணா சாலையில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென மயக்கம் வந்தவர் போல் தடுமாறி, வண்டியை ஒரு தடுப்பில் மோதி நிறுத்திய ஜான் பிலோமினை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,  ஜான் பிலோமினை பரிசோதித்த டாக்டர்கள்  அவர் இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

அந்த ஜான் பிலோமின்தான் விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டதாக ஸ்டீபன் வீட்டில் கொள்ளையடித்து பிடிபட்டவர்கள்  இப்போது, போலீஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஜான் பிலோமினனை பக்கத்தில் உரசுவது போல் சென்ற கொலையாளிகள்,  கையில் இருந்த குடைக் கம்பியின் கைப்பிடி முனையில் பொருத்தியிருந்த  விஷ ஊசி மருந்தை, வண்டி போய்க் கொண்டிருக்கும்போதே ஜான் பிலோமினனின் இடுப்பில்  குடைக் கம்பியால் இயல்பாக குத்துவது போல குத்திக் கதையை முடித்துள்ளனர்...
இன்னும் இதுபோல் எத்தனை உயிர்களை இவர்கள் வலிக்காமல் ஊசி போட்டு நிறுத்தியுள்ளனரோ என்று நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. சென்னையில் இந்த முறையில் கொலைகளை செய்து முடிக்கும் டீம் வேறு ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமைதான்.
சாதாரணமாக சாலையில் போனார்... வெயிலில் சுருண்டு விழுந்தார், மயங்கினார், செத்தார் என்று முடிகின்ற வழக்குகளையும் இனி தீவிரமாக விசாரிக்க வேண்டும்.



எறும்புகள் எனும் எந்திரன்... கரையான் எனும் காப்பாளன்... தவளை எனும் தாராளன்!

நாம் வாழும் இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும்,  நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. நமக்காக வேலை செய்யும் அந்த அழகான உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா....

1. எறும்புகள் எனும் எந்திரன்
அளவில் மிகச் சிறிய உயிர்தான், ஆனால் மிகச் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கும்.  'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட எறும்புகள்தான், இந்த மண்ணில் இருக்கும் எந்தவொரு பொருளையும் சிதைத்து மண்ணோடு கலந்து மண்ணை வளமாக்குகின்றன. இவை ஏற்படுத்தும் துளைகளால் காற்றும் நீரும் மண்ணுக்குள் சென்று, அவற்றிற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து   மண்ணின் வளத்தைக் கூட்டுகின்றன. விவசாயத்தின் இன்னொரு நண்பன் இந்த எறும்புதான். எறும்புகள் இருந்தால் உரங்களே தேவையில்லை. தண்ணீர் இல்லாத சமயத்திலும் எறும்புகள் கோதுமை விளைச்சலுக்கு 36% உதவுகின்றன.
இவை விதைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றன. அவை கொண்டு செல்லும் இடங்கள் விதைகள் வளரக்கூடிய வளமான இடமாக இருப்பது இன்னொரு அதிசயம். 
ஆனால் எறும்புகளுக்கு நாம் வீடுகளில் பொடி வைத்து சாகடிக்கிறோம். இதுவரை 12000க்கும் மேலான எறும்பு கூட்டங்கள் நம் பூமியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் அழித்துவிட்டோம். எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் அவற்றைச் சிதைத்து தவிடுபொடியாக்க வல்ல இந்த எறும்புகளால் கூட பிளாஸ்டிக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.
2. கரையான் எனும் காப்பாளன்
நம் வீட்டில் பல பொருட்களை இவை சிதைத்திருக்கக் கூடும். அதற்காக நாம் அவற்றை வெறுத்திருக்கவும் கூடும். ஏனெனில் அவற்றிற்கு அது உங்கள் வீடு என்று தெரியாது. இவை இல்லாவிட்டால் இந்த உலகில் பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். கழிவுகளை உலகில் இல்லாமல் ஆக்குபவை இந்தக் கரையான்கள்தான். இவைகளால் தான் இறந்தவர்கள் இந்த உலகில் ஆன்மாக்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் குப்பைகளாக இருந்திருப்பார்கள்.
3. வெளவால் எனும் 'பேட்மேன்'
இவை பெரும்பாலும் பேய் படங்களில் பறந்து வருவதால், பயங்கரமான உயிராகவே பாவித்து வருகிறோம். ஆனால் உண்மை அப்படியல்ல. இயற்கை சமநிலைக்கு மிக முக்கியமான உயிராக வெளவால் இருந்து வருகிறது. 1200 வகை வெளவால்களில், மூன்று வகை வெளவால்கள் மட்டுமே ரத்தம் குடிப்பவை. அவற்றை சீண்டும் வரை அவை நம்மை எதுவும் செய்வதில்லை. மாறாக அவை மனிதனுக்கு உதவவே செய்கின்றன. முக்கியமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களைத் தின்று விடுகின்றன. ஒரு வெளவால் ஆயிரக்கணக்கான கொசுக்களை கொன்று திண்கிறது.

இவை பெரும்பாலான தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை திண்பவை. விவசாயிகள், வெளவாலுக்கு நன்றிக் கடன்பட்டவர்கள். இவை உண்ணும் பூச்சிகளால் மட்டுமே பயிர்கள் ஒருவகையில் காக்கப்படுகின்றன. ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு உதவும் இந்த உயிருக்கு மரங்கள் மிக முக்கியம். விதைகளைப் பரப்புவதிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் இவை உதவுகின்றன. ஆனால் இவை மரங்கள் இல்லையென்றால் அழிய நேரிடும்.
4. தவளை எனும் தாராளன்
வாய் பெரிதாக உள்ள, சிரிச்ச முகமான தவளைகளைப் பெரிதாகவே நாம் மதிப்பதில்லை. அறுவறுக்கத்தக்க ஒன்றாகவே அவற்றைப் பார்க்கிறோம். பள்ளிக்கூடங்களில் உடலைக் கிழித்து சோதனை செய்வதைக் காட்டிலும், அதிகமான உதவிகளை மனிதனுக்குச் செய்கின்றன தவளைகள்.
நம் இயற்கையின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை விடுபவை இவைதான். இவற்றின் மேற்புறத்தோல், சுற்றுச்சூழலில் இருந்து துகள்களை உறிஞ்சும் வகையில் உள்ளதால்,  பெரும்பாலான மாசுக்களை அவற்றின் திசுக்களில் மூலம் உறிஞ்சிக்கொள்கின்றன. 
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளைகள்தான் தண்ணீரை கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு, முதலில் எதிர்வினையாற்றுபவை தவளைகள். அதை வைத்துத்தான் ஆராய்ச்சியாளர்கள் சீர்கேட்டுக்கான நடவடிக்கையை எடுப்பார்கள்.
5. பாசக்கார பறவைகள்
பறவைகள் காடுகளை உருவாக்குவதிலிருந்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது வரை பல வகைகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. விதைகளைப் பரப்புவது, மகரந்தச் சேர்க்கையை அதிகரிப்பது, மண்ணை வளமாக்குவது என அனைத்திலும் பறவைகள் பங்கு உண்டு. விமானத்தின் தொழில்நுட்பத்தைப் பறவைகள்தானே நமக்குச் சொல்லி கொடுத்தன. இயற்கையில் சமநிலையையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும் பறவைகளைக் காப்பதில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டாமா?
6. திறம் படைத்த திமிங்கலங்கள்
உலக வெப்பமயமாதலினால் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயர்ந்து நிலநடுக்கம், சுனாமி, பருவ நிலை மாற்றம் போன்ற பேரழிவுகள் நடக்காமல் இருக்க,  உலகம் முழுவதும் பேச்சு வார்த்தையும் ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த ஆராய்ச்சிகளுக்கு உதவுபவை இந்த திமிங்கலங்கள். வெப்பமயமாதலின் முதல் பாதிப்பு ஆர்டிக் பகுதியில் இருந்துதான் தொடங்கும். அங்குள்ள திமிங்கலங்களே அதைக் கண்காணிக்க, ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி வருகின்றன. வெப்பம் அதிகமாவதை அளவிட வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெர்மோ மீட்டர்களையும், சிறிய சாட்டிலைட் டிரான்ஸ்மிட்டர்களையும் திமிகலங்த்திற்குள் செலுத்தி கண்காணித்து வருகின்றன. ஏனெனில் கடலுக்குள் மிக ஆழமாக செல்லக் கூடியவை திமிங்கலங்கள்தான்.
7. நாய்கள் பாதுகாவலர்கள் மட்டுமல்ல

மனிதனுக்கு ரொம்பவே தோஸ்தானது, நாய்கள்தான். மோப்பம் பிடிப்பது, பாசமாக வாலாட்டுவது போன்ற வேலைகளை மட்டும் செய்யவில்லை. மாறாக உலகில் அழிந்து வரும் உயிரினங்களைக் கண்டுபிடிக்கவும் நாய்கள் பயன்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் காடுகளில் இருந்த ஜாகுவார், சீனாவில் உள்ள கருப்பு கரடி போன்றவற்றை ஆராய்ச்சியாளர்களை கண்டுபிடித்து காப்பாற்றுவதற்கு நாய்கள் பெரிதும் உதவுகின்றன.
8. ஆக்டோபஸும் எலிகளும்
ஆக்டோபஸ்கள் மனிதனைப் போலவே புத்திசாலிகள். கடலுக்குள் இவை வீடு கட்டுவதில் கில்லாடிகள். சிப்பிகள், ஓடுகள், கற்கள் மேலும் நாம் கடலில் கொட்டும் குப்பைகளையும் கொண்டு இவை தங்களுக்கான வீடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. 
எலிகள் மோப்பம் பிடிப்பதில் நாய்களைப் போலவே கில்லாடிகள். ராணுவங்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, மனித குலத்துக்கான மருந்துகள் முதலில் எலிகளில்தான் சோதனை செய்யப்படுகின்றன.
9. உயிர் தரும் தேனீக்கள்
சுற்றுச்சூழல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படுவது தேனீக்கள்தான். இவை நுகர்வதிலும், சுவைப்பதிலும், நிறங்களை அடையாளம் காணுவதிலும் திறமையானவை. மேலும் அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் புத்திசாலிகள். காற்றில் கலக்கும் விஷத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுப்பவை தேனீக்களே.

இந்த சிறு உயிரினங்கள் அனைத்தும், இயற்கையையும் சூழலையும் சமநிலையில் வைத்திருக்க தங்களுடைய இயல்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களாகிய நாம்தான்,  நம்முடைய இயல்பிலிருந்து விலகி வெகுதொலைவில் வந்து விட்டோம். ஆனால் இந்த உயிரினங்களையாவது நாம் விட்டுவைக்கலாம்.
புதுப்பேட்டைப் படத்தில் தனுஷ் சொல்வது போல 'இவங்களை நாம உயிரோட விட்டோம்னா, அவங்க நம்மள உயிரோட பாதுகாப்பாங்க' என்பதுதான் உண்மை. செய்வோமா?


அடம் பிடித்த விஜயகாந்த், சமாதானப்படுத்திய பிரேமலதா...! இது வேட்புமனு களேபரம்




உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட அவரது மனைவி பிரேமலதா சமாதானப்படுத்திய பின்னர் விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க– மக்கள் நல கூட்டணி– த.மாகா. சார்பில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய உளுந்தூர்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து வேனில் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகமது யூசுப் ஆகியோர் வந்திருந்தனர். மதியம் 1.30 மணி அளவில், தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் விஜயகாந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு கேட்டார்.


ஆனால் அதற்கு மறுத்த விஜயகாந்த், இப்போது உறுதி மொழி எடுத்துவிட்டு, வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் உறுதி மொழி ஏற்பது தேவையற்றது தானே. எனவே வேட்பு மனு ஏற்றுக்கொண்ட பிறகு உறுதி மொழி ஏற்க சொல்லலாமே என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். ஆனால் அதிகாரிகள் இப்போதே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


'வெல்வெட் கேக்தான் வேண்டுமென்று அடம் பிடிக்க மாட்டான் அ.தி.மு.க தொண்டன்...!' -விளாசும் நாஞ்சில் சம்பத்

பெங்களூருவில் வசிக்கும் அ.தி.மு.கவின் ஃபேஸ்புக் பிரபலம் பிரியா குருநாதனின் வெல்வெட் கேக் விளக்கம், சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. 'வெல்வெட் கேக் ஸ்டேட்டஸ் பணக்காரத்தன்மையின் வெளிப்பாடு' எனக் கொதிக்கிறார்நாஞ்சில் சம்பத்.  


அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியான பிரியா குருநாதன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், " யார் வீட்டுக்காச்சும் விருந்தாளியா போனா தயவு செஞ்சு சும்மா போங்க. இது என்னோட ஃப்ரீ அட்வைஸ். ஆர்வகோளாறுல ஸ்வீட் வாங்கிட்டு போறேனு தர்மசங்கடத்துல தள்ளிடாதீங்க. எங்க வீட்டுக்கு நேத்து ஒருத்தர் வந்தார் கல்யாண பத்திரிகை குடுக்க. வந்தவர் ஆறு கேக் வாங்கிட்டு வந்து குடுத்தார். எதுக்கு பணத்தை விரயம் பண்ணனும். என் பொண்ணு ஓபன் பண்ணி பாத்துட்டு நீயே ஆறும் சாப்பிடுனு சிரிச்சிட்டு போய்ட்டா. ஆர்டினரி கேக் எல்லாம் எல்லாம் இப்போ யார் தொண்டைலயும் இறங்கறதில்ல. எங்க வீட்டு ப்ரிஜ்ல எப்பவுமே ஒரு choco truffle or Black forest இருக்கும். அதெல்லாம் பழகி போய் இப்போ வேற எதுவும் திரும்பி பார்க்க முடியறது இல்ல. என் பொண்ணு இன்னும் ஒரு படி மேல. என் பையன் Bangalore la software engineer. அவன ஊருக்கு வா னு உயிர எடுத்திடுவா. வரும் போது ரெட் வெல்வெட் கேக் வாங்கிட்டு வரனும் அவன். ஒரு கேக் 250 ரூபாய்தான். காலம் இப்படி இருக்கு. ஆறு கேக்கும் என் வீட்ல வேலை செய்யும் அம்மணிக்கு பாசமா குடுத்தது தான் மிச்சம்…." என வெல்வெட் கேக் மகிமையை விளக்கியிருந்தார்.
பிரியாவின் பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதில் ஒருவர், ' உங்க தலைவி தமிழ்நாட்டு மக்கள அடிமை மாதிரி டீரிட் பண்றதான் நீங்க உங்க வூட்ல பண்ணிட்டு இருக்கீங்க…' எனக் கொதிக்க, இன்னொருவரோ, ' வீட்ல வேலை செய்யரவங்கள அடிமை மாதிரி நடத்தனும்.. நம்ம குடுக்கறததான் அவங்க தின்னனும்.. அப்பறம் பப்ளிசிட்டி தேட இந்த மாதிரி போஸ்ட் போட்டு நாங்க ஆர்த்தடாக்ஸ் அய்யோடக்ஸ்ன்னு பொங்கணும்…' என ஆவேசப்பட்டிருந்தார். பிரியாவின் ஸ்டேட்டஸுக்கு எதிராக பொங்கித் தீர்க்கின்றனர் நெட்டிசன்கள். 
இந்நிலயில், 'அ.தி.மு.ககாரங்களுக்கு வெல்வெட் கேக் மட்டும்தான் பிடிக்குமா?' என அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம்.

" வெல்வெட் கேக்கைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. கேக் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதுகூட கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு வலுக்கட்டாயமாக சில இடங்களுக்குச் சென்றால் கேக்கை ஊட்டுவார்கள். அதை வாயில் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்த ஒரு நிமிடத்தில் அந்தக் கேக்கை துப்பி விடுவேன். பிளம் கேக் என்று சொல்வார்கள். பசி இருந்து, நான் விரும்புகிற உணவு கிடைக்காவிட்டால் பசியைத் தீர்த்துக் கொள்ள பிளம் கேக் சாப்பிடுவேன். இப்போது அதையும் சாப்பிடுவதில்லை. வெல்லா இருக்கறவர்கள் வெல்வெட் கேக் சாப்பிடுவாங்க.

பிரசாரத்திற்குப் போகும் இடங்களில் ரோட்டோர கடைகளில் சூடான தோசை சாப்பிடுவது மட்டும்தான் பிடிக்கும். பட்டினியும் பசியோடும் இருந்த ஒரு காலம் இருந்தது. பண்டிகை காலங்களில் இட்லி, தோசை சாப்பிடும் நிலைமை இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை. ஏழை வீட்டில்கூட தோசை, இட்லி வழக்கமான உணவாக மாறிவிட்டது. இன்றைக்கு ஏழைகள் என்று யாரும் இல்லை. அந்தப் பெண்மணியின் ஸ்டேட்டஸில் ஒரு பணக்காரத்தனம் இருக்கிறது. இதற்கும் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏழை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கம் அ.தி.மு.க. விளிம்புநிலை மக்களுக்காகத்தான் அம்மா உழைக்கிறார். ஏதோ ஒரு கட்சிக்காரர் வெளியிடும் பதிவுகளையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்றார் கொதிப்போடு. 

வெல்வெட் கேக் சர்ச்சையின் மூலம் அ.தி.மு.க பணக்கார்களின் கட்சி என்ற விவாதம் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.
 

மருத்துவக் கழிவுகள் அபாயம்: இன்னும் விழித்துக்கொள்ளாத தமிழகம்!

'சுத்தமான இந்தியா' என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி,  அதற்கான விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்து வருகிறது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என பார்த்தால் பதில் என்னவோ பூஜ்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாடு மட்டுமல்ல உலகமே குப்பை காடாகத்தான் மாறி வருகிறது.

இந்த அபாயகர சூழலில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் எப்படி கையாளப்படுகிறது மற்றும்  திறந்தவெளிப் பகுதிகளில் கொட்டப்படும் இந்த கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பார்வை இது...

மருத்துவ வசதிகளை பொருத்த மட்டில் தமிழகம், முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் 1,158 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 304 அரசு மருத்துவமனைகளும், 854 தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.  இது தவிர 1800 அரசு ஆரம்ப சுகாதார மையங்களும், பதிவு பெறாத நூற்றுக்கணக்கான தனியார் கிளினிக்குகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளின் எடை அளவிட முடியாதது. சென்னையில் உள்ள 27 மருத்துவமனைகளில் இருந்து மட்டும் தினமும் 1949 கிலோ மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இவ்வாறு வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது,  எங்கு கொண்டு சேமிக்கப்படுகிறது, சேமிக்கப்பட்ட கழிவுகளை எப்படி அழிக்கிறார்கள்...? என பார்க்கலாம்.
பொதுவாக மருத்துவமனைகள் துவக்கப்படும்போது அதனை மாசு கட்டுப்பாடு நிறுவனத்திடம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அப்படி பதிவு செய்யப்படாத ஏராளமான கிளினிக்குகள் இன்றும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளான சிரிஞ்சுகள், நீடில்கள், கட்டுப்போடும் துணிகள், பஞ்சுகள் ஆகியவற்றை மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் தினமும் சேகரிக்க வேண்டும். 

அவற்றை மக்களால் பயன்படுத்தப்படாத இடத்தில் வைத்து எரித்துவிட வேண்டும். இதே போல் தனியார் மருத்துவமனை நடத்துபவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தில் (Indian Medical Association IMA) பதிவு செய்து கொண்டால், அவர்கள் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இதன்படி ஒவ்வொரு கழிவுக்கும் ஒரு தனிக் கூடை வழங்கப்பட்டு சேகரிக்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள்,  மருத்துவ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கொட்டி அழிக்கப்படும்.

இவையெல்லாம் மாநகராட்சிகள், வளர்ச்சி அடைந்த சில நகராட்சிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள். அதே நேரத்தில் சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த முறை செயல்படுவதில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கிளினிக்குகளில் சேரும் மருத்துவக் கழிவுகள் பொதுவான குப்பைகளுடனே கொட்டப்படுகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பேசிய தேனி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மைய ஒருங்கிணைப்பாளர் மோகன்,  "சமீப காலங்களாக  தேனி மாவட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளும் மக்கள் நடமாட்டம் இல்லா நேரங்களில் கொட்டப்படுகின்றன. 

கோம்பை பகுதியில் உள்ள தனியாரின் நிலங்களை குத்தகைக்கு பெற்று, அங்கு கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்களும் பரவுகிறது. குமுளி வழியாக கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வரும் வழியில் 2 செக் போஸ்டுகள் உள்ளன. இவர்கள் நினைத்தால் இந்த வாகனங்களை தடுத்து திருப்பி விடலாம். 

ஆனால் அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாக எரிக்காமல், மண்ணில் புதைத்து விடுகிறார்கள். உள்ளூர் மக்கள் இதை தடுக்க முயன்றால் போலீஸார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் மனிதக் கழிவுகளும் முல்லை பெரியாறு அணைப்பகுதிகளில் கொட்டப்படுகின்றன. 

மேலும் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கைகள் ஆகியன தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் கால்வாய்களில் துவைக்கிறார்கள். இதனால் மாசு படிந்த, நோய்களை உருவாக்கும் தண்ணீரை குடிக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம்.

அரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்து மலை பகுதிகளில் மருத்துவ, மனித கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று கேரளாவில் விற்கப்படும் இளநீர் குறும்பைகளை கூட அங்கு கொட்ட முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் நம் மக்களோ இதில் சிரத்தை இன்றி உள்ளார்கள்’’ என்றார்.


தீ விபத்தை தவிர்க்க பகலில் சமைக்காதீர்கள்... பீகார் அரசு வினோத உத்தரவு!

 பீகார் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுக்க, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சமைக்கவோ, யாகங்கள் செய்யவோ, மாநில அரசு தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயல்பைக்காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தகிக்கும் வெயிலுக்கு பீகாரில் கடந்த இருவாரங்களில் மட்டும் 66 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அதேபோல், 1,200க்கும் மேற்பட்ட விலங்குகளும் பலியாகியுள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு வினோத தீர்வை பீகார் அரசு கண்டறிந்துள்ளது.

அதற்காக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பகல் நேரங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் சமைக்க கூடாது என்பதாகும். அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கோயில் மற்றும் எந்த வழிபாட்டுக்காகவும், யாகங்கள் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த விதியை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடும் வெப்பத்தோடு பலத்த காற்றும் வீசுவதால், சமையல் செய்வதற்காக பயன்படுத்தும் தீ, குடிசைப்பகுதிகளுக்கு பரவி பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் இத்தகைய தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், பெகுசாரி மாவட்டத்தில் 300 குடிசைகள் தீ விபத்தில் சிக்கியது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பதை பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்தான் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநில அரசின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.



நீ என் டம்மி வேட்பாளர் இல்லை! - மனைவியை கலாய்த்த தங்கம் தென்னரசு

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு இந்த தேர்தலில் மீண்டும் 5வது முறையாக திருச்சுழி தொகுதியில் போட்டியிடுகிறார். தனது சொந்த ஊரான மல்லாங்கிணற்றில் தனது வீட்டில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்ட அவருக்கு அவரது தாயார் ராஜாமணியம்மாள் விபூதி பூசி ஆசி வழங்கினார். அவரது மனைவி மணிமேகலை மற்றும் உறவினர்கள் தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

அப்போது, அண்ணாச்சி (கேகேஎஸ்எஸ்ஆர்) அவரது மனைவியை டம்மி வேட்பாளரா போட்டு இருக்கிறார். ஆனா, உன்ன நான் டம்பி வேட்பாளரா போட மாட்டேன். ஏனா, வெயில் அதிகமா அடிக்கிறதனால என்று சொல்ல, மனைவி குபீரென சிரித்ததோடு, கணவருக்கு நன்றி கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் அமைச்சரும், தனது தந்தையுமான தங்கப்பாண்டியனின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்ற தங்கம் தென்னரசு திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான தியாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே மீண்டும் 6வது முறையாக திமுக ஆட்சி அமைப்பதும் தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவதும் உறுதி" என்றார். பிறகு தனது முதல்கட்ட பிரசாரத்தை திருச்சுழியில் தொடங்கி வைத்தார்.



அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 3 வாரம் தான்! -டெட்லைன் வைக்கும் கருணாநிதி

இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஜெயலலிதா ஆள்வார், 3 வாரம் காலம் தான் அவர்கள் ஆள்வதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார்.

தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 15 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும்போது, ''திருச்சியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை நான் காண்கிறேன். திருச்சியும், சென்னையும் பெரும் வெள்ளத்தை கண்டு பழகிவிட்டது. இன்றைக்கு திருச்சியில் ஏற்பட்டுள்ள மக்கள் வெள்ளம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியால் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம். இந்த வெள்ளத்தில் நீந்தி கரை சேர வந்திருக்கும் உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கேற்ப நீங்கள் பெருவாரியாக இங்கே குழுமி இருப்பதை பார்க்கும்போது, உங்களைவிட்டு செல்ல மனமில்லை. மாலையில் இருந்து காத்திருந்து, காத்திருந்து உங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் கூடியிருக்கிறீர்கள். இதை நான் வாக்கு கேட்டு வந்திருப்பதால் அல்ல, இதற்கு பிறகு தான் என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்பதும் அல்ல, எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எப்போதோ தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்.

அந்த முடிவை செயல்படுத்தி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திருச்சியில் நம்பிக்கையுடன் தான் பேசுகிறேன். திருச்சி என்னை ஏமாற்றாது. திருச்சி யாரையும் ஏமாற்றாது. இந்த திருச்சியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த நம்பிக்கை தென் பகுதி முழுமைக்கும் தான். தி.மு.க.வும், காங்கிரசும் இந்த தேர்தலிலே கூட்டணி சேர்ந்து இருப்பது நம்முடைய மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காக தான். நாம் நிச்சயமாக வெற்றி பெற போகிறோம் என்பதை தயவு செய்து உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


இப்போது நம்முடைய கடமையை மறந்து விட்டால், எதிர்காலம் இருள்மயம் ஆகிவிடும். 6-வது முறையாக முதலமைச்சராக வர நீங்கள் வாழ்த்துகிறீர்கள். இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர், மக்களை பார்ப்பதே பாவம் என்று கருதுகின்ற முதலமைச்சர். இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் தான் கொண்ட கொள்கை, தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று சாதிக்க கூடிய முதலமைச்சர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாளைக்கு ஆள்வார், 3 வாரம் காலம் தான் அவர்கள் ஆள்வதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வரும் ஆட்சி தி.மு.க ஆட்சியாக இருக்கும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க தி.மு.க. கூட்டணி தொடர்ந்துள்ள யுத்தத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க நீங்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.


திருச்சி மேற்கு தொகுதியை திரும்ப மீட்பாரா கே.என். நேரு? - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்

வேட்பாளர்:  கே. என். நேரு, திமுக
சிறப்புகள்  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்

தொகுதி :    திருச்சி மேற்கு
ராஜீவ் காந்தியை கவர்ந்த நேருவின் அரசியல் பயணம்


லால்குடி தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளிய நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. ஏற்கெனவே லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறையும், திருச்சி மேற்கு (அப்போது திருச்சி-2) சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஒரு முறையும் வெற்றி  பெற்றவர்.  விவசாயக் குடும்பம். அப்பா நாராயண ரெட்டியார்.  பி.யூ.சி., வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியலில் இறங்கினார்.
புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று, அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது. அன்று ஆரம்பித்த அரசியல் பயணம்,  தற்போது வரை தொடர்கிறது. இவருக்கு மனைவி சாந்தா, மகன் அருண், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக திருச்சி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர், 1989-91 வரை தமிழக மின்சாரதுறை அமைச்சர், பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,1996-2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், கடந்த 2006-2011 வரை போக்குவரத்து துறை அமைச்சர் என பலமிக்க பதவிகளில் இருந்தவர், இப்போது  திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும், அடுத்து நடந்த இடைத்தேர்தலிலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் நேரு.

விவசாயக் குடும்பம். தேசம் அறிந்த தலைவரான ஜவஹர்லால் நேருவைப்போல வர வேண்டும் என்பதற்காக நேரு என்று பெயரை வைத்தார் தந்தை.  மத்திய அரசில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து நகர்பாலிகா என்று ஏராளமான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திருப்பிவிட்ட காலகட்டம் அது.

பிரதமரை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு நேருவுக்குக் கிடைத்தது. “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லி, பிரதமரின் கவனத்தைக் கவர்ந்த நேரு, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்தல். எம்.எல்.ஏ. ஆசை துளிர்த்தது. அப்போது, திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் செல்வராஜ். (இன்றைய வனத் துறை அமைச்சர்). அவரே ‘ஓனர்’ என்று தீனதயாளன் ரெட்டியார் என்பவரை அழைப்பார். அந்த ரெட்டியாரை நேரு பிடித்தார். ‘ஓனர்’ சொன்னதற்குப் பிறகு மறுக்க முடியாது என்பதால், லால்குடி தொகுதியை நேருவுக்குத் தாரை வார்த்தார் செல்வராஜ். சொந்த செல்வாக்கும் சாதி வாக்காளர்களின் உதவியும் நேருவை வெல்லவைத்தது.

நல்ல காலம் நேருவுக்கு ஆரம்பித்தது. அமைச்சர் பதவியைப் பங்கிடும் சதுரங்கத்தில் சத்தம் இல்லாமல் நேரு நுழைகிறார்.
தேடி வந்த அமைச்சர் பதவி
திருச்சி மாவட்டத்தில் செல்வாக்கான செல்வராஜ், முசிறி தொகுதியில் தோற்கிறார். அவருக்கு அடுத்த செல்வாக்கான மலர்மன்னனுக்கு மந்திரி பதவி தரக் கூடாது என்று கருணாநிதியின் இளமைக் கால நண்பர் அன்பில் தர்மலிங்கம் தடுக்கிறார். அன்பில் பொய்யாமொழிக்குத் தரலாமா என்று யோசித்தால், முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே எகிறிக்கொண்டு இருந்தது.
அப்படியானால்... என்று தேடியபோது, தெரிந்தவர் நேரு. மின் துறை அமைச்சராக நேரு இணைந்தார்.
வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் பிரிந்தார்கள். நேருவுக்குத் தடையாக இருந்த இரண்டு மலை முகடுகள் தகர்ந்தன. அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம், அவர் தாண்டியாக வேண்டிய கடலை வற்றவைத்தது. ‘நான் யாருக்கும் அடிமை அல்ல’ என்று சொல்லும் ஒரே ஆளாக திருச்சி என்.சிவா மட்டும்தான் இருக்கிறார். உள்ளூர் பாலிடிக்ஸுல் செல்வாக்கு இல்லாதவர் சிவா. திருச்சியில், இரண்டாம் கட்ட ஆட்களாக வலம் வரும் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் ஆகிய மூவரும், நேரு காரின் பின் இருக்கைத் தம்பிகளாக மாறினார்கள்.

ஒருகட்டத்தில், அழகிரி ஸ்டாலின் ஆகிய இரட்டைக் குதிரைகளைத் திருப்திப்படுத்த முடியாமல் நேரு திணறிவந்தார். தனது தம்பி ராமஜெயத்தை மதுரைக்கு  தூதுவராக அனுப்பிவிட்டு, ஸ்டாலின் சானலை மட்டும் நேரு கவனித்துக்கொண்டார்.
நேரு என்றால் கருணாநிதிக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட ‘கலைஞர் அறிவாலயம்‘. திறப்பு விழா ரிப்பனை வெட்ட, கருணாநிதி கையில் தரப்பட்டது தங்கக் கத்தரிக்கோல். ஆனால், அது வெட்டவில்லை. இரும்புக் கத்தரிக்கோலைக் கேட்டு வாங்கினார் கருணாநிதி. அது வெட்டியது. “ஏழைகளுக்காகக் கட்டும் மாளிகையில் இரும்புக் கத்திரிக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்“ என்றார் கருணாநிதி. அந்த அளவுக்குச் செல்வம் பெருகிய குடும்பமாக இன்றைக்கு நேரு வளர்ந்துவிட்டார். அவருக்கு இரண்டு கைகளாக இருந்தவர்கள் அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.
ப்ளஸ்
யார் வேண்டுமானாலும், எளிதில் தொடர்புகொள்ளலாம். பிரச்னைகள் என்றால், காதுகொடுத்து கேட்பார். அடிக்கடி டென்ஷன் ஆனாலும், உடனே கூல் ஆகி எதிரிலிருப்பவரின் பிரச்னையை தீர்த்து வைப்பார்.
மைனஸ்
சட்டென்று வரும் கோபம்தான். ஏற்கனவே இவரின் தம்பி ராமஜெயம் ஏற்படுத்திவிட்டுப்போன நில ஆக்கிரமிப்புகள், கட்டைப் பஞ்சாயத்து விவகாரங்கள் மக்கள் மனதில் இன்னும் மறையாமல் நிற்கின்றன.

எவ்வளவுதான் நேரு அரசியலில் உச்சத்தை தொட்டாலும் தற்போது அவருக்கு இறங்குமுகம்தான். அவரின் அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சர் செல்வராஜ், தற்போது அ.தி.மு.கவுக்கு தாவி விட்டார். முத்திரையர் சமூகத்தில் முக்கியமானவர். அவர் தற்போது நேருவை வீழ்த்தவேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் இறங்கியிருப்பதை கண்டு நேரு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். அதே போல, அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷை தற்போது ஸ்டாலின் தரப்பு,  நேருவுக்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மகேஷுக்கு தி.மு.க-வில் நல்ல எதிர்காலம் தெரிவதால், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த நேருவுக்கு தற்போது பிரச்னைதான்.
தி.மு.க. ஆட்சியை பிடித்தால், மகேஷா... நேருவா? என்கிற விவாதம் வந்தால், ஸ்டாலின் நிச்சயமாக மகேஷைத்தான் ஆதரிப்பார் என்றே தெரிகிறது. அதனால் மகேஷ் ஆதரவாளர்களும், முக்குலத்தோரும் இந்த தேர்தலில் நேருவை ஜெயிக்கவிடக்கூடாது என்றே கருதி காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்களை சரிகட்ட, பிஸினஸ் மூளையான தம்பி ரவியை களம் இறக்கிவிட்டிருக்கிறார் நேரு. கடந்த தேர்தலில் ராமஜெயத்தைப் போல, இந்த தேர்தலில் ரவி. இவர் எப்படி நேருவுக்கு கைகொடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

தொகுதி டிராக் ரெக்கார்ட்: 

எப்போதும் விஐபி தொகுதியாக இருந்த இந்த தொகுதி அடையாளமில்லாமல் இருக்கிறது. அமைச்சர்களாக தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த,  அன்பில் தர்மலிங்கம், நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம்பிச்சை, பரஞ்சோதி என அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் அமைச்சர்களாக வலம் வந்தவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி இது.
'திருச்சி 2' என்ற பெயரில் இருந்த தொகுதிதான் சில தெருக்கள் இடம் மாறியதுடன் 'திருச்சி மேற்கு' என்றாகியிருக்கிறது. தொகுதியைச் சார்ந்த பகுதிகளில் பெரிய மாற்றமில்லை.
திருச்சிராப்பள்ளி தாலுக்கா (பகுதி) , திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரையிலான உறையூர், மத்திய பேருந்துநிலையம், பீமநகர், மருதாண்டாகுறிச்சி, பாத்திமா நகர், தியாகராஜா நகர், பாக்கு பேட்டை, சோழமாநகர், நவாப்தோட்டம், தில்லைநகர் , புத்தூர், உய்யக்கொண்டான் திருமைல, தென்னூர், லெட்சுமிபுரம்,மார்சிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த தொகுதி  முழுவதும் திருச்சி மாநகர்பகுதியை உள்ளடக்கியது.

திருச்சியின் இதயப்பகுதியான தில்லை நகர், புத்தூர், உறையூர் உள்ளிட்டபகுதிகள் இந்த தொகுதியில் உள்ளது, தில்லை நகரில் 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், புத்தூரில் திருச்சி அரசு மருத்துவமனை, மத்திய பேருந்து நிலையம், வணிகவளாகங்கள் என தினமும் வந்துபோகும் முக்கியமான தொகுதியாக திருச்சி மேற்கு தொகுதி உள்ளது. திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.என்.நேரு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் அவற்றை ஆட்சி மாறியதும் அதிமுக தலைமை மறந்துபோனது.
ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட,  கடந்த திமுக ஆட்சிகாலத்தில்  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் கட்டி திறக்கப்பட்டது. இப்படியிருக்க இப்போது, 'இந்த கட்டடடம் கட்டியதில் ஊழல் நடந்திருக்கிறது. கட்டடங்கள் தரமாக கட்டவில்லை' என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் (1957) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம். கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. 1962லும் அவர்தான் இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார்.
1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது என்றாலும், கட்சியிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது முதல் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகத் தொடர்ந்தது. அடுத்து  1989-ல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இங்கு நிலவிய நான்குமுனைப் போட்டியும், ஒரு காலத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் தொகுதியான திருச்சி 2லிருந்து மீண்டும் அன்பில் பொய்யாமொழி வெற்றி பெற வழிவகுத்தது.  அடுத்து 1991 ராஜீவ் அனுதாப அலையில் இந்தத் தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்றியது என்றாலும் 1996 முதல் இங்கே கொடிகட்டிப் பறப்பது என்னவோ திமுகவின் செல்வாக்குதான். இதையொட்டிதான் லால்குடியிலிருந்து கடந்த 2006 ல் தொகுதி மாறிய நேரு, அடுத்தடுத்து  இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த 2006 ம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் கே.என்.நேரு 74, 026 வாக்குகள் பெற,  அதிமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட என்.மரியம்பிச்சை 57, 394 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.  இந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற நேரு அமைச்சரானார்.
கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நேருவை எதிர்த்து வெற்றிபெற்றதற்காகவே அமைச்சராக்கப்பட்டார் மரியம்பிச்சை. அவர் வெற்றிபெற்ற கையோடு சென்னை செல்லும் வழியில் நடந்த கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் நேரு களமிறங்க, அவரை எதிர்த்து  பரஞ்சோதி  அதிமுக சார்பில் போட்டியிட்டார்.  இந்த ஆட்சியின் துவக்கத்தில் நடந்த முதல் இடைத்தேர்தலில்  கே. என்.நேருவை 14,608 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி,  பரஞ்சோதி எம்.எல்.ஏ ஆனார்.  அடுத்து அமைச்சர் வாய்ப்பும் வழங்கப்பட்டது.  அடுத்து சில மாதங்களில் இவர் மீது எழுந்த பாலியல் சர்ச்சைகளால் அமைச்சர் பதவி பறிபோனது. 

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை :

ஆண்           :1,23,373,

பெண்          :1,30,172,

இதர           : 6

மொத்தம் :  2,53,551 வாக்காளர்கள்.

எதிர்த்து போட்டியிடும் மற்ற பிரதான கட்சி வேட்பாளர்கள்:
அதிமுக வேட்பாளர் :  ஆர்.மனோகரன்

தற்போது சட்டமன்ற அரசு தலைமை கொறடாவாக இருக்கும் இவர், திருச்சி  திருவானைகோவில், திருநகரில் வசிக்கிறார். பி.எஸ்.சி வரை படித்துள்ள இவர், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.  ரங்கசாமி நாயுடு என்பவரின் மகனான மனோகரன், சொந்தமாக பிஸ்னஸ் செய்துவந்தார். இவருக்கு  சாந்தி என்கிற மனைவியும் சங்கீதா, கவிதா என்ற இரு மகள்களும், விக்னேஷ், ராகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த  1982 ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், 1986 முதல் 1991வரை ஸ்ரீரங்கம் நகராட்சி உறுப்பினராக இருந்தார். அடுத்து 1988 ல் ஜெ. அணி வட்டச் செயலாளாராக இருந்தவர்,  அந்த வருடம் ஜெ அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டார்.  அடுத்து 1992-2001 வரை திருச்சி  மாவட்ட அம்மா பேரவை செயலாளார், பின்னர் 1996 முதல் 2001 வரை திருச்சி 4வது வார்டு கவுன்சிலர்,  2001 முதல் 2006 வரை ஶ்ரீரங்கம் கோட்டத் தலைவர், அடுத்து 2006 முதல் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,   2009 முதல் திருச்சி மாவட்டக் கழக செயலாளர், கடந்த 5 ஆண்டுகள் சட்டமன்ற அரசு தலைமை கொறடா உள்ளிட்ட பொறுப்புகளில் தொடர்ச்சியாக இருந்தவர். இப்போது மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலில் அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. ஆனால் பின்னர் தொகுதியை மாற்றி, திருச்சி மேற்கு தொகுதியில் களமிறக்கியுள்ளது.

 தேமுதிக வேட்பாளர்: ஜோசப் ஜெரால்டு

இவர் சிட்டிங் கவுன்சிலராகவும், திருச்சி மாநகர மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார். இவர் கணிசமான வாக்குகள் பிரிப்பார்கள் என்கிறார்கள்.
ஃபைனல் பன்ச்
கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்ததால், இழந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் நேரு படை பரிவாரங்களோடு தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்னர் வெற்றி பெற்ற தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்சி தலைமையின் கடுமையான உத்தரவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் மனோகரன். இதனால் போட்டி கடுமையாக உள்ளது.  இரு வேட்பாளர்களும் சம பலத்தில் உள்ளனர் என்பதே தற்போதைய நிலை.