Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளவோ மேல்...!' -கம்யூனிஸ்ட்டுகள் நொந்து போன கதை

மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது,  வைகோவின் அதீத செயல்பாடுகளால் அதன் தலைவர்கள் ரொம்பவே அதிருப்தி அடைந்தனர். 'வைகோவைவிட விஜயகாந்த் எவ்வளோ மேல்' என நொந்து போகும் அளவுக்குத்தான் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. 

மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆறு கட்சிகள் போட்டியிடுவதால், தொகுதிப் பங்கீட்டில் இயல்பாகவே சிக்கல் வரும் என்பதால், கடந்த பத்து நாட்களாகவே தே.மு.தி.கவின் கோயம்பேடு அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர் தலைவர்கள். அங்கேயே உணவு வரவழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் இரண்டு நாட்களாக தொடர்ந்து வைகோ முறுக்கிக் கொண்டிருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், 'வைகோவைவிட விஜயகாந்த் நன்றாகவே பேசுகிறார்' என சொல்ல வைக்கும் அளவுக்குப் பாடாய்படுத்தியிருக்கிறார் வைகோ. 

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் மக்கள் நலக் கூட்டணியின் முன்னணி நிர்வாகி ஒருவர்.

" ம.தி.மு.க போட்டியிடும் 29 தொகுதிகளின் பட்டியலைப் பாருங்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் சி.பி.எம், சி.பி.ஐ, தே.மு.திக உள்ளிட்ட கட்சிகள் பலமாக இருக்கும் பகுதிகள். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியாயத்திற்கு உள்பட்டு வைகோ செயல்பட்டிருக்க வேண்டும். 'எனக்கு ஒதுக்கியே தீர வேண்டும்' என வம்படியாகத் தொகுதியை வாங்கிக் கொண்டார். அவரது எமோஷனல் பாலிடிக்ஸால் தலைவர்கள் கடுப்பில் உள்ளனர். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பு வைகோவுக்கு இருக்கிறது. ஆனால்  இத்தனை ஆண்டுகால அரசியலில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைகோவை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளும் அளவுக்கு   அவர் நடந்து கொண்டார்" என வேதனையோடு தொடங்கினார் அவர். 

தொடர்ந்து, " பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே, 'நான் மூன்று தொகுதிகளில் நிற்கப் போகிறேன்' என்றார். ' கூட்டணியை இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு போகும்போது, ஒருவரே மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது எப்படிச் சரியாகும்?' என தலைவர்கள் கேள்வி எழுப்பியபோது, ' சிங்காநல்லூர், சாத்தூர், கோபிச் செட்டிபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளில் நான் கட்டாயம் நிற்பேன்' என உறுதியாக நின்றார். இந்த மூன்று தொகுதிகளையும் வைகோ கேட்பதில் நியாயமே இல்லை. இதில், முதல் இரண்டு தொகுதிகளும் கம்யூனிஸ்ட்டுகள் வலுவாக இருக்கும் பகுதிகள். கோபி தொகுதி த.மா.கா, தே.மு.தி.கவுக்கு ஆதரவான பகுதி. ஆனாலும், சிங்கை, சாத்தூர் தொகுதியை விடாப்பிடியாகப் பிடுங்கிக் கொண்டார் வைகோ. துறைமுகம், பாளையங்கோட்டை தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் தலைவர்களுக்குள் மனவருத்தம் ஏற்பட்டது. துறைமுகம் தொகுதி என்பது த.மா.காவுக்கு செல்வாக்குள்ள பகுதி. பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட்டுகள் பலமாக இருக்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக வைகோ சாதித்துக் கொண்டார். பல்லடம் தொகுதியைக் கேட்டுப் பெற வேண்டும் என கம்யூனிஸ்ட்டுகள் நினைத்தார்கள். அதையும் வைகோ ஏற்கவில்லை. 

ஒருகட்டத்தில், ' நான் கேட்ட தொகுதிகளைக் கொடுங்கள். இல்லாவிட்டால் வெளியேறுகிறேன்' என முறுக்கி கொண்டதையும் கம்யூனிஸ்ட்டுகள் ரசிக்கவில்லை. அன்று இரவு நான்கு இட்லியை சாப்பிட்டுவிட்டு விடிய விடிய வைகோவிடம் மல்லுக்கட்டினோம். விவாதம் வரும்போதெல்லாம் ரொம்பவே எமோஷனல் ஆனார் வைகோ. இதை எமோஷனல் அண்ட் பிளாக்மெயில் பாலிடிக்ஸ் என்றுகூடச் சொல்லலாம். அவர் தனக்கு கோவில்பட்டி தொகுதி வேண்டும் என்றார். சி.பி.ஐ கட்சி விட்டுக் கொடுத்தது. பாளையங்கோட்டை வேண்டும் என்றார். சி.பி.எம் கட்சி விட்டுக் கொடுத்தது. தே.மு.தி.கவும்,  த.மா.காவும் பல தொகுதிகளை விட்டுக் கொடுத்தது. இப்படியே விட்டுக் கொடுக்கும்போது, ஒருகட்டத்தில் கூட்டணியின் தலைவர் ஒருவர், ' புரிந்து கொள்ளுங்கள் வைகோ. நீங்கள்தான் ஒருங்கிணைப்பாளர். ரொம்பவே உணர்ச்சிவசப்படாதீர்கள்' என்றார். அதை அவரும் ஒத்துக் கொண்டார். 'மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தபிறகுதான் நான் பக்குவப்படுகிறேன்' என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், அவரது பிடிவாதம் தளரவில்லை. 'அரசியல்தான் முக்கியம். அணிதான் முக்கியம்' என பல வகைகளில் அவருக்கு புரிய வைக்க வேண்டியிருந்தது. 

உள்ளே நடந்த பல விஷயங்களைச் சொன்னால் மிகப் பெரிய தகராறு வெடிக்கும். அதைச் சொல்வது கண்ணியமாக இருக்காது என நினைக்கிறோம். மன்னார்குடி தொகுதியை த.மா.காவுக்குக் கேட்டார் ஜி.கே.வாசன். வைகோ விட்டுக் கொடுக்கவில்லை. தே.மு.தி.கவின் சிட்டிங் தொகுதியான பேராவூரணியை சி.பி.ஐ கட்சிக்காக விட்டுக் கொடுத்தார் சுதீஷ். பலவிதமான அட்ஜஸ்ட்மெண்டுகளைச் செய்ததால்தான் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இல்லாவிட்டால், தேர்தல் முடிந்தும் பேசிக் கொண்டுதான் இருந்திருப்போம். அவர் நிற்கும் தொகுதிப் பட்டியலைப் பார்த்தாலே, அவர் எந்தளவுக்கு பிடிவாதமாக வாங்கினார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தன்னுடைய அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நலக் கூட்டணியின் உச்சகட்ட வேண்டுகோளாக இருக்கிறது" என ஆதங்கத்தோடு முடித்தார் அவர். 

தேர்தல் முடிவதற்குள் வைகோவிடம் தொடரும் இந்த உணர்ச்சி வயப்படும்போக்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறது மக்கள் நலக் கூட்டணி? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. 

No comments:

Post a Comment