Monetize Your Website or Blog

Thursday, 28 April 2016

கூட்டணி கட்சியினரே பணம் கேட்டால் எப்படி? -வைகோவின் நெக்ஸ்ட் ஆவேசம்!

தேர்தல் பணிகளுக்காக நம் கூட்டணியில் உள்ள சில கட்சியினரே செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் எப்படி என கோவையில் வைகோ பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று (27-ம் தேதி) கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டபோது, ''இந்த தேர்தலில் கோடான கோடி பணத்தை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று நூதனமான முறையில் தரப்போகிறது.

இந்த நேரத்தில், இந்த பண வெள்ளத்தை எதிர்த்து நாம் வெல்ல முடியுமா என்ற கேள்வி ஊடகங்களில், பத்திரிகைகளில் முன்வைக்கப்பட்டு வருகிறது. நாம் வெல்ல முடியாது என்றும், நமக்கு வாய்ப்பில்லை என்றும், இன்னும் நம்மை அறவே கணக்கில் எடுத்து கொள்ளாத வாதங்கள் திட்டமிட்டு, சில ஏற்பாடுகளின் அடிப்படையில் தந்து கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் யாரால் வெல்ல முடியும் என்றால், என்னைப் போன்றவர்களின் பேச்சால் மட்டும் அல்ல.

எந்த கட்சியிலும் இல்லாத இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகளால் தான் இது முடியும். கோவையில் நான் வேட்பாளர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, 3, 4 வயது குழந்தைகள், நீங்கள் ஏன் போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பினார்கள். என்னிடம் பணமில்லை அதனால் போட்டியிடவில்லை என சொன்னேன். குழந்தைகள் கூட அரசியல் பேசுகிறார்கள்.

இந்த இளம் பிள்ளைகள் நினைத்தால் நிச்சயம் நம்மை வெற்றி பெற வைக்கலாம். இந்த  கூட்டம், ஆரவாரம், கோஷம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நமக்கு வெற்றியை தந்துவிடாது. இந்த இளம் தலைமுறை, இந்த முறை முடிவெடுத்தால் மாற்றத்தை கொண்டு வரலாம். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். பேய் மழையில் தமிழகத்தை  காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். தமிழகத்தையே காப்பாற்ற போகிறவர்களும் அவர்கள் தான்.

ஊழலுக்கு இரு கட்சிகளும் அடையாளம். மதுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. அதனால் நாட்டை பாழாக்குபவர் ஜெயலலிதா. ஊழலில்லாத அரசு, மதுவில்லாத அரசை நாங்கள் கொண்டு வருவோம். மாணவர்கள் கல்விக்கடனை அரசு ஏற்றுக்கொள்ளும். பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை நிதியுதவி வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் தரமிகுந்த மருத்துவமனைகள் ஆக்கப்படும். இந்த தேர்தலில் நீங்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.


தேர்தல் பணிகளுக்காக நம் கூட்டணியில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல இடங்களில் பூத் செலவுக்கு முதல் சுற்றில் 15 ஆயிரம் வேண்டும். 2வது சுற்றி; 15 ஆயிரம் வேண்டும். 3வது சுற்றில் 15 ஆயிரம்  வேண்டும் என லட்சக்கணக்கான பணத்திற்கு கணக்கு கொடுக்கிறார்கள். கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் பூத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் கொடுப்பார்கள். அவர்களோடு கூட்டணி வைத்திருந்த அந்த பாவத்தின் காரணமாக நம்மவர்கள் சிலருக்கு அந்த நோய் வந்திருக்கிறது.

நம் வேட்பாளரிடம் கேட்கிறார்கள், வேட்பாளர்களிடம் எதற்காக கேட்கிறீர்கள். நம் வேட்பாளர் ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். அதை வைத்து எப்படி வேலை செய்வது என கூட்டணியில் உள்ள சில கட்சியினர் கேட்கிறார்கள். நான் பகிரங்கமாக சொல்லி விடுகிறேன். பணம் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது. கூட்டணி கட்சித் தொண்டர்களே பணம் கேட்டால் எப்படி..? யாருக்கு வருத்தமாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. 234 தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன். பணம் 10 ஆயிரம் எதுக்கு? பாதி பேர் தண்ணி அடிக்க. பணம் கொடுக்க மாட்டோம்" என்று கண்டிப்பாக பேசினார்.

No comments:

Post a Comment