Monetize Your Website or Blog

Tuesday, 19 April 2016

அவர்களே ஆளும்போது, கேப்டனுக்கு என்ன குறைச்சல்? -பிரேமலதாவின் குபீர் கணக்கு!

க்கள் பணத்தில் கை வைப்பவர்களுக்கு தமிழகத்தை ஆள தகுதி இருக்கும்போது, மக்களுக்காக சொந்த காசை செலவழிக்கும் கேப்டனுக்கு ஆள தகுதி இல்லையா? என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற தே.மு.தி.க.-மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை சட்டமன்ற தொகுதிகளில் ம.தி.மு.க மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். ராமநாதபுரத்தில் நடந்த பிரசாரத்தில், தொகுதி வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்து பேசிய பிரேமலதா, ''ராமேஸ்வரத்தில் பிறந்து நாட்டிற்கே பெருமை தேடி தந்த டாக்டர் அப்துல்கலாம் மறைந்தபோது உலகமே ராமேஸ்வரத்தை நோக்கி வந்தது.


பிரதமர், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என அனைவரும் அவரது இறுதி சடங்கில் பங்கேற்றனர். அவரது மறைவு செய்தியை கேட்டது முதல், கேப்டன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தார். அது மட்டுமல்லாமல் ராமேஸ்வரத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து கலாமிற்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், கொடநாட்டிற்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிந்த ஜெயலலிதாவிற்கு கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்க ராமேஸ்வரத்திற்கு வர முடியவில்லை.

தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து கொண்டு உலகின் சிறந்த மனிதராக விளங்கிய கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராததன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருத்த அவமானத்தை தேடிதந்துவிட்டார் ஜெயலலிதா. இவர்தான் இப்படி என்றால் கலைஞரும்கூட வரவில்லை. ஸ்டாலின் மட்டும் சிறிது நேரம் வந்துவிட்டு சென்று விட்டார். ஒரு மனிதனின் நல்ல நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால் இறப்பில் நிச்சயம் பங்கேற்க வேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காத இவர்கள் மனித நேயம் இல்லாதவர்கள்.

நாங்கள் எல்லா மதத்தினரையும் மதிப்பவர்கள். சாதி, மதம், மொழி பார்க்காதவர்கள். இதன் மூலம் சண்டை சச்சரவு இல்லாத தமிழகத்தை உருவாக்க நினைக்கிறோம். அதற்கு நல்ல மனிதரை தமிழ்நாட்டின் முதல்வராக நீங்கள் ஆக்க வேண்டும். கேப்டனுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்க தெரியும். அவருக்கு மக்களின் முன் நடிக்க தெரியாது. ராமநாபுரம் மாவட்டம் இன்னும் வறட்சி மாவட்டமாகவே உள்ளது. நல்ல ரோடு, குடிநீர், மருத்துவ வசதி எதுவும் இந்த ஆட்சியாளர்களால் செய்து தரப்படவில்லை.

ஆனால், தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா, தன்னை தாய் என்கிறார். எந்த தாயாவது தன் பிள்ளைகளை குடி குடி என சொல்வாரா? அதைதான் இவர் செய்து கொண்டிருக்கிறார். மீனவர்கள் பிரச்னைக்கு காராணமாக இருக்கும் கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது, தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றிற்கு காரணம் காங்கிரஸும் தி.மு.க.வும் தான். முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவோ, மீனவர்களை மீட்க பிரதமருக்கு கடிதம் எழுதுவதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார். அதுவும் யாரோ எழுதி கொடுக்க இவர் கையெழுத்து மட்டும் போடுவார். போலி அரசியல் செய்யும் இந்த 2 தலைவர்களையும் தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டும்.

கேப்டன் அமைத்துள்ள கூட்டணி சுயநலத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழகத்தின் நலன் மற்றும் தொண்டர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் வைகோ, திருமாவளவன் எம்.பி.க்களாக இருந்துள்ளனர். அண்ணன் வாசன் அமைச்சராக இருந்திருக்கிறார். இவர்கள் தவிர கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணனும் முத்தரசனும் உள்ளனர். இவர்களின் யார் மீதாவது ஒரு ஊழல் குற்றசாட்டு உண்டா? இவர்கள் யாராவது தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்களா? மக்கள் பணத்தில் கை வைத்திருக்கிறார்களா? மக்கள் காசை திருடுபவர்கள் தமிழகத்தை ஆள தகுதி இருக்கும்போது மக்களுக்காக சொந்த காசை செலவழிக்கும் கேப்டனுக்கு ஆள தகுதி இல்லையா?


நாங்கள் பதவியேற்றவுடன் நதிகளை இணைப்போம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ‘செல்லம்மாள் பாரதி’ திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தி வைப்போம். தாங்களாகவே திருமணம் செய்துகொள்ள விரும்பும் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வட்டியில்ல கடன் தருவோம். மீனவ சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற உரிய நடவடிக்கை எடுப்போம். ராமநாதபுரத்தில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்போம்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் நலன்களை பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம். ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் கேப்டன் மண்வெட்டியுடன் மக்களை சந்திக்க வந்துவிடுவார். மற்றவர்களைபோல் செயல்படாத முதல்வராக இருக்க மாட்டார். எனவே தமிழகத்தின் விஷ செடிகளாக இருக்கும் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஓய்வு கொடுத்து தமிழகத்தை விட்டு அகற்ற தே.மு.தி.க, மக்கள் நல கூட்டணி, த.மா.கா அணிகளுக்கு ஆதரவு தாருங்கள்" என்றார்.

இந்த பிரசார கூட்டங்களில் ம.தி.மு.க வேட்பாளர் ராஜ்குமார் (முதுகுளத்தூர்), தே.மு.தி.க வேட்பாளர்கள் சிங்கை ஜின்னா (ராமநாதபுரம்), மணிமாறன் (திருவாடனை) மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment