Monetize Your Website or Blog

Saturday, 23 April 2016

முதல்வரே...வெயிலுக்கு மக்கள் பலியாக உங்கள் அரசும் காரணம் தெரியுமா?

பூமியின் வெப்பத்தைவிடவும் தலைவர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. அதிகமான மழை, அதிகமான வெயில் என தமிழ்நாட்டின் பருவநிலை சமன்கெட்டுக் கிடக்கிறது. டிசம்பர் மாதத்தின் உச்சகட்ட மழை, ஏப்ரல் மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் என உயிர்ப்பலிகள் நம்மைப் பதற வைக்கிறது.

அடிப்படைக் காரணம். பூமி வெப்பமடைந்து கொண்டே போவது. கார்பன்டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்கள் விண்ணில் அதிகரித்ததன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கடும் வெள்ளம், கடும் வறட்சி, புதிய நோய்கள் எனப் பல்கிப் பெருகுவதற்கும் இதுதான் காரணம். இது நம்மால் ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் இன்றைய கடும் வறட்சிக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது. அண்மையில் பிரான்சில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 'உலக நாடுகள் கார்பன் அளவை குறைக்க வேண்டும்' என்பதுதான் அது. மழைப் பொழிவும் சீராக இல்லை. ஏரிகள், குளங்கள் வற்றிப் போய்விட்டன. இப்போது தமிழ்நாட்டின் தண்ணீர் என்பது முழுக்க முழுக்க நதிகளை நம்பித்தான் இருக்கிறது. குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் தொழிலுக்காகவும் நதிகளை மட்டும் நம்புகிறோம். நமது நதிகளை உருவாக்கும் மிகப் பெரிய அமைப்பு, மேற்கு தொடர்ச்சி மலைகள். இன்னமும் மிச்சமிருக்கும் அந்தக் காடுகள்தான் நம் உயிரைக் காப்பாற்றி வருகின்றன. துரதிஷ்டவசமாக, எந்த அரசுகளும் இந்த மலையைக் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து கான்கிரீட் காடுகளாக அவைகள் உருமாறிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகளையும் நாம் அனுபவிக்கத்தான் போகிறோம். அடுத்த தலைமுறைக்குத் தண்ணீர் வேண்டும் என்ற சிறிய அக்கறைகூட ஆளும் அரசுக்குச் சுத்தமாக இல்லை.
நமது மாநிலத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காடுகள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளன. இவைகள் வரையறுக்கப்பட்டவை என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், வனத்துறைக்கு வெளியில் உள்ள காட்டுப் பரப்பில் உருவாக்கப்படும் கான்கிரீட் காடுகளால், மேற்கு தொடர்ச்சி மலை சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சோகம் இது. இப்போது அந்தத் தேயிலைத் தோட்டங்கள் ரிசார்ட்டுகளாகவும் ஹாலி டே ஹோம்களாகவும் மாற்றப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் தங்களுக்கான ஃபார்ம் ஹவுஸ்கள் நீலகிரியிலும் கொடைக்கானலிலும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
நமது வனப் பரப்புகள் தேயிலைத் தோட்டங்களாக உருமாறியது ஓர்  அழிவு என்றால், ரிசார்ட்டுகளாக மாற்றப்படுவது மிகப் பெரிய பேரழிவு. மனிதனின் பேராசை இயற்கையை நோக்கியே நீள்கிறது. ' சென்னை, அண்ணாசாலையில் விவசாயத்தைப் பெருக்க வேண்டும்' என அரசு கொள்கை முடிவு எடுப்பது, எவ்வளவு அபத்தமோ, அதைப் போலத்தான் நீலகிரியில் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதும். இங்கு சாலையை விரிவாக்கம் செய்வது எப்படி வளர்ச்சியாகும்? இதைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல்கூட ஆளும் அரசுக்கு இல்லை. நீலகிரியின் உயிர்ச்சூழலில் பறவைகள், விலங்குகளுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. காட்டு எருமைக்கோ, கடமானுக்கோ மனிதன் போடும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் தெரியாது. அவைகள் பல நூறு ஆண்டுகளாக, தான் பயன்படுத்தி வந்த வழித்தடத்தின் மனநிலையிலேயே இருக்கும். யானைகளும் அப்படித்தான். பாதைகள் அழிக்கப்படும்போது, வன உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. 

காட்டு உயிரினங்களின் வாழ்விடங்கள், வலசைப் பாதைகளை பட்டா நிலங்களாகப் பிரித்தது அரசு செய்த மாபெரும் தவறு. அவைகளின் வாழ்விடங்களில் உருவாகும் கட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த சட்டங்களும் நம்மிடம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உயிர்ச்சூழல் உருவாக்கத்தில் மிக முக்கிய அங்கம் வகிப்பவை பறவைகள், விலங்குகள், நுண்ணுயிர்கள்தான். மேற்கு தொடர்ச்சி மலையைக் காக்க எந்த கொள்கை முடிவையும் அரசு எடுக்கவில்லை என்பது கூடுதல் சோகம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...மகாராஷ்ட்ராவின் தண்ணீர் பஞ்சம் எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் நிகழலாம். அந்தக் கொடூரத்தை நோக்கித்தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். மலையில் தண்ணீரைப் பாதுகாத்து வைப்பது காடுகள். மலையைவிட்டு தண்ணீர் கீழே இறங்கியதும், வெட்கமில்லாமல் கழிவுநீரைக் கலந்துவிடுகிறோம்.
நகரக் கழிவையும் தொழிற்சாலைக் கழிவையும் நல்ல நீரில் கலக்க வைப்பது எதிர்கால சந்ததியின் மீது அக்கறை இல்லாத போக்குதான். நீலகிரியில் உற்பத்தியாகும் பவானி நதி, மேட்டுப்பாளையத்தில் கால்பதிக்கும்போதே, தொழிற்சாலைக் கழிவுகள் சென்று கலக்கிறது. பவானிசாகர் அணையில் தண்ணீர் நிறமே பச்சையாக மாறிவிட்டது. மேற்கு தமிழகத்தின் வாழ்வாதாரமே பவானிதான். 'பவானி செத்துப் போய்விட்டாள்' என்றால் மேற்குத் தமிழகமே செத்துப் போய்விடும். மேட்டுப்பாளையம், பல்லடம், அன்னூர், அவிநாசி என எந்தப் பகுதியிலும் மக்கள் வாழ முடியாது. அப்படியானால், இதைக் காப்பாற்ற வேண்டிய கடமை தனியொரு மனிதனுக்கும், கடுமையான சட்டங்களைப் போட வேண்டிய கட்டாயம் அரசுக்கும் இருக்கிறது. ஆனால், செய்கிறோமோ? அவர்கள் செய்தார்களா? 

தொழிற்சாலைக் கழிவை சுத்திகரித்து ஆற்றுக்குள் மீண்டும் விட முடியும். மிக எளிதான வேலைதான் இது. ஆனால், யாரும் செய்வதில்லை. மிகப் பெரிய லண்டன் மாநகரத்தின் கழிவுகள்,  சுத்திகரிக்கப்பட்டு தேம்ஸ் நதியில் விடப்படுகிறது என்றால், மேட்டுப்பாளையத்தின் கழிவை நம்மால் தடுக்க முடியாதா? நமது நதிகள் அழுக்கைச் சுமந்து கொண்டு போவதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நாம் மனது வைத்தால் அடையாறு, கூவத்தில் கழிவில்லாமல் நீரை ஓட வைக்க முடியும். மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு கூவம் நதியில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்ற அபிஷேகம் செய்த வரலாறு நமக்கு இருக்கிறது. அதுவும் ஒரு காலத்தில் நதிதான். அடையாறு, கூவம், நொய்யல் நதிகளின் பராமரிப்பைக்கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு உயிரோடு ஓடிக் கொண்டிருக்கும் அமராவதி, தாமிரபரணி, பவானியைக் காப்பாற்றும் முயற்சி மிக அவசியமானது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தனி மனிதன் ஒருவனின் முயற்சியால் உருவாக்கப்பட்டது ஈரோடு, காளிங்கராயன் வாய்க்கால். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தைக் கொண்டு செல்லும் மிகப் பெரிய முயற்சி அது. இன்றைக்கு காளிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் கறுப்பாக ஓடுகிறது என்றால், அது யார் செய்த தவறு? தண்ணீர் மேலாண்மைக்கு நாம் பல்கலைக்கழகம் செல்ல வேண்டியதில்லை. நமது முன்னோர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். வடகிழக்குப் பருவமழை என்பது குறைந்த நாளில் அதிக மழை பெய்யும். இதற்காகத்தான் பல்லாயிரம் குளங்களை, நீர்நிலைகளை நமது முன்னோர்கள் கட்டி,  நீரை சேமித்தார்கள். அவை எல்லாவற்றையும் ஆக்ரமித்ததுதான் நாம் செய்த ஒரே நல்ல காரியம். கோவை மாநகராட்சிக்குட்பட்டு எட்டு குளங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு குளத்தில் நம்மால் கால் வைக்க முடியுமா? 
" மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக்குத் தனிச்சட்டம் இயற்றுவது மிக அவசியமானது. மாதவ் காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகியோரின் பரிந்துரைகளில் தமிழகத்திற்கு ஏற்ற சட்டங்களைக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். தொழிற்சாலைக் கழிவுநீர், நதியில் கலக்காமல் தடுக்கும் செயல்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். எல்லா இடங்களிலும் வரைமுறையில்லாமல் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. அவை வெளியிடும் டயாக்ஸின் போன்ற நச்சுக்களால், தவறே செய்யாத குழந்தைகள்கூட கேன்சர் நோய்க்கு ஆளாகின்றன.
பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு பொறுப்பை வழங்க வேண்டும். 'நமக்கு ஷாம்பு மட்டும்தான் வேண்டும். அவை அடைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் அல்ல' என்பதை நிறுவனங்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இவற்றை முறையாகச் செய்தால் நமது காலத்திலேயே மண், நீர், காற்று ஆகியவை சுத்தமாக மாறும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக, வளர்ச்சியின் பெயரால் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அவினாசி சாலையில் மட்டும் 1200 மரங்கள் அழிக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில் 500 மரங்கள் வெட்டப்பட்டன. இவையெல்லாம் நூறு ஆண்டுகால பழமையான மரங்கள். ஆண்டுதோறும் பல லட்சம் மரங்களை நடுவதாக அரசின் புள்ளிவிபரம் சொல்கிறது. 

மரம் நடுவது மிக எளிது. வளர்ப்பதுதான் மிகக் கடினம். எந்த இடத்திலும் மரம் வளர்ப்புப் பணிகள் நடைபெறுவதில்லை. தனிநபர்கள் சிலரது முயற்சியால்தான் இது நடக்கிறது. பசுமையாக்கல் திட்டத்தை அரசு கண்டுகொள்வதில்லை. அ.தி.மு.க, தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் செயல்திட்டங்களில் தமிழகத்தின் வாழ்வாதாரமான மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பாற்றுவதற்கு எந்த வாக்குறுதிகளும் இல்லை. இது மிகவும் வேதனையானது. தமிழ்நாட்டில் அதிக தண்ணீர் தரும் காவிரி, தென்தமிழகத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி, கோதையாறு, நொய்யல், பவானி போன்றவை மேற்கு தொடர்ச்சி மலையில்தான் உற்பத்தியாகிறது. நமக்குத் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும் கிருஷ்ணா நீரும் மேற்கு தொடர்ச்சி மலையின் கொடைதான். இவற்றையெல்லாம் வெறும் சுற்றுலாத்தலங்களாகப் பார்க்கும் அரசின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும்" என்கிறார் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன்.

வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. உச்சிவெயில் மண்டையைப் பிளப்பதற்கு நாம் செய்த தவறுகள்தான் காரணம் என அறியாமல் தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு கடந்து போகிறோம். நதியை தாயோடு ஒப்பிடும் இரக்கக் குணம் கொண்டதுதான் நமது பாரம்பர்யம். அந்தத் தாயை தினம் தினம் அழுக்காக்கிக் கொண்டிருக்கிறோம். கான்கிரீட் காடுகளை உற்பத்தி செய்து அரசும் பெருமை தேடிக் கொள்கிறது.

இதைப் பற்றிய அக்கறையை ஏற்படுத்தாத எந்த ஓர் அரசுக்கும், எதிர்கால தலைமுறையின் மீது அக்கறை உள்ளது என்று நம்மால் சொல்ல முடியுமா? பூமியை அம்மா என்கிறோம். இதே அம்மா இன்றைக்கு 'இன்டென்சிவ் கேர்' பிரிவில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இதே அம்மாதான் நமது முன்னோர்களுக்கும் அம்மாவாக இருந்தார். வரப்போகும் நமது பிள்ளைகளுக்கும் அம்மாவாக இருக்கப் போகிறாள். அவளைக் காப்பாற்றாமல் நாம் உயிர் வாழ்வது என்பது பயனற்றது. 

இன்று உலக பூமி நாள்


No comments:

Post a Comment