எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு கொண்டிருக் கிறது. கொளுத்தும் வெயிலில் மக்களாகிய நாமே தத்தளிக்கும் போது விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் நிலைமையை சிந்தித்து பார்த்தாலே பரிதாபம்தான் வருகிறது.
மும்பையை சார்ந்த மயூர் காமத் என்பவர், தனியொருவனாக எடுத்த முயற்சியால் வெயில் கொடுமையால் பரிதாபமாக சாக இருந்த நூற்றுக்கணக்கான மீன்கள் மற்றும் ஆமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
இவர் வசித்து வந்த பகுதியில் இருக்கும் ஒரு பழமையான கோவிலில் இருந்த குளம், அதீத வெயில் காரணமாக வறண்டுவிட்டது. வறண்டு வந்த அந்த குளத்தின் அடியில் இருந்த சேற்றில் மீன்களும் ஆமைகளும் தத்தளித்து கொண்டிருப்பதை அறிந்த மயூர், கோவில் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.
இத்தனை வருடங்களில் இந்த வருடம்தான் அந்த குளம் வற்றிப் போயிருக்கிறது. உடனே அந்த குளத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் முயற்சியில் ஈடுபட்டார்.
முதல் நாளே 1000 மீன்கள் மற்றும் 80 ஆமைகளை காப்பாற்றினார். அதில் பெரிய மீன்கள் 50, அரியவகை நீர்வாழ் உயிரினங்கள் 41. இவையெல்லாம் காட்சியகங்களில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினங்கள்.
வலைகளை பயன்படுத்தி மீன்களையும், கைகளால் ஆமைகளையும் காப்பாற்றியுள்ளார். குளத்தில் இருந்த வண்டல் மண்ணும் வற்றி போக, எஞ்சியிருந்த மீன்களை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இவர் தனியாக மீன்களை காப்பாற்றி வருவதை பார்த்து இவரோடு, சில தன்னார்வலர்கள், மீனவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டதால் வேலை மும்முரமாக நடக்கத் தொடங்கியது.

மொத்தமாக 1000 சிறு மீன்கள், 50 பெரிய மீன்கள், 73 இந்திய ஆமைகள் மற்றும் 51 அரிய வகை நீர்வாழ் ஆமைகள் குளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. காப்பாற்றிய உயிரினங்கள், பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டுவிட்டன. சில அரியவகை நீர்வாழ் ஆமைகளை மட்டும் வேறு இடத்தில் விடக் கூடாது என சட்டங்கள் இருப்பதால், மழை பெய்து நீர் வந்தவுடன் மறுபடியும் இதே குளத்தில்விட்டுவிட முடிவெடுத்துள் ளனர். அதுவரை அந்த அரியவகை கடல் ஆமைகள் தன்னார்வலர்களின் கண்காணிப்பில் பாதுகாக்கப்படும்.
இதுபோல வறண்டு கொண்டிருக்கும் மற்ற குளங்களில் வாழும் நீர்வாழ் உயிரினங்களையும் காப்பாற்ற தன்னார்வலர் அணி ஒன்றையும் திரட்டி வருகிறார் மயூர்.
தொடரட்டும் இவரது மகத்தான சேவை !

No comments:
Post a Comment