Monetize Your Website or Blog

Saturday, 16 April 2016

'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். 'களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக முதல்வர் புறக்கணித்துவிடவில்லை' எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் அவர்கள். 

" நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 'தமிழனை தமிழனே ஆள வேண்டும்' என்ற ஒற்றைக் கோஷத்தோடு சீமான் களமிறங்குகிறார்.
அவரது முழக்கம் எடுபடுமா? என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால், இதுவரையிலும் சீமான் முன்னெடுத்த எந்தப் போராட்டத்தையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என எதிர்க் கேள்வி கேட்டார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர்.
அவரே மேலும் தொடர்ந்து கூறுகையில்,  " ஜெயலலிதா தன்னுடைய பிரதான எதிரியாக கருணாநிதியைப் பார்க்கிறார். அடுத்து சீமானைத்தான் பார்க்கிறார். இதற்கு சில உதாரணங்கள் இருக்கின்றன. மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களைப் பிரிப்பார்கள். அதுவும் தனக்கு சாதகமாக இருக்கும் என்று ஜெயலலிதா கணிக்கிறார். அவர்கள் பலத்தை உடைப்பதற்கு ஜெயலலிதா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2006-ம் ஆண்டு புதிய சக்தியாக விஜயகாந்த் வந்ததுதான் தனது தோல்விக்குக் காரணம் என்பதை ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார்.
விஜயகாந்த் எடுத்த 8 சதவீத வாக்குகள்தான் அப்போது அ.தி.மு.க ஆட்சியை இழக்கக் காரணம். 'ஐந்து சீட்டுக்குக்கூட தகுதியில்லாத கட்சி' என்றுதான் விஜயகாந்தைப் பற்றி ஜெயலலிதா வைத்திருந்த மதிப்பீடு. அவை அத்தனையும் பொய்த்துப் போனது. அதனால், இந்தத் தேர்தலில் சீமானை உதாசீனப்படுத்த அவர் தயாராக இல்லை. சீமான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார். சீமானின் கையில் எடுத்த முதல் பிரச்னை, 'தமிழகத்தின் கலைமகன்' என்றொரு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிவாஜி நினைவு நாளில் நடத்த முயற்சித்தார். அதற்கு அ.தி.மு.க அரசு அனுமதியை மறுத்தது. பிறகு பத்து நாள் கழித்து நிகழ்ச்சியை நடத்தினார் சீமான்.
'சிவாஜியை காங்கிரஸ்காரர் என்று அடையாளப்படுத்தாமல், தமிழனின் கலைப் பெருமை' என்று முன்னெடுத்ததன் விளைவுதான், கடற்கரையில் சிவாஜி சிலை அகற்றப்படாமல் இருக்கிறது. 'சிலை அகற்றப்படும்' என உறுதியாக இருந்த ஜெயலலிதா, பின்னாளிள் 'தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதி' என்று சீமான் கிளம்பினால் எதிர்கொள்வது கடினம் என நம்பினார். 'காங்கிரஸ் சிவாஜி' என்பது தமிழர் சிவாஜி என மாறி,  ஒரு மதிப்பு வந்துவிடும் என்பதுதான் காரணம். அடுத்ததாக, திருமலை நாயக்கர் மகால்.  அதனை தமிழர்களின் அவமானச் சின்னம் என்று சொன்னார் சீமான். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லி அந்த சமூகத்து மக்கள் தெருக்களில் திரண்டார்கள். அப்போது கைது செய்திருந்தால் பின்விளைவுகள் ஏற்படும் எனக் கருதி கைது செய்யவில்லை. அதற்கு மாறாக, திருமலைநாயக்கர் நினைவு நாளை அரசு விழாவாகவும் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். மக்களின் கோபத்தைத் தணிக்க இந்த முடிவை எடுத்தார் ஜெயலலிதா. அதேபோல், சீமானின் இன்னொரு வியூகம், தனித் தொகுதியில்  அதிகளவு பெண்களை நிறுத்தியது. இது நுணுக்கமான வியூகம். தாராபுரம், தென்காசி, பரமக்குடி உள்ளிட்ட பெரும்பாலான தனித் தொகுதிகளில் பிரதான கட்சிகள் பெண்களை நிறுத்துவதில்லை. ஆனால், 20 தனித் தொகுதிகளில் பெண்களை நிறுத்தியிருக்கிறார் சீமான்.
இதன் பலத்தை உணர்ந்து,  ஜெயலலிதாவும் 11 தனித் தொகுதிகளில் பெண்களை நிறுத்தியிருக்கிறார். முப்பாட்டன் முருகனின் தைப்பூசத் திருநாளில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், பங்குனி உத்திரத்திற்கு விடுமுறை அளித்தார் ஜெயலலிதா. பங்குனி உத்திரம் இன்னொரு முருகன் திருவிழாதான். சீமான் எந்த ஆயுதத்தை எடுத்தாலும், அதற்கு ஜெயலலிதா தீர்வைச் சொல்கிறார். விஜயகாந்த் கொடுத்த பாடம்தான் சீமானையும் ஜெயலலிதா எதிர்கொள்ள வைக்கிறது. சீமான் போகும் ரூட்டில் தனக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதும் காரணம். ஜெயலலிதாவின் நேரடி எதிரி கருணாநிதிதான். ஆனால், அவ்வப்போது உருவாகும் புதிய சக்தியின் எழுச்சி தன்னை பாதித்துவிடக் கூடாது என அதற்கும் தனியாக அரசியல் செய்கிறார் ஜெயலலிதா.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகளைக் கல்யாணம் செய்தாலும், ஆசி வாங்கப் போக முடியவில்லை சீமானால். அவரை ஊக்குவிக்கவும் ஜெயலலிதா விரும்பவில்லை. திருச்சியில் பொதுக் கூட்டம் போட்டதற்கு சீமான் மீது வழக்குப் போட்டார் ஜெயலலிதா. ஆனால், அவரைக் கைது செய்ய முடிந்ததா? கைது செய்தால் மக்களின் இரக்கம் சீமான் மீது வரும். இது தேவையற்ற செயல் என ஜெயலலிதாவுக்குத் தெரியும். அதனால்தான் நிதானமாகச் செயல்படுகிறார் ஜெயலலிதா" என விளக்கி முடித்தார் அவர். 

'இப்படியொரு தேர்தல் கணக்கு இருக்கிறது என்பது ஜெயலலிதாவுக்குத்  தெரியுமா?' என்ற கேள்வியை அவரிடமே கேட்டு வைத்தோம். 

No comments:

Post a Comment