Monetize Your Website or Blog

Thursday, 21 April 2016

ஜெயலலிதாவின் அனல் பிரசாரத்தில் இன்று இருவர் பலி! இதற்கு ஒரு முடிவே இல்லையா?!

சேலத்தில் இன்று நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயில் காரணமாக இரண்டு பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த 9ம் தேதி சென்னையில் கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தை தொடங்கினார். இந்த கூட்டத்திற்கு லாரிகளில் மக்களை அழைத்து வரும் அதிமுகவினர், அவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டும், தொப்பியும் கொடுக்கின்றனர். ஆனாலும், கூட்டத்திற்கு வருபவர்கள் வெயில் கொடுமையால் தவித்து வருகின்றனர்.

கடந்த 11-ம் தேதி விருத்தாசலத்தில் பிற்பகல் 3 மணி அளவில் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. அப்போது, லாரிகளில் அழைத்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கடும் வெயிலின் கொடுமையால் தவித்தனர். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இரண்டு பேர் உயிரிழந்தனர். முதல்வரின் இந்த மதிய நேர பிரசாரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாலையில் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பிரசாரம் கொளுத்தும் வெயிலிலேயே நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற பிரசாரம் மட்டும் மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஆனாலும் அந்த கூட்டத்திற்கும் மதியம் முதலே மக்கள் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டார்கள். 

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டனர். அடிக்கும் வெயிலில் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டே உருகி போய்விட்டதாம். அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.


இந்த வெயிலின் கொடுமையை தாக்குபிடிக்க முடியாமல் கூட்டத்திற்கு வந்திருந்த குப்பான்டபாளையம் கிராமத்தை சேர்ந்த பச்சியண்ணன் என்ற 53 வயதுடையவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி (63) என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சேலத்தில் முதல்வர் பிரசார கூட்டத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது


No comments:

Post a Comment